Skip to main content

'நீ, உன் பேச்சு என அத்தனையும் வக்கிரம்' - லீனா மணிமேகலைக்கு பதிலடி கொடுத்த சுசி கணேசன்

Published on 17/10/2018 | Edited on 17/10/2018
susi

 

மீ டூ மூவ்மெண்ட் மூலம் இயக்குனர் சுசிகனேசன் மீது பாலியல் புகார் கூறிய லீனா மணிமேகலைக்கு நேற்று இயக்குனர் சுசிகணேசன் பதில் அளித்துள்ளார். அதில்.... இப்படி ஒரு மோசமான சூழலில் உங்களை சந்திப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. கமல் சார் படத்தில் வரும் வசனம் வரும் வரும், 'நல்லவனுக்கு கிடைக்க வேண்டிய மரியாதை எல்லாம் கெட்டவனுக்கு கிடைச்சுட்டு இருக்கு' என்று. இந்த உலகத்துக்கு என்னால் சமாதானம் சொல்ல முடியாது. என்னை நம்பும் என் நண்பர்களுக்கும், என் குழந்தைகளுக்கும், என் குடும்பத்திற்குமான விளக்கம் இது. அந்த பெண் இங்கு பேசும்பொழுது அவரின் உடல் மொழியில் மனவேதனை இருப்பது போல் தெரியவில்லை. தன்னை விளம்பரப் படுத்தும் நோக்கில் சுசிகணேசன் பெயரை உபயோகித்துள்ள அவரின் திமிர்தான் தெரிந்தது. ஒரு பாதிக்கப்பட்ட பெண் என்ற உணர்வு அவர் முகத்தில் கொஞ்சம் கூட தெரியவில்லை. சொல்லப்போனால் அன்று நடந்த உண்மையான சம்பவத்தைப் பற்றி சொன்னால் என்ன நடந்தது என்று உங்களுக்கு கண்டிப்பாக புரியும். கடந்த 2004ஆம் ஆண்டு ஒரு நேர்காணலுக்காக லீனா மணிமேகலை என்னை அழைத்திருந்தார். நான் அங்கு சென்று ஒரு அரைமணிநேரம் நேர்காணலுக்கு பிறகு என் உதவியாளரை கூட்டிக்கொண்டு அங்கிருந்து கிளம்பி விட்டேன். என் உதவியாளர் தான் என்னுடைய டிரைவரும் ஆவார். அதேபோல் என்னிடம் luxury கார் எல்லாம் கிடையாது. பாவம் அந்த சகோதரி புரிந்து கொள்ளும் மனநிலையில் அவர் இல்லை. 

 

 

 

