Skip to main content

"45 ஆண்டு கால அனுபவத்தில் இதுதான் முதல் முறை என்றார்" - இளையராஜா குறித்து சூரி பகிர்ந்த சுவாரசியம்

Published on 03/04/2023 | Edited on 03/04/2023

 

soori meets ilaiyaraaja regards viduthalai success

 

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'விடுதலை பாகம் 1' படம் சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியானது. எல்ரெட் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். காவல்துறைக்கும் போராட்டக் குழுவுக்கும் இடையே நடக்கும் பிரச்சனைகளை அழுத்தமாக பேசியிருக்கும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக சூரியின் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர். படம் பார்த்த அரசியல் தலைவர்கள் திருமாவளவன் எம்.பி, சீமான் உள்ளிட்டோர் தங்களது கருத்தை வெளிப்படுத்தி படக்குழுவினரை பாராட்டியிருந்தனர். 

 

இப்படம் வெற்றிபெற்றதை அடுத்து தயாரிப்பாளர் எல்ரெட் குமார் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் இளையராஜாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்த நிலையில் நடிகர் சூரி தற்போது இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது ட்விட்டரில் பகிர்ந்து "இசையை‌ சந்தித்து நன்றி கூறினேன். ஆசி வாங்கினேன். இறைவனுக்கு நன்றி." எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

இதனிடையே ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய சூரி, இளையராஜா குறித்தும் பேசினார். அவர் பேசுகையில், "நான் சினிமாவில் நுழைந்ததில் இருந்து இளையராஜா சாரை பார்த்தது இல்லை. ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் ஸ்க்ரீனில் அல்லது தூரமாகத்தான் பார்த்துள்ளேன். ஆனால் இப்படம் மூலமாகத்தான் பக்கத்தில் உட்கார்ந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. படத்தில் வரும் காட்டு மல்லி பாடலின் ரெக்கார்டிங் போது அவரை சந்தித்தேன். இப்பாடல் இளையராஜாவின் சொந்த ஸ்டூடியோவில் சென்டிமெண்டாக ரெகார்ட் செய்யப்பட்டது. கொரோனா காலகட்டத்தில் நடந்த இந்த பாடல் பதிவு, இப்படத்தின் முதல் பாடலாக பதிவு செய்தோம். அப்போது நான், வெற்றிமாறன் மற்றும் இளையராஜா மூன்று பேரும் உள்ளே இருந்தோம். விஜய் சேதுபதி வந்து கொண்டிருந்தார். 

 

இளையராஜா பக்கத்தில் வெற்றிமாறன் உட்கார்ந்திருந்தார். எதிர்புறத்தில் நான் உட்கார்ந்திருந்தேன். இளையராஜா அவரது ஹார்மோன் பெட்டியில் ட்யூன் போட கை வைத்து பின்பு என்னை பார்த்தார். பார்த்ததும் அப்படியே நின்றுவிட்டார். எனக்கு பதட்டமாகி விட்டது. 10 நொடிக்கு மேல் பேசாமல் அப்படியே பார்த்ததால், பதட்டத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தேன். பின்பு அவரிடம் கேட்டபோது, தனது 45 ஆண்டு கால அனுபவத்தில் ஹீரோவை அருகில் வைத்துக் கொண்டு ட்யூன் போடுவது இதுதான் முதல் முறை எனக் கூறினார். அவரது இசையில் நடிப்பது பெரிய விஷயமாக பார்க்கிறேன். அவர் நம் வாழ்க்கையில் கலந்துள்ளார். என் பிள்ளைகளின் வாழ்க்கையிலும் கலந்துள்ளார். நாளைக்கு அவனுடைய பிள்ளை வாழ்க்கையிலும் கலந்து இருப்பார் என்று நினைக்கிறன்" என்றார்.

