யோகிபாபு ஹீரோவாக நடித்திருக்கும் தர்மபிரபு படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. படக்குழுவினருடன் திரைத் துறை பிரபலங்கள் பலரும் கலந்துகொண்ட அந்த நிகழ்வில் தயாரிப்பாளர் T.சிவாவும் கலந்துகொண்டார். முன்னதாக பேசிய இயக்குனர் முருகேசன் புக் மை ஷோவில் நடக்கும் முறைகேடுகள் பற்றிக் கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளிக்கும் விதமாக T.சிவா பேசும்போது...
“புக் மை ஷோவ் பிரச்சனைக்கும் அரசாங்கத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அது தனியாரால் இயங்குகிறது. அதை எதிர்த்து குரல் கொடுக்கவேண்டியவர்கள் கொடுக்காததால் தான் இந்த பிரச்சனைகள் நடக்கிறது. விரைவில் நிலைமை மாறும், அரசாங்கத்தை எதிர்த்துக் குரல்கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை. அவர்களிடம் போய் கேட்டாலே நமக்கு செய்து கொடுப்பார்கள். அப்படியொரு அரசாங்கம் நடக்கிறது. ஆனால், போய் கேட்ககூடிய தலைமை நம்மிடம் இல்லை. அரசை எதிர்த்துக் குரல்கொடுக்கிறவன் அரசிடமே போய் வேண்டுகோள் வைக்க முடியாது. யாரைக் கூட்டிப் பொய் பேசுவதென்றுத் தெரியாமல் தயாரிப்பாளர்கள் எல்லோரும் அனாதைகளாக நிற்கிறோம். எங்கள் பிரச்சனைக்காக நாங்கள் எங்கே போய் பேசுவது? டிஸ்ட்ரிப்யூட்டர் சங்கத்திலும், ஜேம்பரிலும், எக்ஸிக்யூட்டர் சங்கத்திலும் போய் தனியாக பேசுகிறோம். எங்களுக்கென்று போக இடமில்லை.
நான் உறுதி தருகிறேன், ஒரு ஆறு மாதத்திற்குள் எல்லாம் சரி செய்யப்படும். நான் எப்போதும் சொல்வதுபோல், நம்ம குழந்தைக்கு அடுத்தவாரம் பிறந்த நாள் என்றால் இப்போவே டிரெஸ் எடுக்கணும்னு நமக்கு தோணும், அதுக்கு என்ன அலர்ஜி, என்ன ஒத்துக்கும்னு நமக்குத்தான் தெரியும். நம்ம குழந்தையைப் பார்த்துக்குற பொறுப்பை பக்கத்துவீட்டுக்காரனிடம் கொடுத்தால் என்னவாகும்? அதுபோல தொழில்முறை தயாரிப்பாளர்தான் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக இருக்க வேண்டும். சும்மா ஒரு படம் எடுத்தவரையெல்லாம் தலைவராக்கினால் இப்படித்தான் நடக்கும்.
ரங்கராஜன் படம் எடுக்கிறார் என்றால் அது அவர் நடிப்பதற்காக இல்லை. யோகி பாபுவை நடிக்க வைக்கிறார், படம் ஓட வேண்டும், படத்தின் லாப நஷ்ட பொறுப்புகள் அவருடையது. இப்போ ஞானவேல் ராஜா எத்தனையோ கோடிகளை இழந்து மீண்டும் மீண்டும் படம் எடுக்கிறாரெ, அவர் நடிச்சாரா? இல்லை. தன்னை நடிக்க வைத்து தானே தயாரிக்கிறவர்கள் தயாரிப்பாளர் என்று சொல்லிக்கொள்ள கூடாது. அப்படி ஒருவரை நிர்வாக தலைமைக்கு கொண்டுவந்ததுதான் இந்த சீரழிவுக்கு காரணம். 18 % ஜி.எஸ்.டி கொடுத்துட்டு 8 % வரியும் கொடுக்கிறோம். எதனால்? அரசாங்கத்திடம் கேட்டால் சரி பண்ணிடுவாங்க. கேட்பதற்கு ஆள் இல்லை நம்மிடம்.
இவங்களுக்காக எதுவும் செய்யக்கூடாது என்று அரசாங்கம் நம்மை வெறுக்கிற அளவுக்கு ஒரு தலைமையை நாம் வைத்திருக்கிறோம். எல்லா பொது அமைப்புகளும் அரசாங்கத்தைச் சார்ந்து செயல்பட வேண்டும். அரசாங்கத்தை எதிர்த்து குரல்கொடுத்து அரசியல் பண்ணவேண்டுமென நினைத்தால் அதை வேறெங்காவது போய் செய்யவேண்டும். இந்த அமைப்பில் இருந்துகொண்டு செய்யக் கூடாது. தமிழ் ராக்கர்ஸ் ஐ ஒழிப்பேன் என்று சொன்னவர்களெல்லாம் இப்போது காணோம். இதையெல்லாம் பொறுத்துக்கொள்ள முடியாமல் தான் ஞானவேல்ராஜா கவுன்சிலில் இருந்து வெளியேறினார். அவர் எவ்வளவு பெரிய கேபிள் டிவி காண்ட்ராக்ட்டை கொண்டுவந்தார், அதை ஏன் அமல் படுத்தப்படவில்லை? 1 1/2 கோடி ரூபாய்க்கு அவர் கொண்டுவந்த டீலை ஒப்புக்கொள்ளாத சீர்கெட்ட நிர்வாகம் தயாரிப்பாளர் சங்கத்தில் நடந்துகொண்டிருக்கிறது”இவ்வாறு கூறினார்.