இந்தியாவில் முன்னணி திரையரங்க நிறுவனமான பி.வி.ஆர். நிறுவனம் கடந்த 2022ஆம் ஆண்டு முதல் மற்றொரு பெரிய நிறுவனமான ஐநாக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல் பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்நிறுவனம் ஒரு அதிரடி திட்டத்தை செயல் படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்நிறுவனம் சார்ந்த திரையரங்குகளில் படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது படம் பிடிக்காமல் பாதியிலே சென்று விட்டால் நாம் செல்லும் நேரத்தை கணக்கில் கொண்டு நமது டிக்கெட் கட்டணத்தில் மீதமுள்ள தொகையயை திருப்பி கொடுக்கும் திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளது.
இது தொடர்பாக பி.வி.ஆர். நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, ஆங்கில ஊடத்திற்கு பேட்டி கொடுக்கையில், “இந்த திட்டம் இன்னும் முழுமை பெறவில்லை. ஆனால் டெல்லி மற்றும் குருகிராம் பகுதிகளில் சில தேர்ந்தெடுக்கப்பட்ட திரையரங்குகளில் சில காட்சிகளுக்கு மட்டும் நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை பயன்படுத்துவதற்கு பார்வையாளர்கள் டிக்கெட் கட்டணத்தை விட 10 சதவீதம் கூடுதலாக கட்டணம் செலுத்தி ரிசர்வ் செய்ய வேண்டும். திரையரங்கில் யார் வந்திருக்கிறார்கள், எந்த இருக்கையில் உட்கார்ந்திருக்கிறார்கள், என்ற விவரத்தை அறிய ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வீடியோ கேமரா மூலம் பதிவு செய்வோம்.
டிக்கெட் லிங்கை பார்வையாளர்களின் சீட்டுடன் கனெக்ட் செய்துவிடுவோம். அதனால் பார்வையாளர்கள் எப்போது வருகிறார்கள், எப்போது வெளியே செல்கிறார்கள் என்பதை சிஸ்டம் மூலம் அறிவோம். அதோடு அந்த சிஸ்டத்தில் எவ்வளவு நேரம் பார்வையாளர்கள் படம் பார்த்துள்ளார்கள் என்ற அடிப்படையில் அவர்களது பணத்தை கொடுப்போம். ஒரு நபர் வெளியேறும் போது திரைப்படத்தில் எஞ்சியிருக்கும் நேரத்தின் அடிப்படையில் அவருக்கு பணம் திரும்ப கொடுக்கப்படும்” என்றார்.