அவர் வேறு யாரோ ஒருவரின் காரில் சென்று விட்டு சுசி கணேசன் என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது. இப்போதெல்லாம் சமூகத்தில் பெண்ணியம் என்று பேசுவது ஒரு பேஷனாக மாறிவிட்டது. இப்போது நான் ஆண்ணியம் என்று பேசக்கூடிய சூழலுக்கு தள்ளப்பட்டது மிகவும் கேவலமாக உள்ளது. சென்னை என்பது காடு கிடையாது ஒரு காரில் 25 நிமிடங்களுக்கு மேல் வெளிப்புறத்தில் சுற்றினால் யாருக்கும் தெரியாமலா போய்விடும். அப்படி இருக்க கார் கதவை தட்டி இருக்கலாம், ஜன்னல் கதவை தட்டி இருக்கலாம், சத்தம் கொடுத்து இருக்கலாம் இப்படிப் பல வழிகள் இருக்க என்னை அவதூறாக நடக்காத விஷயங்களை பற்றி பேச என்ன காரணம் என்று எனக்கு புரியவில்லை. மீ டூ மூவ்மெண்ட்டை நான் ஆதரிக்கிறேன். அது ஆதரிக்கக்கூடிய விஷயமும் ஆகும். ஆனால் இங்கு உள்ளவர்கள் தன்னுடைய சுய லாபத்துக்காகவும், சுய பகைக்கவும் இதைப் பயன்படுத்துவது கொடுமையாக உள்ளது. மேலும் உண்மையாக நடந்த விஷயங்களை சொல்ல நான் இங்கு கடமைப்பட்டுள்ளேன். சகோதரி லீனா மணிமேகலை என்னுடைய போன் நம்பரை என் உதவியாளரின் முன்னிலையிலேயே தான் என்னிடம் வாங்கினார். பின்னர் ஒரு நாள் எனக்கு போன் செய்து நான் உங்களிடம் உதவியாளராக சேர விரும்புகிறேன் என்று கூறினார். நான் ஒரு கவிஞர் நன்றாக கவிதை எழுதுவேன் என்னை உங்கள் உதவியாளராக சேர்த்துக் கொள்ளுங்கள் அல்லது கவிஞராகவாவது சேர்த்துக் கொள்ளுங்கள் என்று என்னிடம் கேட்டார். அதற்கு நான் முடியாது என்று மறுத்து விட்டேன்.  இதற்கு என்னிடம் தகுந்த ஆதாரங்கள் உள்ளது. இந்த சம்பவம் நடந்தது 2004ஆம் ஆண்டு அக்டோபர் மாதம். அவர் என்னை நேர்காணல் செய்தது 2004 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆகும். இந்த ஒரு மாத இடைவெளிக்குள் அவர் என்னிடம் இதைக் கேட்டார்.

 

பின்னர் மூன்று மாதம் கழித்து என்னுடைய 'வாக்கபட்ட பூமி' புத்தக வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கியது வேறு யாரும் இல்லை சகோதரி லீனா மணிமேகலை தான். அந்த விழாவை தானாக முன்வந்து என் கவிதை திறமையை வெளிக்காட்ட இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும் என்று சொல்லி அவரே விருப்பப்பட்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொடுத்தார். அதனுடைய புகைப்படங்கள் ஆதாரமாக என்னிடம் உள்ளது. அதை நான் நீதிமன்றத்தில் சமர்பிக்க உள்ளேன். இந்த மாதிரியான விளம்பரங்கள் எல்லாம் உங்களுக்கு தேவையா சகோதரி. இதற்கு நீங்கள் வேறு ஏதாவது ஒரு வேலை செய்து பிழைத்து கொள்ளலாம். முதலில் லீனா மணிமேகலை யார் என்பது எத்தனை பேருக்கு தெரியும். அவரே தன்னை தானே கவிஞர், கவிஞர் என்று சொல்லிக் கொள்கிறார். அவரின் முகநூல் பக்கத்தில் போய் பார்த்தேன் அத்தனை விதமான கொச்சை வார்த்தைகள் அதில் அடங்கியுள்ளன. அதை என்னால் வெளியே சொல்ல கூட முடியவில்லை. இதுவா பெண்ணியம். இவர் போய் என்னை சொல்வதில் என்ன நியாயம் உள்ளது. நான் இதற்கு முன் 1987ல் இருந்து 1992 வரை ஒரு புலனாய்வு பத்திரிகையில் வேலை செய்துள்ளேன். எந்த ஒரு ஆதாரமும் இன்றி நான் கட்டுரை எழுத மாட்டேன். அப்படியிருக்க ஒருவர் சரமாரியாக புகார் கூறினால் அதற்கு ஆதாரம் உள்ளதா என்று யாரும் கேட்காமல் இருப்பது வருத்தமாக உள்ளது. இந்த சமூகத்தில் உள்ளவர்கள் அப்படித்தான் என்று நினைத்து விடுகின்றனர். தற்போது நான் ஆணாக பிறந்ததற்கு மிகவும் வெட்கப்படுகிறேன். ஒரு பெண் என்ன சொன்னாலும் இந்த சமூகம் அப்படியே நம்பலாமா.

