இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தற்போது ஜெயிலர் 2 ஸ்கிரிப்ட் பணிகளில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே ‘ஃபிலமென்ட் பிக்சர்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி முதல் படமாக கவினை வைத்து ‘ப்ளடி பெக்கர்’ என்ற தலைப்பில் ஒரு படம் தயாரித்தார். இந்தப் படத்தை அவரது உதவி இயக்குநர் சிவபாலன் முத்துகுமார் இயக்கியிருந்தார். ரெடின் கிங்ஸ்லி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இப்படத்திற்கு ஜென் மார்டின் என்பவர் இசையமைத்திருந்தார்.
டார்க் காமெடி ஜானரில் கடந்த தீபாவளியன்று(31.10.2024) வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தை எதிர்கொண்டது. இதனால் படத்தின் தமிழக உரிமையை வாங்கி விநியோகித்த ஃபைவ் ஸ்டார் நிறுவனத் தயாரிப்பாளர் கதிரேசனுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நெல்சன் நஷ்டமான தொகையைத் திருப்பி செலுத்துவதாக உறுதியளித்ததாக கூறப்படுகிறது.