இறுதிச்சுற்று மூலம் பிரபலமான நடிகை ரித்திகா சிங், கடைசியாகத் தமிழில் விஜய் ஆண்டனியின் கொலை படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெண்களுக்கு நடக்கும் பாலியல் தொல்லைகள், வன்முறைகள் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து வேதனைப்பட்டுள்ளார். மேலும் அவர்களை எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்ஸ்டாகிராம் பதிவில் வெளியிட்டது, "பெண்கள், இளம் வயது பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்ந்து துன்புறுத்தப்படுவது, சித்திரவதை செய்யப்படுவது, கொடூரமான முறையில் கொலை செய்யப்படுவது என இதுபோன்ற செய்திகளைப் படிக்கும் போது ஒவ்வொரு முறையும் என் இரத்தம் மிகுந்த கோபத்தில் கொதிக்கிறது. அவர்களின் வாழ்க்கை ஒன்றுமில்லை என்பது போல் தூக்கி எறியப்படுகிறது.
ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் இதுபோன்ற ஒன்று நடந்து கொண்டிருப்பதாக வரும் செய்தி என்னை மிகவும் பயமுறுத்துகிறது. நம் நாட்டில் இதுபோன்ற அசிங்கங்கள் அடிக்கடி நடக்கின்றன. மேலும் இந்த வழக்குகளில் பெரும்பாலானவை வெளியில் தெரிவிக்கப்படுவதில்லை என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். இது எப்போது நிறுத்தப்படும்?
அடுத்து நான் சொல்லப்போவது மிகவும் சோகமானது. ஆனால் நாம் அனைவரும் அறிந்த உண்மை. நம்மில் பெரும்பாலோர் அதை அனுபவித்திருக்கிறோம். ஏதோ ஒரு வகையில், நம் அனைவருக்கும் இது நடந்துள்ளது. நம்மில் சிலர் அது நடந்ததை உணரக்கூட முடியாமல் மிகவும் அப்பாவியாக இருந்திருக்கலாம். தயவு செய்து, உங்களை நீங்களே கவனித்துக் கொள்ளவும், உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் வலுவாக இருங்கள். உடற்பயிற்சி செய்யுங்கள், சரியாக சாப்பிடுங்கள், உங்களுக்கு நம்பிக்கையைத் தரும் தற்காப்புக் கலையை கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் இருப்பை மிகவும் வலுவாக ஆக்குங்கள். அவர்கள் உங்களைப் பார்க்கும்போது கூட - அவர்கள் உங்களுடன் தவறாக நடப்பதை பற்றி சிந்திக்க முயற்சித்தால், நீங்கள் அவர்களை அடிப்பீர்கள் என்பதை அவர்கள் அறிவார்கள்.
நீங்கள் ஒரு பெற்றோராக இருந்தால், உங்கள் குழந்தைகளை உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருக்கச் செய்யவும், தற்காப்புக் கலைகள் போன்றவற்றைக் கற்கச் செய்யவும் வேண்டும். இல்லையெனில், அது உங்கள் மகள்களை துணிச்சலாக்காது. நம் குழந்தைகளுடன் இந்த உரையாடல்களைத் தொடங்கும் நேரம் இது. சிறு குழந்தைகளுடன் இதுபோன்ற விவாதங்கள் செய்வது கடினம் என்று எனக்குத் தெரியும், ஏனென்றால் அவர்கள் மிகவும் தூய்மையானவர்கள், அப்பாவிகள் மற்றும் அழகானவர்கள்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அந்த தூய்மை மற்றும் அப்பாவித்தனத்தை தவறாக கையாள்பவர்கள் மற்றும் இதுபோன்ற கேவலமான செயல்களைச் செய்வதற்கு முன் ஒரு துளிகூட அவமானத்தை உணராத அரக்கர்களைக் கொண்ட உலகில் நாம் வாழ்கிறோம். நம்மைப் பாதுகாத்துக் கொள்வதும், ஒருவரையொருவர் பார்த்துக் கொள்வதும், வருங்கால சந்ததியினரைப் பாதுகாப்பதும் நமது பொறுப்பு. அவர்கள் எங்கிருந்து வந்தாலும், ஒருவரையொருவர் மதிக்கக் கற்றுக்கொடுக்கும் வகையில் அவர்களை வளர்ப்பது, காட்சிப் பொருட்கள் போன்று பெண்களைப் பார்க்க வேண்டாம் என்று ஆண்களுக்கு கற்பிக்க வேண்டும். இதுபோன்ற எண்ணங்கள் அனைவரிடத்திலும் இருந்தால் மெல்ல மெல்ல சமூகத்தில் மாற்றம் நிகழும். அதுவரை போராட்டம் தொடரும்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.