Skip to main content

பந்தலை எரித்த திமுக பிரமுகர், கடுப்பான காங்கிரஸ் பண்ணையார் - வி.சேகர் பகிரும் மக்கள் சினிமா-2

Published on 01/08/2024 | Edited on 01/08/2024
v sekar about dmk, sivaji in makkal cinema

ஒண்ணா இருக்க கத்துகணும்', 'வரவு எட்டணா செலவு பத்தணா' , 'காலம் மாறி போச்சு', 'விரலுக்கேத்த வீக்கம்' உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர் மற்றும் படத்தலைப்பு போன்றே நடுத்தர மக்களின் வாழ்வியலைத் திரையில் ரசிக்கும்படி காட்சிப்படுத்தியவர் இயக்குநர் வி.சேகர். இவரை நக்கீரன் ஸ்டூடியோ நடத்தும் 'மக்கள் சினிமா' நிகழ்ச்சி வாயிலாக சந்தித்து பேசினோம். 

ad

அப்போது அவரது சினிமா மற்றும் வாழ்க்கையின் அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். அவர் கூறுகையில், “எங்கள் ஊரில் என்னுடைய நண்பர் பெருமாள் வாத்தியார் என்று ஒருவர் இருந்தார். எங்கள் ஊரை விட்டு போகும் வரை, அவர்தான் கொடி ஏற்றுவதற்கு கொடியை கட்டி அதில் பூ வைத்து கொடுப்பார், அதனால் பண்ணையார்கள்,  ‘பட்டியலினத்தை சேர்ந்த வாத்தியார் கொடுத்து நாங்கள் கொடி ஏற்றணுமா’ என நினைத்து கொடி ஏற்றுவதையே நிறுத்திவிட்டனர். இப்படித்தான் என்னுடைய ‘ஒண்ணா இருக்க கத்துக்கணும்’படத்தில் சிவக்குமார், ஒரு வெட்டியான் கையில் கொடுத்து கொடி ஏற்ற சொல்லும் காட்சி வைத்தேன். அதற்கு என் ஊரில் நடந்ததுதான் இன்ஸ்பிரேஷன்.

இந்த கொடி ஏற்றும் பிரச்சனைகளுக்கு பிறகு பண்ணையார்கள் மேலிடத்தில் பேசி பெருமாள் வாத்தியார் எங்கள் ஊருக்கு வேண்டாம் என்று அவரை மாற்றிவிட்டனர். அதோடு மட்டுமில்லாமல் எங்கள் ஊரில் 8வது வகுப்பு வரை வேண்டாம் என்றும் சொல்லிவிட்டனர், ஏனென்றால் அதிகம் படித்தால் பட்டியலின மக்கள் இது போல ஆசிரியராக வந்துவிடுவார்கள். அதனால் அதற்கு மேல் படித்துவிடக் கூடாது என்பதற்காக எங்கள் ஊர் பள்ளியை ஆரம்பப் பள்ளியாக மாற்றிவிட்டனர். அப்படி செய்ததால் பட்டியலின மக்கள் இங்கேயே படிக்கட்டும், வெளியூர் சென்று படிக்கும் அளவிற்கு அவர்களுக்கு வசதியில்லை என்றும் தங்களிடம் வண்டி இருப்பதால் தங்களின் பிள்ளைகளை வெளியூர் சென்று படிக்க சொல்லிவிடலாம் என்றும் நினைத்தனர்.

ஒரு பண்ணையார் வீட்டு பையனாக மிலிட்டரிகாரர் பாதிக்கப்பட்டத்தைவிட பெருமாள் வாத்தியார் பாதிக்கப்பட்டது எனக்கு மிகுந்த வேதனையைக் கொடுத்தது. ஏனென்றால் பெருமாள் என்னுடன் படித்தவர். என் வண்டியில் அவரை உட்கார வைத்து சென்றாலும் யாராவது பார்த்து வீட்டில் சொல்லிவிடுவார்கள் எனக்குத் திட்டு விழும். அவர் ஊரை விட்டு போகும்போது இங்கு நாம் பேசிக்க வேண்டாம், வெளியூரில் பேசிக்கொள்ளலாம் என்று சொல்லி விடை பெற்றார். இந்நிலையில்தான் திராவிட இயக்கங்கள் சாதிக்கு எதிராகப் பிரச்சாரம் செய்து வளர்ந்து வந்தனர்.

