Skip to main content

அடல்ட் காமெடி ஜானரில் ஜெயித்தாரா வெங்கட் பிரபு..? மன்மத லீலை - விமர்சனம்

Published on 02/04/2022 | Edited on 02/04/2022

 

venkat prabhu ashok selvan manmadha leelai movie review

 

மாநாடு படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பின் வெளியாகியுள்ள வெங்கட் பிரபு படம். அதுவும் தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் அடல்ட் காமெடி படம். ஜாலியான டிரைலர், ஸ்னீக் பீக் ஆகியவற்றோடு பல எதிர்பார்ப்புகளோடு வெளியாகியுள்ள மன்மதலீலை படம் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ததா...? 

 

2010ஆம் ஆண்டு கல்லூரி படிக்கும் அசோக் செல்வன் இணையதளத்தில் சம்யுக்தா ஹெக்டேவுடன் பழக்கம் ஆகிறார். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி சம்யுக்தா வீட்டு கட்டில் வரை செல்கிறது. அங்கே அசோக் செல்வனும் சம்யுக்தா ஹெக்டேவும் நெருக்கமாக இருக்கும் நேரத்தில் சம்யுக்தாவின் அப்பா ஜெயப்பிரகாஷ் வீட்டிற்கு வந்து விடுகிறார். பிறகு ஜெயப்பிரகாஷிடமிருந்து இவர்கள் இருவரும் தப்பித்தார்களா, இல்லையா? 

 

அதேசமயம் 2020ஆம் ஆண்டு ஃபேஷன் டிசைனராக இருக்கும் அசோக் செல்வன் தனியாக ஒரு வீட்டில் வசித்து வருகிறார். அந்த நேரம் அங்கு அட்ரஸ் மாறி தவறுதலாக மழையில் நனைந்து வரும் ரியா சுமனை வீட்டுக்குள் அழைத்து உதவி செய்கிறார் அசோக் செல்வன். பின்னர் இருவரும் நெருக்கமாகின்றனர். அப்போது வெளியே சென்ற அசோக் செல்வன் மனைவி ஸ்மிருதி வெங்கட் வீட்டிற்கு வர இவரிடமிருந்து அசோக் செல்வனும் ரியா சுமனும் தப்பித்தார்களா, இல்லையா? என்பதை நான் லீனியர் பாணியில் கலகலப்பாகச் சொல்லியிருக்கிறது இப்படம்.

 

கரோனா பரவல் காரணமாக மாநாடு படப்பிடிப்பு தள்ளிப் போன சமயத்தில் கிடைத்த கேப்பில் கடா வெட்டும் முயற்சியாக இப்படத்தை எடுத்துள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு. ஒரு சிறிய கதையை எடுத்துக்கொண்டு அதை கிளைமாக்ஸ் வரை மிக யதார்த்தமாகவும் விறுவிறுப்பாகவும் எடுத்து ரசிக்க வைத்த வெங்கட் பிரபு கிளைமேக்ஸ் காட்சிகளை மட்டும் தன் பாணியில் அதிரடி கலந்த மாஸ் பாணியில் முடித்துள்ளார். முதல் பாதி முழுவதும் அசோக் செல்வன் மற்றும் நாயகிகள் மாறி மாறி பேசிக் கொள்ளும்படி காட்சிகளை உருவாக்கி அதை ரசிக்கும்படி கொடுத்த இயக்குநர், அதை இன்னமும் சுவாரசியமாகக் காட்டவும் முயன்றிருக்கலாம். 

 

இரண்டாம் பாதியில் சில முடிச்சுகளை அவிழ்த்து ஆங்காங்கே சில டுவிஸ்ட்களை வைத்து திரைக்கதையைச் சுவாரஸ்யமாகக் கொண்டு சென்ற இயக்குநர், கிளைமாக்ஸ் காட்சியை இன்னும் கூட சிறப்பாகவும் யதார்த்தமாகவும் முடித்திருக்கலாம். கிளைமாக்ஸ் காட்சிகள் என்னதான் மாஸ் கலந்த வெங்கட் பிரபு பாணியில் மங்காத்தா ஸ்டைலில் ரசிக்கும்படி இருந்தாலும் அவை படத்துடன் ஒன்ற மறுக்கிறது. மற்றபடி நான் லீனியர் பாணியில் இவர் அமைத்த திரைக்கதை ரசிக்கும்படி இருந்து படத்தைக் கரை சேர்த்துள்ளது.

 

விமனைஸராக நடித்திருக்கும் அசோக் செல்வன் தனக்குக் கொடுத்த கதாபாத்திரத்திற்கு எந்த அளவு நியாயம் செய்ய முடியுமோ அந்த அளவு அதைச் சிறப்பாகவும், ரசிக்கும்படியும் செய்து அசத்தியுள்ளார். இவரின் அப்பாவித்தனமான முகபாவனைகள் ரசிக்கும்படி அமைந்து காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளன. குறிப்பாக பெண்களிடம் வழியும் காட்சிகளிலும், அவர்களிடம் நெருக்கம் காட்டும் காட்சிகளிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அந்த கதாபாத்திரமாகவே மாறியுள்ளார். படத்துக்குப் படம் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி குறிப்பிடப்படும் நாயகர்கள் வரிசையில் இணைந்துள்ளார் நடிகர் அசோக் செல்வன்.

 

நாயகி சம்யுக்தா ஹெக்டே தனக்குக் கொடுத்த கதாபாத்திரத்தை போல்டாக செய்து அசத்தியுள்ளார். இன்னொரு நாயகி ரியா சுமன் பார்க்க அழகாக இருக்கிறார். கவர்ச்சியை அள்ளித் தெளித்துள்ளார். மற்றொரு நாயகி ஸ்மிருதி வெங்கட் அசோக் செல்வனுக்கு அன்பான மனைவியாக வருகிறார். தனக்குக் கொடுத்த கதாபாத்திரத்தை நிறைவாகச் செய்துள்ளார். சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள கயல் சந்திரன் சர்ப்ரைஸ் கேரக்டரில் நடித்து ரசிக்க வைக்க முயற்சி செய்துள்ளார்.

 

ஒரு தேர்ந்த இசையமைப்பாளர் போல் இப்படத்திற்குப் பின்னணி இசை அமைத்துள்ளார் இசை பிளே பாய் பிரேம்ஜீ. படத்தில் ஒரே ஒரு பாடல் மட்டும் தான் இருக்கிறது ஆனால் அதுவும் படத்தில் இடம் பெறவில்லை. தமிழமுதன் ஒளிப்பதிவில் படத்தின் இன்டீரியர் காட்சிகள் கலர்ஃபுல்லாக இருந்து ரசிக்க வைத்துள்ளது. 

 

இளைஞர்கள் ரசிக்கும்படி எராட்டிக் திரில்லர் ஜானரில் ஒரு படத்தைக் கொடுத்து அதில் தன் பாணியில் கிளைமாக்ஸ் காட்சியை வைத்து ரசிக்க வைக்க எடுத்த முயற்சியில் வெங்கட் பிரபு ஓரளவு வெற்றியும் கண்டுள்ளார்.

 

மன்மத லீலை - அடல்ட்ஸ் ஒன்லி!

 

 

சார்ந்த செய்திகள்