Skip to main content

"இந்து சமயத்தில் இணைத்த பிறகு என்ன ஆராய்ச்சி" - சரத்குமார் அறிக்கை

Published on 08/10/2022 | Edited on 08/10/2022

 

raja raja cholan hindu controversie sarathkumar report

 

சமீபத்தில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் மணிவிழாவில் திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் கலந்து கொண்டு பேசிய பேச்சு தற்போது பேசும் பொருளாக மாறியுள்ளது. அவர் பேசுகையில், “திருவள்ளுவருக்கு காவி உடை உடுத்துவது போல் ராஜ ராஜ சோழனுக்கு இந்து அடையாளம் கொடுக்கின்றனர்” என பேசியிருந்தார். இதையடுத்து இவரின் பேச்சுக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது. ராஜராஜ சோழன் இந்துதான் என்று ஒருதரப்பும், ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதமே இல்லை என்று ஒரு தரப்பினரும் விவாதித்து வருகின்றனர். 

 

இது தொடர்பாக பல முன்னனி திரை பிரபலங்கள் கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " சிவன், விஷ்ணு, சக்தி, முருகன், சூரியன், விநாயகர் ஆகிய கடவுள்களை வழிபடுபவர்களை கி.பி. 8 – ஆம் நூற்றாண்டில் ஆதிசங்கரர் சைவம், வைணவம், சாக்தம், கெளமாரம், செளரம், கணாபத்தியம், ஸ்மார்த்தம் என ஆறு பிரிவுகளாக பிரித்தவற்றை, இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி சைவம், வைணவம், சமணம், பெளத்தம், சீக்கியம் மற்றும் அனைத்து நாட்டுப்புற சமயங்களையும் உள்ளடக்கி பொதுவாக இந்து சமயம் என வரையறுத்துள்ளது. 

 

சைவ சமயம் இருந்தது உண்மை, வைணவ சமயம் இருந்தது உண்மை. அந்த சமயங்களை இந்து சமயத்தில் இணைத்தது உண்மை எனும் போது இதற்கு மேல் என்ன ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறீர்கள்? இவை அனைத்துமே இறை கொள்கையை அடிப்படையாக கொண்டது. அவரவர் நம்பிக்கைக்கேற்ப இறைவனை வழிபட்டு மதச்சார்பின்மையுடன் செயல்படும் நாட்டில், தொடர்ந்து சர்ச்சைகள் எழுவது வேதனைக்குரியது. நாளைய மனிதன் விண்வெளிக்கு பாதை அமைக்க திட்டமிடும் போது, செவ்வாய் கோள்களில் குடியேற சிந்திக்கும் போது, ராஜ ராஜ சோழன் எந்த மதத்தைச் சார்ந்தவர் என்று விவாதிக்காமல், உலக அதிசயங்களுள் ஒன்றாக வைத்து போற்றக்கூடிய மாபெரும் புகழ்மிக்க தஞ்சை பெரிய கோவிலை மக்களுக்கு அர்ப்பணித்த அந்த மாமன்னன், வீரத் தமிழன் ராஜ ராஜ சோழனின்  புகழை உலகின் எட்டுத்திக்கும் எடுத்துச் செல்வதில் இந்த ஆர்வம் இருந்தால் சிறப்பாக இருக்கும்." என பல நிகழ்வுகளை குறிப்பிட்டுள்ளார் சரத்குமார். 

 

 

 

சார்ந்த செய்திகள்