 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

இளையராஜா வழக்கில் நீதிபதி விலகல்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
ilaiyaraaja song copywright issue case

இளையராஜாவின் 4500 பாடல்களை பயன்படுத்துவதற்காக எக்கோ, அகி உள்ளிட்ட நிறுவனங்கள் அவரிடம் ஒப்பந்தம் செய்திருந்தார்கள். ஆனால் 2014ஆம் ஆண்டு, ஒப்பந்தம் முடிந்த பிறகும் காப்புரிமை இல்லாமல் தனது பாடல்களை பயன்படுத்தியதாக எக்கோ, அகி மியூசிக் உள்ளிட்ட சில நிறுவனங்கள் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 2019ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. அதில் தயாரிப்பாளரிடம் உரிமை பெற்று இளையராஜா பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு உரிமை உள்ளதென்றும், இளையராஜாவுக்கும் இந்த பாடல்கள் மீது தனிப்பட்ட தார்மீக சிறப்பு உரிமை இருக்கிறதென்றும் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து இளையராஜா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 

இந்த மேல்முறையீட்டு மனு இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அவர்கள், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவின் மீது இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். இதையடுத்து எக்கோ நிறுவனம் பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், பாடல்களின் காப்புரிமையை தயாரிப்பாளரிடமிருந்து பெற்றுள்ளோம். அதனடிப்படையில் இந்த பாடல்களை பயன்படுத்த எங்களுக்கு அதிகாரம் இருக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த மனு இன்று நீதிபதிகள் சுப்பிரமணியன் மற்றும் சக்திவேல் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கின் விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி சுப்பிரமணியன் அறிவித்தார். மேலும் இந்த வழக்கை வேறு அமர்வில் பட்டியலிடும் வகையில் வழக்கை தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தும் உத்தரவிட்டுள்ளார். 

Next Story

“இது கொஞ்சம் சர்ச்சையான விஷயம்” - வெளிப்படையாகப் பேசிய வெற்றிமாறன்

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
vettrimaaran speech in kalvan audio launch

ஜி.வி பிரகாஷ், பாராதிராஜா, இவானா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் கள்வன். டில்லி பாபு தயாரித்துள்ள இப்படத்தை பி.வி.ஷங்கர் இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசை பணிகளையும் மேற்கொண்டுள்ளார். இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டீசர் கடந்த ஆண்டு ஜனவரியில் வெளியானது. மேலும் கடந்த வருட கோடையில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் வெளியாகவில்லை. இதையடுத்து இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. படம் வருகிற ஏப்ரல் 4ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

இந்த நிலையில் ட்ரைலர் மற்றும் பாடல் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் வெற்றிமாறனும் கலந்து கொண்டார் . அவர் பேசுகையில், “இந்த படத்துக்கும் எனக்கும் சில தொடர்புகள் இருக்கு. விடுதலை படத்தில் பாராதிராஜா சார் நடிக்க வேண்டும் என அவருக்கு ஹேரெல்லாம் ஷார்ட்டா கட் பண்ணிட்டு லுக் டெஸ்ட் எடுத்தேன். அப்புறம் லொகேஷன் பார்த்துட்டு, அந்த இடம் ரொம்ப குளிரென்றதால அவருக்கு சரியா வராது என சொன்னேன். என்னடா விளையாடுறியா, முடியெல்லாம் இப்புடி வெட்டிவிட்டுட்டு ஒத்துக்கவே மாட்டேன் என சொல்லிவிட்டார். என்ன ஆனாலும் நான் பண்றேன் என்றார். அப்புறம் நான் வேண்டாம் என முடிவெடுத்துவிட்டேன். 

கொஞ்ச நாள் கழிச்சு, டேய், என்ன வேணான்னு சொன்னில்ல, இப்ப இதே கெட்டப்புல என்னை வைச்சி ஒருத்தன் படமெடுக்க போறான் என சொன்னார். அது தான் இந்த படம். நாங்க விடுதலை படம் ஷூட் பண்ண இடத்துல தான் இதே படமும் ஷூட் பண்ணாங்க. பாராதிராஜா சார், ஸ்க்ரீனில் இருக்கும் ஒரு தருணம் கூட ஃபேக்கானதா இருக்காது. அந்த மாதிரி சின்சியரான நடிகர்கள் குறைவாகவே இருக்காங்க. அதனால் தான் அவரை எல்லாருக்கும் பிடிக்குது. எந்த நொடியுமே நடிக்க முயற்சி பண்ணாமல், அந்த இடத்தில் அந்த கதாபாத்திரமாகவே இருப்பதால் தான் அந்த உணர்வை நம்முள் ஏற்படுத்த முடியுது.

இன்னொரு விஷயம். இது கொஞ்சம் சர்ச்சையானது. யானைய வைச்சு எடுத்தாலும் டைனோசரை வைச்சு எடுத்தாலும் திரைக்கதையும், கதையும் நல்லா இருந்தா மட்டும் தான் படம் ஓடும்” என்றார்.