தமிழ் சினிமாவில் சமீபத்தில் நல்ல கதைக்களத்துடன் வெளியான படங்கள் விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஆனால், சில படங்களில் பெரிய நடிகர்களை வைத்து எடுக்கப்பட்டிருந்தாலும், பெரிய பொருட் செலவில் எடுக்கப்பட்டிருந்தாலும் கூட படம் சரியாக ரசிகர்களிடம் தொடர்பை ஏற்படுத்தவில்லை என்றால் அப்படத்திற்கு கடும் விமர்சனங்கள் எழுகிறது. அந்த விமர்சனங்கள் அனைத்தும் உச்ச நட்சத்திரங்கள் தொடங்கி புதிதாக அறிமுகமாகும் நடிகர்கள், இயக்குநர்கள் வரை தொடர்கிறது.
இந்த நிலையில் விஜய் சேதுபதி பொதுவாக படங்கள் மீது எழும் விமர்சனங்கள் குறித்து பேசியுள்ளார். வெற்றிமாறன் நடத்தி வரும் பன்னாட்டு திரை - பண்பாடு ஆய்வகத்தில் பயிலும் மாணவர்களின் மூன்றாவது கல்வியாண்டு தொடக்க நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் அதில் சிறப்பு விருந்தினராக விஜய் சேதுபதி பங்கேற்றார். மேடையில் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் சில அறிவுரைகளை வழங்கினார்.
பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் படங்கள் மீது எழும் விமர்சனங்கள் குறித்த கேள்விக்கு, “விமர்சனங்கள் எப்போதும் இருக்கக்கூடியதுதான். அதை ஒன்றும் பண்ண முடியாது. முன்பு தெரு முனையில் நண்பர்களுடன் இருந்தது. நானும் அதுபோல சின்ன வயதில் கிண்டல் செய்துள்ளேன். அதே சமயத்தில் படம் நன்றாக இருந்தால் கொண்டாடவும் செய்வார்கள். அதன் மூலமாக நாங்கள் செய்யும் தவறுகளையும் புரிந்து கொள்கிறோம். விமர்சனங்கள் என்பது மக்களுக்கும் எங்களுக்கும் இடையே உள்ள தொடர்பாகத்தான் நான் பார்க்கிறேன். கடந்த 14 வருடங்களாக மக்கள் என்னைக் கலாய்த்தும், பாராட்டியும் உள்ளார்கள். இந்த அனுபவத்தில்தான் சொல்கிறேன் இதெல்லாம் இயல்பான விஷயம்” என்றார்.
விஜய் சேதுபதி தற்போது வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2, மிஷ்கினின் ட்ரெயின் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. மேலும் காந்தி டாக்ஸ் என்ற மௌனப் படத்தைக் கைவசம் வைத்துள்ளார்.