Skip to main content

"இப்படிச் சொல்வதை நிறுத்திக் கொள்ளுங்கள்!" - பாஜக முதல்வரை எச்சரித்த சத்யராஜ் மகள்!

Published on 19/03/2021 | Edited on 19/03/2021

 

Stop telling us what to wear says divya sathyaraj nutritionist


உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல்வராக சமீபத்தில் பதவியேற்றவர் தீரத் சிங் ராவத். உத்தரகாண்ட் மாநில பாஜகவில் ஏற்பட்ட உட்கட்சிப் பூசலால், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த இவர், மாநில முதல்வரானார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு, உத்தரகாண்ட் மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது, பெண்களின் உடை குறித்து இவர் பேசியது பெரும் சர்ச்சையானது.

 

அந்த நிகழ்ச்சியில், "இன்றைய இளம் தலைமுறையினர் நாகரிகம் என்ற பெயரில் 'கிழிந்த ஜீன்ஸ்' (Ripped Jeans) உடுத்துகின்றனர். இதைப் பெண்கள் சிலரும் பின்பற்றுகின்றனர். இப்படி, பெண்கள் முழங்கால் தெரிய உடை அணிவது, குழந்தைகளுக்கு மோசமான எடுத்துக்காட்டாக மாறிவிடும். இதனால், சமுதாயத்தில் ஏற்படவிருக்கும் விளைவு குறித்து நான் அச்சப்படுகிறேன்" எனக் கூறினார். இவரின் இந்த கருத்து, இந்திய அளவில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. 

 

முதலவர் தீரத் சிங் ராவத்தின் பேச்சுக்கு சமூகவலைதளங்களில் கடுமையான கண்டனங்கள் எழுந்து வருகின்றது. உடை அணிவது அவரவர் விருப்பம் என்றும், உடையை வைத்து ஒருவரை மதிப்பிடக்கூடாது என்றும் முதல்வரின் பேச்சுக்குப் பலரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், உத்தரகாண்ட் முதல்வரின் சர்ச்சை பேச்சுக்கு, பிரபல ஊட்டச்சத்து நிபுணரும் 'மகிழ்மதி' அமைப்பின் நிறுவனருமான திவ்யா சத்யராஜ் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.


அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஷார்ட்ஸ் மற்றும் கிழிந்த ஜீன்ஸுடன் இருக்கும் படங்களைப் பதிவேற்ற வேண்டாம் எனவும் ஒரு நல்ல பெண் அரசியல்வாதி காட்டன் புடவையில்தான் பொதுவெளியில் தோன்றவேண்டும் எனவும் நிறைய பேர் எனக்கு அறிவுரை கூறினார்கள். திரு. தீரத் சிங்கின் பேச்சை, ஒரு பெரியாரிஸ்டாக நான் கடுமையாக எதிர்க்கிறேன். தனக்குப் பிடித்த உடையை அணிவதற்கு, ஒவ்வொரு பெண்ணுக்கும் முழு சுதந்திரம் உள்ளது. நான் பெருமையுடன் 'சூப்பர் டார்ன் ஜீன்ஸை' அணிந்து இருக்கிறேன். நாங்கள் எதை உடுத்தவேண்டும் எனக் கூறுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்" எனப் பதிவிட்டுள்ளார். மேலும், அப்பதிவுடன் ஜீன்ஸ் ஆடை அணிந்து எடுத்துக்கொண்ட தனது புகைப்படங்களையும் அப்லோட் செய்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மனிதாபிமானத்தோடு நடத்த வேண்டும்” - திவ்யா சத்யராஜ் வேண்டுகோள்

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
divya sathyaraj about hospital video

சத்யராஜின் மகளான திவ்யா, ஊட்டச்சத்து நிபுணராக இருந்து வருகிறார். ‘மகிழ்மதி’ என்ற இயக்கத்தின் மூலம், கடந்த 4 வருடங்களாக தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மக்களுக்கு இலவசமாக ஊட்டச்சத்து நிறைந்த உணவை வழங்கி வருகிறார். தொண்டு நிறுவனங்களோடு இணைந்து சேவை செய்யும் இவர், தமிழ்நாட்டைத் தாண்டி மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள மக்களுக்கு உதவி செய்து வருகிறார்.  