 

 

 

தப்பு என்று சொன்ன அவர்தான் குற்றத்தை நிரூபிக்க வேண்டும். ஆனால் நானோ எனக்கு இருக்கின்ற சூழலில் இங்கு வந்து உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன். இந்த சமூகத்திற்கு நான் என்ன சொன்னாலும் மண்டையில் ஏறப்போவதில்லை. ஏனென்றால் இந்த சமூகம் அப்படித்தான். அவர்களுக்கு ஒட்டு கேட்பது பிடிக்கும், இந்த மாதிரியான கதைகளைக் கேட்பது பிடிக்கும், உண்மை எது பொய் எது என்று பிரித்துப் பார்க்க தெரியாது, இதனால் நான் இந்த சமூகத்துக்காக இந்த விளக்கத்தைக் கொடுக்க வரவில்லை. என் பிள்ளைகளுக்காகவும், குடும்பத்திற்காகவும் விளக்கம் கொடுக்க வந்துள்ளேன். நாளை என் பிள்ளைகள் என் அப்பா உண்மையானவர், நேர்மையானவர் என்று நினைக்க வேண்டும். அதனால்தான் அவர்களுக்காக தற்போது விளக்கம் அளித்துள்ளேன். நான் செய்யாத குற்றத்தை உங்களுடைய போலியான விளம்பரத்திற்காக என்னை பயன்படுத்தியது என் குடும்பத்தை மிகவும் பாதித்துள்ளது. இனி இந்த சம்பவம் அனைவருக்கும் ஒரு பாடமாக இருக்கும். இது உண்மை என்று நீதிமன்றத்தில் நிரூபணமானால் இந்த இடத்திலேயே நீங்கள் என்னைத் தூக்கிலிடலாம். இல்லை அப்படி அந்தப் பெண் தான் தப்பு செய்து உள்ளார் என்றால் குறைந்தபட்சம் ஒரு பத்து நாட்களுக்காவது அவரை ஜெயிலில் போடுங்கள். அப்போதுதான் இந்த மாதிரியான பெண்களுக்கு இது ஒரு பாடமாக அமையும்.

 

மேலும் அப்படி உண்மையிலேயே இது போல் ஒரு சம்பவம் நடந்திருந்தால் அவர் ஏன் 3 மாதத்திற்குப் பிறகு நடந்த என் புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியை ஏன் தொகுத்து வழங்க வேண்டும். ஒரு சம்பவம் நடந்து அதை வெளிக்கொண்டு வர 15 வருடங்களா ஆகும். இந்த ஒரு சாட்சியே போதுமானது என்மேல் தப்பில்லை என்பதற்கு. அவர் பேசியதும் பார்த்துள்ளீர்கள், நான் பேசியதும் பார்த்துள்ளீர்கள். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பதுபோல் உங்களிடமே விட்டுவிடுகிறேன். எது தவறு எது சரி என்று நீங்களே சொல்லுங்கள். நீ, உன் பேச்சு என அத்தனையும் வக்கிரம். இங்கு அனைவரும் சமம். நான் எதற்கும் பயப்பட போவதில்லை. மேலும் நான் ஏன் நீதிமன்றத்திற்கு செல்கிறேன் என்று இங்கு சொல்ல கடமைப்பட்டுள்ளேன். நான் இந்த உலகத்தில் என்ன சொன்னாலும் யாரும் அப்படியே நம்ப போவதில்லை. மேலும் இந்த மாதிரியான புகாருக்கு முதன்முதலில் காவல்துறையில் புகார் அளித்தவன் நான்தான். எனக்கு வேறு வழியும் தெரியவில்லை. நீதிமன்றம் மூலமாகத்தான் இதற்கு நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறேன் அதற்காகத்தான் நான் நீதிமன்றத்திற்கு செல்கிறேன். இதற்குப் பிறகு யாரும் இதுபோல் போலியாக பாதிக்கப்படக் கூடாது. நான் நல்லவனா கெட்டவனா என்பதை நீதிமன்றம் முடிவு செய்யட்டும். நன்றி" என்று கூறினார்.
 

 

சார்ந்த செய்திகள்