அந்த காலகட்டத்தின் போது திருவண்ணாமலையில் ஒரு இடைத்தேர்தல் வருகிறது. அங்குதான் தி.மு.க. முதலில் அடித்தளம் போட்டு எம்.எல்.ஏ- வாக பா. சண்முகம் ஜெயித்தார். அவரும் என்னுடைய சொந்தக்காரர்தான். தேர்தலில் அவர் நின்ற சமயத்தில் காங்கிரஸ் அவரை தோற்கடிக்க வரிஞ்சு கட்டி வேலை செய்து வந்தது. நான் 6வது படிக்கும்போது காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும் எனக் காமராஜர் எங்கள் ஊருக்கு வர முடிவு செய்தார். அப்போது பண்ணையார்களான எங்கள் உறவினர்கள்தான் எங்கள் ஊரில் காங்கிரஸ்காரர்கள். மீதமுள்ள ஏழை மக்கள் தி.மு.க.காரர்கள். அவர்கள் எங்கள் ஊரில் வளர்வதை தெரிந்து கொண்டு அதை கட்டுப்படுத்தி எப்படியாவது திருவண்ணாமலையில் காங்கிரஸை வளர்க்க காமராஜர் எங்கள் கிராமத்திற்கு வருகிறார். 

காமராஜர் அப்போது முதலமைச்சர் என்பதால் நாங்கள் பந்தல் போட்டு, மாலையுடன் அவரை வரவழைக்க காத்திருந்தோம். அப்போது ஒரு செய்தி வருகிறது. காமராஜரை வரவழைக்க ஏற்பாடு செய்யப்பட்ட பந்தலை தீ வைத்து கொளுத்திவிட்டனர் என்று. இதை அறிந்த காமராஜர் ‘பந்தலை கொளுத்தும் அளவிற்கு யார் இதை செய்தது’ என்று கேட்டார். அதற்கு பண்ணையார்கள்,   ‘பா. சண்முகம் என்பவரின் மச்சான் ஊராட்சி மன்ற தலைவராக இருக்கிறார் அவர்தான் இதைச் செய்தார்’ என்று கூறினார்கள். அதற்கு காமராஜர்  ‘அதே ஊருக்கு  போங்க’ என்றார். ‘பந்தலை கொளுத்திவிட்டார்கள் அப்பறம் எப்படி அங்க போவது’ என பண்ணையார்கள் கேட்க, ‘இருக்கட்டும் போகலாம்’ என்று அவர் சொன்னார். பிறகு ஊருக்கு காமராஜர் வந்து, பள்ளியில் உள்ள பெஞ்சை எடுத்து மேடை மாதிரி அடுக்கி அதில் உட்கார்ந்தார். அப்போது காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்தவர் எங்க அப்பா. அதனால் காமராஜர் என்னை மடியில் உட்கார சொன்னார், நானும் அமர்ந்து கொண்டேன்.

மேடையில் காமராஜர் பேசுகையில் ‘கட்சி எதுவா இருந்தாலும் ஓட்டு போடுங்க. ஆனால், பிரச்சனைகள் இருக்க கூடாது. தி.மு.க.காரர்களும் நாங்களும் ஓட்டு கேட்ட பிறகு சென்று விடுவோம், ஊர்க்காரங்க நீங்க சண்டை போடக்கூடாது. என் நோக்கம் மக்கள் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் எனபதுதான்” என்று பெருந்தன்மையாக பேசிவிட்டு சென்றார். ஆனால் அங்கு வந்த கூட்டம் 100 பேர் கூட இல்லை. எல்லோரும் அவர்களின் வீட்டிலிருந்தபடியே காமராஜர் பேசுவதை கேட்டனர். அதன் பிறகு பண்ணையார்கள் தங்களின் தோட்டத்தில் வேலை செய்பவர்களிடம், ‘காமராஜர் வரும் போது ஏன் கூட்டத்திற்கு வரவில்லை’என கேட்டனர். அப்போது அவர்கள் ‘வேலை செய்வது வேறு, கொள்கை வேறு. தி.மு.க.-வுக்குதான் ஓட்டுப் போடுவோம். இங்கு கூலிக்குத்தான் வேலை செய்கிறோம். அதற்காக நீங்கள் சொல்லும் கட்சிக்கு ஓட்டுப் போட முடியாது. காமராஜர் எங்களுக்குப் பிடிக்காது, அண்ணாதான் எங்களுக்குப் பிடிக்கும்’என்றனர். அப்போது நம்மதான் வேலை தருகிறோம் ஆனால் இவர்கள் காமராஜரை விட்டு அண்ணா பிடிக்கும் என சொல்கிறார்களே ஏன் என்று யோசித்து அதன் பிறகு தி.மு.க. கூட்டம் எல்லாம் பார்க்க ஆரம்பித்தேன்.

