Skip to main content

விஜயகாந்த்திற்கு அஞ்சலி செலுத்திய சசிகுமார்

Published on 04/01/2024 | Edited on 04/01/2024
sasikumar tribute to vijayakanth

நடிகர், தேமுதிக நிறுவனத் தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணத்தால் உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். 

மேலும் அவரது இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். விஜயகாந்த்தின் உடலுக்கு ரஜினி, கமல், விஜய், இளையராஜா என பல்வேறு திரைப்பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். சூர்யா, பாரதிராஜா உள்ளிட்ட சிலர் சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டு வருத்தம் தெரிவித்தனர். பின்பு 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் சென்னை கோயம்பேடு அருகே உள்ள தேமுதிக அலுவலகத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.  

இந்த நிலையில் விஜயகாந்த்தின் நினைவிடத்தில் திரைப் பிரபலங்கள் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் சென்னையில் சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில், விஜயகாந்த் உருவப்படத்திற்கு மரியாதை செய்துவிட்டு, விஜயகாந்த்தின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். அந்த வகையில் நடிகரும் இயக்குநருமான சசிகுமார், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் உள்ளிட்டோர் விஜயகாந்த் இல்லத்திற்கு சென்று, அவரின் உருவப்படத்திற்கு முன் அஞ்சலி செலுத்தினர். மேலும் பிரேமலதா விஜயகாந்த்திற்கு ஆறுதல் கூறினர்.

சார்ந்த செய்திகள்

Next Story

விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்குவதில் தாமதம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
padma bhushan award will be presented to Vijayakanth in the next phase of the ceremony.

மத்திய அரசால், இந்திய குடிமகனுக்கான உயரிய விருதுகளாக பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் என மூன்று அடுக்குகளாக இந்த விருதுகள் இருக்கிறது. இந்த விருதுகளுக்காக மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு, சமூக பணி, என பல்வேறு தளங்களில் சிறப்பாக பணியாற்றியவர்களை பரிந்துரை செய்யப்பட்டு பின்னர், விருது வழங்கும் குழுவால் தேர்வு செய்யப்படுகிறார்கள். 

அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு கடந்த ஜனவரியில் அறிவித்தது. இதில் மறைந்த நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக அவருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

padma bhushan award will be presented to Vijayakanth in the next phase of the ceremony.

பத்ம விருதுகள் வழங்கும் விழா, டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (22.04.2024) நடைபெற்ற விழாவில் 3 பத்ம விபூஷன், 8 பத்ம பூஷன் மற்றும் 55 பத்மஸ்ரீ விருதுகளும் வழங்கப்பட்டன. அனைவருக்கும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்கினார். இதில் பிரபல பாடகி உஷா உதூப் மற்றும் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி ஆகியோருக்கு பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும் முன்னாள் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவுக்கும் பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.

நேற்றைய விழாவில் மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்கப்படுவதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு விருது வழங்கப்படவில்லை. அதனால் அடுத்தடுத்த கட்ட விழாக்களில் விஜயகாந்துக்கு விருது வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

அரசியல் வருகை குறித்த கேள்விக்கு சண்முகப்பாண்டியன் பதில்!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
shanmuga pandian press meet

விஜயகாந்தின் இரண்டாவது மகனான சண்முகப் பாண்டியன் சகாப்தம், மதுர வீரன் ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது படைத் தலைவன் படத்தில் நடித்து வருகிறார். டைரக்டர்ஸ் சினிமாஸ் தயாரிப்பில், உருவாகும் இப்படம் காட்டு யானைகளின் வாழ்வியலை மையப்படுத்தி ஆக்‌ஷன் ஜானரில் உருவாகிறது. யு. அன்பு இயக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். மேலும் ராகவா லாரன்ஸ் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். 

இந்த நிலையில் இன்று சண்முகப் பாண்டியன் பிறந்தநாள் காண்கிறார். இதையொட்டி பிரேமலதா விஜயகாந்துடன் விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். இன்று விஜயகாந்த் மறைந்து 100 நாள் நிறைவடைகிறது குறிப்பிடத்தக்கது. விஜயகாந்த இல்லாமல் முதல் பிறந்தநாளைக் காண்கிறார். அஞ்சலி செலுத்திய பின்பு செய்தியாளர்களிடம் பேசினார். 

அப்போது அவரிடம் விஜய பிரபாகரரை போல் அரசியலுக்கு வரும் எண்ணம் உள்ளதா என்ற கேள்வி கேட்கப்பட்ட நிலையில் பதிலளித்த அவர்,  “நான் இப்போதைக்கு சினிமாவில் இருக்கிறேன். அண்ணன் அரசியலில் இருக்கிறார். அப்பாவின் ஒரு துறையை அண்ணன் எடுத்துக் கொண்டார். இன்னொரு துறையை நான் எடுத்துக்கொண்டேன்” என்றார். 

இதனிடையே சண்முகப் பாண்டியனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சிறிய வீடியோ ஒன்றை சர்பிரைஸாக வெளியிட்டுள்ளனர் படைத் தலைவன் படக்குழு. அப்படக்குழுவினரும் சண்முகப் பாண்டியனோடு இணைந்து விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.