வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், சூரி, கெளதம் வாசுதேவ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் விடுதலை பாகம் 2. எல்ரெட் குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். ஏற்கனவே விடுதலை பாகம் 1 வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றிருந்த நிலையில் இரண்டாம் பாகத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்தது. அந்த எதிர்பார்ப்பை தாண்டி, கடந்த 20ஆம் தேதி இப்படம் வெளியானது. இப்படம் ரசிகரகள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
இப்படத்திற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் தற்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார், அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விடுதலை திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தைக் கண்டு உணர்வு நெகிழ்ச்சியில் மகிழ்ந்தேன். தமிழர் நிலத்தில் உழைக்கும் மக்கள் தங்கள் உரிமைக்காகவும், நிலத்தையும், வளத்தையும் பாதுகாக்கவும் முன்னெடுத்தப் போராட்டங்கள் எல்லாம் எப்படி அடக்கி ஒடுக்கப்பட்டன? அப்போராட்டங்களை முன்னெடுத்த தமிழ்நிலப் போராளிகள் எல்லாம் எப்படி தேச விரோதிகளாக மக்கள் முன் சித்தரிக்கப்பட்டு, சட்டத்தின் முன் குற்றவாளிகளாக எப்படி நிறுத்தப்பட்டனர் என்பதையும் மிகச்சிறப்பாக பதிவுசெய்துள்ளது விடுதலை திரைக்காவியம். உரிமைப்போராட்டங்கள் எப்படி இரத்தம் சிந்திய வன்முறைக்களங்களாக அதிகார வர்க்கத்தால் மாற்றப்பட்டு, மக்கள் மீது திணிக்கப்பட்டன? போராடுகிற மக்கள் ஆட்சியாளர்களால் எப்படி அடக்கி ஒடுக்கப்படுகிறார்கள்? என்பதை இயல்பாகக் காட்டும் புரட்சிக்காவியம்தான் விடுதலை திரைப்படமாகும்.
இதுவரை எந்த வரலாறு தெரிந்துவிடக்கூடாது என்று மூடி மறைத்தார்களோ, எது இந்த மண்ணில் பேசப்படக்கூடாது என்று தடுத்தார்களோ, எது இந்த மக்களுக்குச் சொல்லப்படவே கூடாது என்று தவிர்த்தார்களோ, அதனைத் திரைமொழியில் அன்புத்தம்பி வெற்றிமாறன் வடித்திருக்கிற அரசியல் வரலாற்றுப்பாடம்தான் விடுதலை திரைப்படம். இதுவரை பலரும் சொல்லத்தயங்கிய, சொல்ல பயந்த வரலாற்றை மிகுந்த துணிவுடன் திரைப்படமாக்கியதுடன், தன்னுடைய அசாத்தியமான கலை ஆற்றல் மூலம், அதனை அனைத்து மக்களும் ஏற்கும்படியான உயிரோட்டமிக்க வெற்றிப்படைப்பாக்கி கொண்டு சேர்த்துள்ள தம்பி வெற்றிமாறனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!
தேசிய இனங்களின் விடுதலை, மொழி வழித்தேசியம், தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை, வர்க்க விடுதலை, பெருநிறுவனங்களின் வளச்சுரண்டல், தொழிலாளர் உரிமைகள், சாதியொழிப்பு, பூர்வக்குடி மக்களை அவர்களின் வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றும் அதிகார அடக்குமுறை, அரச வன்முறை, அரசப்பயங்கரவாதம், பெண் விடுதலை, வரலாற்றுப்புனைவு என்று விடுதலை திரைப்படம் திரையில் பேசும் அரசியல் ஒவ்வொன்றும் மக்களுக்கான அவசியப் பாடமாகும். படத்தில் வருகின்ற உரையாடல்கள் ஒவ்வொன்றும் காட்சிக்கான வார்த்தைகளாக மட்டுமல்லாமல், உயர்ந்த அரசியல் தத்துவங்களாக மிளிர்கிறது. அரசியல் தெளிவற்ற மக்கள் அறியாது, திரைமறைவில் நடைபெறும் அரசியல் சூழ்ச்சிகளையும், எந்தச் செய்தி எந்த வடிவில் மக்களைச் சென்றடைய வேண்டுமென்பதை அதிகாரத்தில் இருப்பவர்கள் எப்படி முடிவு செய்கிறார்கள் என்பதையும் விடுதலை திரைப்படம் வெளிப்படுத்தியுள்ளது மிகுந்த பாராட்டுக்குரியது.