தி.மு.க.காரர்கள் பேசும்போது  ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றும், சாதி இரண்டொழிய வேறில்லை என்றும் மேடையில் முழங்குவார்கள். ஒருவனுக்கு 500 ஏக்கர் நிலம் இருக்கு மற்றொருவரிடம் நிலமே இல்லை. எல்லோருக்கும் நிலம், வேலை வேண்டும்’ என வித்தியாசமாக பேசுவார்கள். இதைப் பார்க்கும்போது தி.மு.க.காரர்கள் மக்கள் பிரச்சனையை பேசுகிறார்கள் என்று புரிந்துகொண்டேன். அதனால்தான் ஜனங்கள் அவர்கள் பின்னால் கூடி உள்ளது எனத் தெரிந்துகொண்டேன். அதிலிருந்து எங்கள் வீட்டிற்கு தெரியாமல் தி.மு.க. கூட்டத்தை சென்று பார்க்க ஆரம்பித்தேன். வீட்டில் காங்கிரஸ்காரர்கள் என்பதால் சிவாஜி படம்தான் பார்ப்போம், எம்.ஜி.ஆர். படம் பார்க்கவிட மாட்டார்கள். நான் வீட்டில் சிவாஜி படம் பார்க்கப்போவதாக சொல்லிவிட்டு தியேட்டரில் எம்.ஜி.ஆர். படம் பார்ப்பேன். அதற்கு எங்கள் வீட்டில் எம்.ஜி.ஆர் படம்தான் ஓடுது நீ எதைப்பார்த்த என்று திட்டுவார்கள். சிவாஜி படத்திற்கு கூட்டம் வராமல் எம்.ஜி.ஆர். படத்திற்கு கூட்டம் வழியும். சிவாஜி நல்லாதான் நடிக்கிறார் பிறகு ஏன் எம்.ஜி.ஆர்-க்கு கூட்டம் வருகிறது என்று பார்த்தால் எல்லோரும் ஏழை மக்கள். சினிமாவில் சிவாஜி, எம்.ஜி.ஆர் என்று பிரிக்கும்போதே ஏழை மற்றும் பணக்கார மக்கள் தனித்தனி பாலிசியில் இருக்கிறார்கள் என்று புரிந்துகொண்டேன். 

அதன் பிறகு திருவண்ணாமலையில் நான் கல்லூரியில் படிக்கும்போது, அங்கு மாணவர்கள் எம்.ஜி.ஆர்-க்கும் சிவாஜிக்கும் தனித்தனி மன்றங்கள் வைத்திருந்தனர். சிவாஜி மன்றத்திற்கு நடிகர் திலகம் என்று பெயர் வைத்திருந்தனர். காங்கிரஸ் குடும்பம் என்பதால் சிவாஜி மன்றத்தில் உறுப்பினரானேன். அந்த பக்கம் எம்.ஜி.ஆர். மன்றத்திற்கு மக்கள் திலகம் என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது. நடிப்பதால் சிவாஜிக்கு நடிகர் திலகம் என பெயர் வைத்துள்ளார்கள். ஆனால், எம்.ஜி.ஆர்-க்கு மக்கள் திலகம் என வைத்துள்ளார்களே என்று அதைக் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் வந்துவிட்டது. திருவிளையாடல், சரஸ்வதி சபதம் என்று புராணம் கதைகளில் சிவாஜி படம் பண்ணிக்கொண்டு இருந்தபோது, எம்.ஜி.ஆர் ஒரு பக்கம் சாதாரண மக்கள் எப்படி மேல்மட்டதிற்கு போவது மற்றும் அநியாயத்திற்கு எதிராக குரல் கொடுப்பது போன்ற படங்களில் நடித்து கைதட்டல் வாங்கிக் கொண்டிருந்தார். இதனால் நானும் கொஞ்சம் கொஞ்சமாக எம்.ஜி.ஆர்-ஐ ரசிக்க ஆரம்பித்துவிட்டேன். இவர்கள் இருவரின் படங்களையும் தொடர்ந்து பார்த்து வரும்போது மக்கள் என்றால் என்ன ஏன் எம்.ஜி.ஆர்-க்கு அப்படி பேர் வந்தது, பின்பு மக்கள் என்றால் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டேன்” என்றார்.

சார்ந்த செய்திகள்