இந்த நிலையில் தனியார் மருத்துவமனைகளுக்கு, நோயாளிகளை மனிதாபிமானத்தோடு நடத்த வேண்டும் என வீடியோ வெளியிட்டு கோரிக்கை வைத்துள்ளார். அதில், “இத்தகவல் என்னுடைய மருத்துவ நண்பர்களிடமிருந்து வந்தது தான். சில தனியார் மருத்துவமனைகளில் அந்த மருத்துவமனைக்கு லாபம் வருவதற்காக நோயாளிகளுக்கு தேவையில்லாத ரத்த பரிசோதனை, தேவையில்லாத ஸ்கேன்ஸ், தேவையில்லாத எம்.ஆர்.ஐ, இதையெல்லாம் பண்ண வைக்கிறாங்க. ஒரு நோயாளி குணமானதுக்கு அப்புறமும் ஒரு ரெண்டு நாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அதுக்கப்புறம் டிஸ்சார்ஜ் பண்றாங்க. 

தனியார் மருத்துவமனைக்கு போனால் நோய் குணமாகும் என்ற நம்பிக்கையை விட பணம் காலியாகும் என்ற பயம் தான் நோயாளிகளுக்கு அதிகமா இருக்கு. எங்க அமைப்பு மூலமா சில நோயாளிகளுக்கு உதவி செஞ்சாலும், எல்லா நோயாளிகளுக்கும் உதவி செய்வது யதார்த்தத்தில் முடியாத ஒரு விஷயம். நோயாளிகளை வருவாய் உருவாக்கும் எந்திரமாக அணுகக்கூடாது. அவர்கள் அப்படி கிடையாது. தனியார் மருத்துவமனை வைத்து இருப்பவர்கள் நோயாளிகளை மனிதாபிமானத்தோடு நடத்த வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்” என பேசியுள்ளார்.

Next Story

ராமர் கோவில் திறப்பு விழா; உத்தரகாண்ட் அரசு உத்தரவு

Published on 13/01/2024 | Edited on 13/01/2024
Inauguration of Ram Temple; Uttarakhand Govt

உத்தரப் பிரதேசத்தில் உள்ள  அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானம் நடைபெற்று வருகிறது. இது தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்தக் கோயில் இம்மாதம் 22ம் தேதி திறக்கப்படவிருக்கிறது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், கோயில் அறக்கட்டளை சார்பில் சமீபத்தில் மொத்தம் 7 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. 

அதேபோல், ராமர் கோயில் அமைவதற்கு ஆதரவாக இருந்த பத்திரிகையாளர்களுக்கும், ராமர் கோயிலுக்காகப் பாடுபட்ட 50 கரசேவகர்களின் குடும்பத்தினருக்கும், குறைந்தபட்சம் 50 நாடுகளில் இருந்து தலா ஒரு பிரதிநிதிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விழாவில் பங்கேற்க இந்தியா மற்றும் வெளிநாடுகளில் 7,000க்கும் மேற்பட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி, உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் பல்வேறு ஏற்பாடுகளை அரசு செய்து வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில், அயோத்தியில் மூலவர் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் ஜனவரி 22ம் தேதி மாநிலத்தின் அனைத்து கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும், அன்றைய தினத்தில் மதுபானக் கடைகள் மாநிலத்தில் திறக்கக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டது. 

இதனையடுத்து, ஜனவரி 22ஆம் தேதி கங்கை நதியின் 84 படித்துறைகளிலும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு இலவசமாக படகு சவாரி வழங்கப்படும் என அங்குள்ள படகோட்டும் தொழிலாளர்கள் அறிவித்திருந்தனர். 

இந்த நிலையில், அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி உத்தரகாண்ட் மாநிலத்தில் வரும் ஜனவரி 22ஆம் தேதி மதுபான கடைகள் அனைத்தும் மூடப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. அதில், மாநிலத்தில் உள்ள மதுபான கடைகள், பார்கள் அனைத்தும் 22ஆம் தேதி மூடப்பட வேண்டும் என்று உத்தரகாண்ட் அரசு கூறியுள்ளது. மேலும், தடையை மீறி கடைகளை திறந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.