எந்த அரசியல் இந்த மண்ணில் நிலைபெறாது என்பதையும், நம்மை ஏமாற்றும் அரசியல் எது? நாம் ஏற்கக்கூடாத அரசியல் எது? என்பதை எடுத்துரைத்து, மக்கள் பங்கேற்புடன் கூடிய தேசிய இன உரிமைக்கான அரசியல்தான் இந்த மண்ணிற்கு இன்றியமையாத தேவை என்பதை ஒருசேர உணர்த்தி வருங்காலத் தலைமுறைக்கு வழிகாட்டும் அரசியல் அறிவுப்பெட்டகமாக விடுதலை திரைப்படம் திகழ்கிறது. அந்த வகையில் சரியான நேரத்தில், மிகச்சிறப்பான கருத்தினை, மிகத்தெளிவாகக் கூறியுள்ள தம்பி வெற்றிமாறனுக்கு என்னுடைய அன்பும், பாராட்டுகளும்!இப்படத்தில் உரையாடல் மௌனித்த இடங்களில் எல்லாம் தன்னுடைய இசையால் புரட்சி செய்துள்ளார் இசை இறைவன் அப்பா இளையராஜா. சோளக்காட்டு சண்டைக்காட்சியில் தொடங்கிப் பதற்றத்தையும், படபடப்பையும் தரும் உச்சக்காட்சிகளில் அதிரும் அவருடைய இசையானது இதயத்துடிப்புகளோடு ஒத்திசைந்து மிரட்சியை ஏற்படுத்துகிறது. இக்கால இளைய மனங்கள் விரும்பும் வகையில் நவீனத்திற்கும் நவீனமாக விடுதலை திரைப்படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் அமைந்திருப்பது எக்காலத்திற்கும் அப்பா இளையராஜாவின் இசை பொருந்தும் என்பதை மீண்டும் ஒருமுறை மெய்ப்பித்துள்ளது.
அன்புத்தம்பி விஜய் சேதுபதி பெருமாள் வாத்தியாராகவே வாழ்ந்துள்ளார். கூத்துப்பட்டறையில் பயின்று, 50க்கும் மேற்பட்ட படங்களில் எத்தகைய நாயகன் வேடம் ஏற்றாலும், அந்த கதைக்கு ஏற்ப, அது தரும் களத்திற்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக்கொண்டு கதை மாந்தனாகவே வாழ்ந்து நம்மையும் படத்தோடு ஒன்றச்செய்யும் அவருடைய கலைத்திறமை, இப்படத்தில் நம்மை இமை அகலாது இருக்கையோடு கட்டிப்போடுகிறது. இது அவருக்கு வாழ்நாள் படம் எனக் கொண்டாடும் அளவுக்கு தலைசிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவருடைய திரைப்பயணத்தில் இப்பாத்திரமும், அதை உள்வாங்கி முழுமையாகச் செய்திருக்கும் அவருடைய பேராற்றலும் என்றென்றும் கொண்டாடப்படும். வர்க்கப் போராட்டக் காட்சியிலும், எதிர்பாராது குண்டு வெடித்துக் கதறும் காட்சியிலும், காதலை திக்கித் திணறி சொல்லும் காட்சியிலும், அரசியல் தத்துவ வகுப்பெடுக்கும் காட்சியிலும், பார்வையால் பேசும் உணர்வுப்பூர்வமான இறுதிக்காட்சியிலும் இதயத்தை இறுகச்செய்கிறார் தம்பி விஜய் சேதுபதி. காடுகளுக்குள் நடந்த படப்பிடிப்பின்போது கடைசிவரை காலில் காலணி அணியாமல்தான் நடித்தார் என்று தம்பி வெற்றிமாறன் கூறியபோது அவரின் அர்ப்பணிப்பை அறிந்து வியந்தேன். தனிப்பட்ட முறையில் அவருக்கு என்னுடைய பாராட்டுக்களும், பெரும் அன்பும்!
தம்பி விஜய் சேதுபதிக்கு இணையாக ஆகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மண் விடுதலைக்கான படத்தில் பெண் விடுதலை பேசும் நாயகியாக ஒளிர்கிறார் மஞ்சு வாரியர். நாள்தோறும் போராட்டக்களத்தில் நிற்கும் போராளிகளைத் திருமணம் செய்துகொண்ட பெண்கள், குடும்பத்தை தூண்களாகத் தாங்கி நின்று புரியும் ஈகங்கள்தான் உண்மையிலேயே ஈடு இணையற்ற புரட்சி என்பதை மஞ்சு வாரியர் தாம் ஏற்ற கதாபாத்திரத்தின் மூலம் உணர்த்தியுள்ளார். அன்புத்தம்பி சூரி தன் மேம்பட்ட நடிப்பினால் மனமெங்கும் நிறைகிறார். கடமைக்கும், கொள்கைக்கும் நடுவில் சிக்குண்டு, மனப்போராட்டத்தில் இருப்பதை அவர் தன் உடல்மொழியிலும், பார்வையிலும் நம்மிடையே கடத்தி தான் ஒரு தேர்ந்த நடிகர் என்பதை நிரூபித்திருக்கிறார். அதிலும் உச்சக்காட்சியில் அவர் பார்க்கும் பார்வை உலகத்தமிழர்களின் உணர்வோடு ஒன்றிணைந்த ஆயிரம் பொருள் பொதிந்தப் பார்வையாகும்.
