Skip to main content

வெற்றிமாறன் படத்தில் வெளியேறிய நடிகையுடன் மீண்டும் ஜோடி சேரும் தனுஷ்

Published on 05/06/2023 | Edited on 05/06/2023

 

trisha to play a heroine in dhanush 50th movie

 

அருண் மாதேஸ்வரன் இயக்கும் 'கேப்டன் மில்லர்' படத்தில் பிசியாக நடித்து வருகிறார் தனுஷ். 'சத்யஜோதி ஃபிலிம்ஸ்' நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சந்தீப் கிஷன், நிவேதிதா சதிஷ், ஜான் கோக்கன், மூர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

 

இதையடுத்து தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு படம் நடிக்க கமிட்டாகியுள்ளார் தனுஷ். இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்க தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகவுள்ளதாக படக்குழு தெரிவித்தது. இதையடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படமும் நடிக்க கமிட்டாகியுள்ளார். இப்படத்தை தனுஷின் 'வொண்டர்பார் ஃபில்ம்ஸ்' நிறுவனம் தயாரிக்கிறது. 

 

இதனிடையே தனது 50வது படத்திலும் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தை தனுஷே இயக்கி நடிக்கவுள்ளார் எனவும் காளிதாஸ் ஜெயராம், விஷ்ணு விஷால் மற்றும் துஷாரா விஜயன் நடிப்பதாகவும் தகவல் வெளியானது. சமீபத்தில் எஸ்.ஜே.சூர்யாவும், நடிகர் சந்தீப் கிஷனும் இணைந்து நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. 

 

இந்நிலையில் இப்படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. த்ரிஷாவிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகச் சொல்லபடுகிறது. இப்பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தால் இரண்டாவது முறையாக தனுஷுக்கு ஜோடியாவார் த்ரிஷா. முன்னதாக தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்த 'கொடி' படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அதற்கு முன்னதாக தனுஷின் 'ஆடுகளம்' படத்தில் முதலில் த்ரிஷா தான் கமிட்டாகியிருந்தார். டெஸ்ட் ஷூட்டும் நடந்தது. பின்பு சில காரணங்களால் தொடர முடியாத நிலையில் டாப்ஸி நடித்தார் என்பது நினைவுகூறத்தக்கது.  

 

த்ரிஷா தற்போது விஜய் நடிக்கும் 'லியோ' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது. மேலும் 'தி ரோட்' படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தொடர்ந்து படம் பண்ணுங்க” - கோரிக்கைக்கு ஓகே சொன்ன விஜய்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
vijay says yes to distributor sakthivelan request for to dont stop acting gilli re release celebration

விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தரணி இயக்கத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான படம் கில்லி. ஏ.எம் ரத்னம் தயாரித்திருந்த இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தெலுங்கில் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான ‘ஒக்கடு’ படத்தின் ரீமேக்கான இப்படம் ரசிகர்களின் ஏகோபத்திய வரவேற்பை பெற்று, விஜய் மற்றும் த்ரிஷா கரியரில் ஒரு மைல் கல் படமாக மாற்றியது. இன்றளவும் விஜய் ரசிகர்களின் ஃபேவரிட் படங்களில் முக்கியமான படமாக இப்படம் இருந்து வருகிறது.  

இந்த நிலையில் 20 வருடம் கழித்து 4கே டிஜிட்டல் தரத்தில் மெருகூட்டப்பட்டு கடந்த 20ஆம் தேதி கில்லி படம் ரீ ரிலிஸானது. புது விஜய் படம் வெளியானது போல் அவரது ரசிகர்கள் ஆர்வத்துடனும் ஆராவரத்துடனும் படத்தை வரவேற்றனர். இரண்டு நாட்களில் ரூ.12 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. ரசிகர்களின் வரவேற்பு குறித்து பிரகாஷ் ராஜ் மற்றும் த்ரிஷா, அவர்களது சமூக வலைதளப்பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தனர். 

