Skip to main content

"கமல்கிட்ட ஃபோன் பண்ணி கேட்கவா முடியும்" - படப்பிடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்த ரஜினி

Published on 29/07/2023 | Edited on 29/07/2023

 

rajini speech at jailer audio launch

 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஜெயிலர்'. இப்படத்தில் மலையாளம் மற்றும் கன்னடத்தில் முன்னணி நடிகர்களாக இருக்கும் சிவராஜ் குமார், மோகன்லால் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில், இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அடுத்த மாதம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரைக்கு வருகிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. 

 

இதில் ரஜினி பேசுகையில், "பீஸ்ட் படம் ரிலீசானதற்கு பிறகு 20 நாள் கழிச்சு ஷூட்டிங் ஆரம்பிக்கலாம் என முடிவெடுத்தோம். ஆனால் பீஸ்ட் வெளியான பிறகு அதற்கு ரிவியூ சரியாக இல்லை. உடனே எனக்கு சில தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் ஃபோன் பண்ணி, ரிவியூ சுமாரா இருக்கு. நெல்சன் தான் பண்ணனுமா என கொஞ்சம் யோசிச்சு முடிவெடுங்கள் என்றார்கள். என்னடா இப்படி சொல்லிட்டாங்களே என்று நினைத்தேன். 

 

ஆனால் எப்போதுமே டைரக்டர்கள் தோற்க மாட்டார்கள். அவர்கள் எழுதின சப்ஜெக்ட் தான் தோற்றுப்போகும். சப்ஜெக்டில் சரியான நடிகர் தேர்ந்தெடுக்கவில்லை என்றால் அது தோற்றுப் போகும். நெல்சன் மூன்று படம் தான் பண்ணியிருக்கார். அறிவிப்பு வெளியிட்டாச்சு. இதுக்கப்புறம் நான் பண்ணவில்லை என்று முடிவெடுத்தால் அவருடைய எதிர்காலம் என்னவாகும். முடிவெடுக்க வேண்டியது நான் இல்லை. தயாரிப்பாளர்கள் தான். பின்பு ஒரு நாள், ரிவியூ சரியா இல்லையென்றாலும் விநியாகஸ்தர்களுக்கு நல்ல லாபம். நெல்சன் பண்ணுவதில் எந்த தயக்கமும் இல்லை என்றார்கள். 

 

முதல் நாள் படப்பிடிப்பில் ஷாட் முடிந்ததும் கிட்ட வந்து உட்கார்ந்தார். சரி ஏதோ சீன் பத்தி பேசப்போகிறார் என நினைத்தால், உங்க லவ் பத்தி சொல்லுங்க சார், எந்த ஹீரோயினை லவ் பண்ணீங்க என்றார். என்ன... நெல்சன் இது என்றேன். ஆமா சார், நேரடியாகவே உங்களிடம் இருந்து கேட்கணும். கதை எல்லாம் முடிவாகிடுச்சு. இப்போ நம்ம சார்ஜ் ஏத்திக்கணும் சார் என்றார். நீங்க சார்ஜ் ஏத்திக்கிறதுக்கு நான் லவ் பண்ண கதையை சொல்லனுமா... பிக் பாஸ்ல கமல் கிட்ட ஒர்க் பண்ணீங்க...அவர்கிட்ட கேட்டீங்களா... கேட்டேன் சார். சொன்னாரா...எல்லாம் சொன்னார் சார். நான் கமல்கிட்ட ஃபோன் பண்ணி கேட்கவா முடியும். இந்த மாதிரி ஜாலியா பேசிக்கிட்டு இருக்கிற ஆளு டைரக்டர்னு வந்துட்டா ஹிட்லர் மாதிரி ஆகிடுவாரு. என்ன வேணுமோ அதை வாங்கிடுவார்" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்