தம்பி சூரியின் நடிப்புத்திறனையும், வளர்ச்சியையும் கண்டு பெருமிதம் கொள்கிறேன். ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து அடக்குமுறைகளை எதிர்த்துப் போராடும் இளைஞனாக தம்முடைய நடிப்பினால் கருப்பனாக மிரட்டியுள்ள அன்புமகன் கென் கருணாஸ் ஏற்ற பாத்திரத்தை மிகச்சிறப்பாகச் செய்துள்ளார். அவருக்கும் என்னுடைய பாராட்டுகள்! அதிகாரத்தவறுகளின் மொத்த உருவமானப் பாத்திரத்தை ஏற்று, காவல் அதிகாரியாக நடித்திருக்கும் அன்பு நண்பர் சேத்தன் நடிப்புத்திறனால் நம்மைக் கோபப்படுத்தி வெறுக்க வைக்கிறார். அந்தளவுக்குத் தனக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரத்தைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். அரசியல்வாதியாக வாழ்ந்திருக்கும் மாமா இளவரசு, கே.கே. எனும் பொதுவுடைமைவாதிப்போராளியாக வரும் கிஷோர், அதிகாரத் தந்திரமிக்க தலைமைச்செயலாளராக வலம் வரும் ராஜிவ் மேனனில் தொடங்கி, சகோதரர் கௌதம்மேனன், சரவண சுப்பையா, தம்பி போஸ் வெங்கட், அன்புத்தம்பி தமிழ், தம்பிகள் பாலாஜி சக்திவேல், அருள்தாஸ், வின்சென்ட் அசோகன், ஜெயவந்த், மூணார் ரமேஷ், பாவல் நவகீதன், இயக்குநர் அனுராக் காஷ்யப், தம்பி ஜெகதீசபாண்டியன், தம்பி உமாபதி உள்ளிட்ட படத்தில் நடித்துள்ள ஒவ்வொருவரும் போட்டியிட்டு தரமான நடிப்பினை வெளிப்படுத்திப் படத்தை உயிர்ப்பித்திருக்கிறார்கள்.
அடர்ந்த காடு, பனி படர்ந்த மலை, போராட்டக்களங்கள், பல்வேறு காலக்கட்டங்கள், சண்டைக்காட்சிகள், காதல் ததும்பும் காட்சிகள் என அனைத்தையும் கச்சிதமாகக் காட்டியுள்ள தம்பி வேல்ராஜின் ஒளிப்பதிவு ஆங்கிலப் படங்களுக்கு நிகராகப் படத்தை உலகத்தரத்திற்கு உயர்த்தியிருக்கிறது. ஆர்.ராமரின் படத்தொகுப்பும், ஜாக்கியின் கலை இயக்கமும், ஸ்டண்ட் சிவா ,பீட்டர் ஹெய்ன், பிரபு வடிவமைத்த அதிரடியான சண்டைக்காட்சிகளும், உத்தரா மேனனின் காலத்திற்கேற்ற ஆடை வடிவமைப்பும் என படத்தில் பங்காற்றிய அனைத்து கலைஞர்களின் பணியும் விடுதலை படத்தை மாபெரும் வெற்றிப்படைப்பாக்கியுள்ளது. உலகெங்கிலும் வெளியாகி வெற்றி நடைபோடும் விடுதலை திரைப்படம் பார்க்கும் ஒவ்வொருக்குள்ளும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி அநீதிக்கு எதிரான போர்க்குணத்தை நமக்குள் விதைக்கும் வரலாற்று ஆவணம்! தமிழ்த்திரையுலகின் ஓர் ஆகச்சிறந்த படைப்பாளி அன்பு இளவல் வெற்றிமாறன் சம காலத்தில் நம்மோடு இருக்கிறார் என்பதில் பெருமிதமும், திமிரும் வருகிறது. அவருக்கு மீண்டுமொருமுறை என்னுடைய அன்பையும், வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.