புஷ்பா வெற்றிக்குப் பிறகு சுகுமார் - அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகியிருக்கும் ‘புஷ்பா 2 தி ரூல்’ நேற்று (05.12.2024) பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியானது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாகவும், ஃபஹத் ஃபாசில் வில்லனாகவும் நடித்துள்ளனர். படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்க பின்னணி இசையில் சாம் சி.எஸ் இணைந்து பணியாற்றியிருக்கிறார்.
இப்படத்தின் முன்பதிவு மட்டுமே ரூ.100 கோடி வசூல் செய்ததாக படக்குழு அறிவித்திருந்தது. அதற்கேற்ப தெலுங்கானாவில் சிறப்பு காட்சிக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருந்ததால் அல்லு அர்ஜூன் ரசிகர்கள் படத்தை ஆரவாரத்துடன் கொண்டாடி வந்தனர். ஹைதராபாத் திரையரங்கம் ஒன்றிற்கு வருகை தந்த அல்லு அர்ஜூனை காண கொண்டாட்டத்தில் இருந்த ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். அப்போது ரேவதி(39) என்ற பெண்ணும் அவரது மகனும் கூட்ட நெரிசலில் சிக்கிய நிலையில், ரேவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடைய மகன் படுகாயமடைந்து மருத்துவமனியில் சிகிச்சை பெற்றார். இந்த சம்பத்தையடுத்து புஷ்பா 2 படக்குழு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆதரவாக நிற்பதாக இரங்கல் தெரிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து அல்லு அர்ஜுன், அவரது பாதுகாப்பு குழு மற்றும் சம்பந்தப்பட்ட திரையரங்கம் மீது ஹைதராபாத் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இந்த நிலையில் சிறப்பு காட்சியின்போது ஏற்பட்ட இத்துயர சம்பவத்தால், இனிமேல் அதிகாலை சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்போவதில்லை தெலங்கானா அரசு அறிவித்துள்ளது. இதற்கு முன்பு கடந்த 2023ஆம் ஆண்டு அஜித் குமார் நடிப்பில் வெளியான துணிவு படத்தின் அதிகாலை காட்சியின்போது, ரசிகர் ஒருவர் உயிரிழந்தார். அந்த சம்பவத்திற்கு பிறகு தமிழ்நாடு அரசு அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி வழங்காமல் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.