Skip to main content

வீரமரணம் அடைந்த பழனியின் குடும்பத்திற்கு பிரபல நிறுவனம் நிதியுதவி!

Published on 17/06/2020 | Edited on 17/06/2020
pazhani


அருணாச்சல பிரதேசத்தைத் தொடர்ந்து லடாக் மற்றும் சிக்கிம் ஆகிய பகுதிகளிலும் வரையறுக்கப்பட்ட எல்லையைத் தாண்டி, இந்தியாவின் சில பகுதிகளைச் சொந்தம் கொண்டாடும் சீனா, அப்பகுதிகளில் ராணுவ நடமாட்டத்தையும் அதிகரித்தது. இதனிடையே கடந்த மே 5-ஆம் தேதி லடாக் எல்லைப் பகுதியில் இந்திய- சீன வீரர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டதாகத் தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் இருநாட்டு ராணுவமும் தங்களது படைகளைக் குவித்து வந்தது. இதன் காரணமாக இருநாடுகளுக்கும் மத்திய போர் பதட்டம் உருவானது.

 

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இருநாட்டு அதிகாரிகளுக்கும் இடையே காணொலிக்காட்சி மூலம் 12 சுற்றுப் பேச்சு வார்த்தைகள் நடந்தன. இதைத் தொடர்ந்து கடந்த 6-ஆம் தேதி இரு நாட்டு ராணுவ உயரதிகாரிகளின் பேச்சுவார்த்தை சீன எல்லைப் பகுதியான மால்டோவில் நடந்தது. இதன்படி பேச்சுவார்த்தை மூலம் இந்தப் பிரச்சனைக்கு அமைதியான முறையில் தீர்வு எட்டப்படும் எனச் சீனா தெரிவித்தது. ஆனால் நேற்று லடாக் எல்லைப்பகுதியில் இந்திய மற்றும் சீன ராணுவத்தினருக்கு இடையே நடைபெற்ற மோதலில் மூன்று இந்திய ராணுவத்தினர் உயிரிழந்தனர். இதன் காரணமாக மீண்டும் இரு நாடுகளுக்கும் இடையே பதட்டம் அதிகரித்துள்ளது.

 

இந்நிலையில், இந்திய ராணுவத்தில் கொல்லப்பட்ட 3 வீரர்களில் ஒருவர் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பழனி என்பது தெரியவந்துள்ளது. பழனிக்கு பத்து வயது மதிக்கத்தக்க மகன் மற்றும் எட்டு வயது மகள் உள்ளனர். மனைவி மற்றும் குழந்தைகள் ராமநாதபுரத்தில் வசித்து வருகின்றனர். பழனியின் வீர மரணம் ராமநாதபுரம் மாவட்டத்தைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

 

பழனியின் மரணம் தொடர்பாக, பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் ட்விட்டரில், “உறைய வைக்கும் குளிரில் காவலுக்குப் பசியுடனும், தாகத்துடனும், குளிருடனும் நின்று, தங்கள் குடும்பத்துக்குக் கதைகள் சொல்ல திரும்பி வரமுடியாத மனிதர்களுக்கு... உங்கள் தியாகத்துக்குத் தலை வணங்குகிறோம். உங்கள் ஆன்மாக்கள் அமைதி அடையட்டும். தமிழ் வீரன் பழனியின் குடும்பத்துக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்.

 

அவர் நம்மில் ஒருவர் போன்றவர். அவர் நம் ரணசிங்கம். ஒரு போர்வீரரின் மரணத்தை எந்தப் பணமும் ஈடு செய்ய முடியாது. ஆனால் இங்கே எங்களால் செய்ய முடிந்த சிறிய உதவி. பழனியின் தியாகத்துக்காக அவரது குடும்பத்தினருக்கு 5 லட்ச ரூபாய் வழங்குகிறோம். அவரது ஆன்மா அமைதி அடையட்டும்” என்று தெரிவித்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்