விஷால் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'மார்க் ஆண்டனி'. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடிக்க, வில்லன் கதாபாத்திரத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிக்கிறார். வினோத் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாளை (15.09.2023) இப்படம் வெளியாகவுள்ளது. இதனால் சென்னை, ஹைதராபாத் என பல்வேறு ஊர்களில் ப்ரோமோஷன் பணிகளை படக்குழு மேற்கொண்டது. இதனிடையில் படத்தை வெளியிட தடை விதிக்க கோரி லைகா நிறுவனம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பின்பு இது தொடர்பாக நேரில் ஆஜராக விஷாலுக்கு உத்தரவிடப்பட்டிருந்த நிலையில் கடந்த 12ஆம் தேதி நேரில் ஆஜரானார் விஷால். அவருக்கு வங்கி கணக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டு படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது நீதிமன்றம்.
இதையடுத்து நாளை படம் வெளியாகவுள்ளதால் இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் மேற்கொண்டார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், "எல்லா வேலைகளையும் முடிச்சிட்டு, கடைசியா சரணடைவது கடவுள் கிட்ட தான். அவருடைய ஆசீர்வாதம் தேவை. அதனால் தான் திருப்பதிக்கு வந்தேன்" என்றார்.
பின்பு செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். நடிகர் சங்க கட்டடம் குறித்த கேள்விக்கு, "வங்கி கடன் வாங்கி கட்டடம் கட்டினதுக்கு பிறகு அங்கு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அடுத்த வருடத்திற்குள் முடிக்க முடிவெடுத்துள்ளோம்" என்றார். சந்திரபாபு நாயுடு கைது குறித்த கேள்விக்கு, "நான் ஊர் ஊராக சென்றிருந்ததால் அதை பற்றி நான் கேள்விப்பட்டேன். மற்றபடி உண்மையிலே அதை பற்றி விவரம் தெரியாது" என்றார்.