இந்த நிலையில் ரீ ரிலீஸ் வரவேற்பு தொடர்பாக தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம், இயக்குநர் தரணி மற்றும் படத்தை வெளியிட்ட விநியோகிஸ்தர் சக்திவேலன், விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது விஜய்க்கு மாலை அணிவித்த சக்திவேலன், அவரிடம் ஒரு கோரிக்கை வைத்தார். “அரசியலுக்கும், மக்களுக்கும் நீங்கள் நிறைய நேரத்தை செலவிடுங்கள். ஆனால் வருஷத்திற்கு ஒரு படமாவது பண்ணுங்க. வியாபாரத்தை தாண்டி ரசிகர்களின் கொண்டாட்டம் தியேட்டரில் கூஸ்பம்ஸ் தருணமாக இருக்கிறது. அதனால் தொடர்ந்து படம் பண்ணுங்க” என்றார். இதனிடையே அவருக்கு பதிலளித்த விஜய், சரி என சொல்லிவிட்டு அவர்களின் மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

vijay says yes to distributor sakthivelan request for to dont stop acting gilli re release celebration

கடந்த பிப்ரவரி மாதம் அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் தற்போது நடித்து வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைப் படத்தை தவிர்த்து இன்னொரு படத்தில் நடித்து விட்டு பின்பு முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

தனுஷ் படத்திற்கு எழுந்த சிக்கல்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
dhanush kubera title issue

தனுஷ் தற்போது தனது 50 ஆவது படமான ராயன் படத்தை இயக்கி நடித்து முடித்துள்ளார். மேலும் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கி வருகிறார். ஹீரோவாக சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா, அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் இளையராஜா பயோ-பிக் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், இந்தியில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ஒரு படம் எனக் கைவசம் வைத்துள்ளார். 

இதில் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகும் படம் தனுஷின் 51ஆவது படமாக உருவாகிறது. படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு இறுதியில் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகி பின்பு எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்த நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பூஜை நடைபெற்றது. இதில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க தெலுங்கு முன்னணி நடிகர் நாகர்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.  

இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் பூஜையுடன் தொடங்கியது. முதற்கட்டமாக திருப்பதியில் படப்பிடிப்பு நடந்தபோது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டதால் பரபரப்பானது. மேலும் அப்பகுதி மக்கள் கண்டனம் தெரிவித்ததைத் தொடர்ந்து, படப்பிடிப்பிற்கு தடை விதிக்கக் கோரி பாஜகவினர் திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதைத் தொடர்ந்து படப்பிடிப்பிற்காக வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து வேறொரு இடத்தில் படப்பிடிப்பு முழு வீச்சில் நடந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பும் மும்முரமாக நடந்து வருகிறது. 

இதனிடையே இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் கடந்த மாதம் வெளியானது. குபேரா எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த படக்குழு, டைட்டில் லுக் வீடியோவையும் வெளியிட்டது. போஸ்டரில் தனுஷ் முடி கலைந்து, தாடியுடன் அழுக்கான வித்தியாசமான தோற்றத்தில் இடம்பெற்றிருந்தார். இது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில் இப்படத்தின் தலைப்பிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தயாரிப்பாளர் கர்மிகோண்டா நரேந்திரா என்பவர், தெலுங்கானா ஃபிலிம் சேம்பரில் ஏற்கனவே குபேரா என்ற தலைப்பை பதிவு செய்திருப்பதாகவும், அப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தான் தலைப்பை பதிவு செய்த போதிலும் தனுஷ் நடிக்கும் படத்திற்கு தனது படத்தின் பெயரை சேகர் கம்முலா பயன்படுத்தியதாகவும், இது குறித்து தெலுங்கானா பிலிம் சேம்பரிடம் பேச முயற்சித்தும் சரியாக பதில் வரவில்லை என்றும் குற்றம் சாட்டுவதாக கூறப்படுகிறது. இதனால் தயாரிப்பாளர் சட்ட நடவடிக்கை மூலம் பிரச்சினையை தீர்க்க முயல்வதாக தெலுங்கு சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.