Skip to main content

ஏ.ஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சி விவகாரம் - 5 மடங்கு இழப்பீடு வழங்க உத்தரவு

Published on 04/05/2024 | Edited on 04/05/2024
ar rahman marakkuma nenjam concert issue case update

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், 'மறக்குமா நெஞ்சம்' என்ற தலைப்பில் கடந்த ஆண்டு (10.09.2023) ஆம் தேதி சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்தினார். இதற்கான ஏற்பாடுகளை ஏ.சி.டி.சி என்ற நிறுவனம் செய்திருந்தது. நிகழ்ச்சியைக் காண பல்வேறு நாடுகளிலிருந்து ஏராளமான ரசிகர்கள் வந்திருந்தனர். இதனால் ஓ.எம்.ஆர் சாலையில் ரசிகர்கள் பெரும் திரளாகக் கூடியிருந்ததால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் ஆயிரக்கணக்கில் டிக்கெட்டுகளை வாங்கிய பல ரசிகர்கள் உரிய இருக்கை கிடைக்காமல் நின்று கொண்டே பார்த்ததாகவும், சிலர் இடம் கிடைக்காமல் பார்க்காமலேயே வீடு திரும்பியதாகவும், ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்திருந்தது. இது பெரும் சர்ச்சையானது. 

இதற்கு முன்பாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் தேதி 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அன்றைய தினம் மழை பெய்ததால், அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
அப்போது, அன்றைய தினம் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்வின் மணிகண்டன் என்பவர், 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சியில் தனது குடும்பத்தினருடன் கலந்துகொள்வதற்காக ரூ.12 ,000 செலுத்தி டிக்கெட் பெற்றுள்ளார். ஆனால் அந்த இசை நிகழ்ச்சி மழை காரணமாக வேறு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இது தொடர்பாக கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், “ஒத்திவைக்கப்பட்ட தேதியில் தன்னால் கலந்துகொள்ள முடியாததால் டிக்கெட்டுக்காக செலுத்திய தொகையைத் திருப்பித் தருமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர், ஏ.சி.டி.சி. நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பினேன். ஆனால் அவர்கள் பணத்தைத் திருப்பித் தருவதாக உறுதியளித்துவிட்டு இதுவரை தனது பணத்தைத் திருப்பி செலுத்தவில்லை” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது, இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஏ.சி.டி.சி. நிறுவனம் மனுதாரருக்கு டிக்கெட் தொகை ரூ.12,000 சேவை குறைபாட்டிற்கான இழப்பீடு ரூ.50,000 ஆயிரம் மற்றும் செலவுத்தொகை ரூ.5,000 என மொத்தம் ரூ.67,000 வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்