சுகுமார் - அல்லு அர்ஜுன் கூட்டணியில் கடந்த 5ஆம் தேதி வெளியான திரைப்படம் புஷ்பா. இப்படம் இதுவரை ரூ.829 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. இதற்கிடையில் அல்லு அர்ஜுன், ஹைதராபாத்திலுள்ள சந்தியா திரையரங்கில் புஷ்பா 2 பட சிறப்புக் காட்சியைப் பார்க்க சென்றிருந்தார். அப்போது ஏராளமான ரசிகர்கள் அவரை காண சூழ்ந்தனர். அக்கூட்ட நெரிசலில் சிக்கிய ரேவதி(39) என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு வீடியோ வெளியிட்டு இரங்கல் தெரிவித்த அல்லு அர்ஜூன் ரூ.25 லட்சம் இழப்பீடு தரவுள்ளதாகக் கூறினார். இச்சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட தியேட்டர் உரிமையாளர், மேலாளர், பால்கனி மேற்பார்வையாளர் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில் திருநெல்வேலி மாநகர உதவி காவல் ஆணையர் செந்தில் குமார் பணி நேரத்தில் புஷ்பா 2 படம் பார்க்கச் சென்று சர்ச்சையில் சிக்கியுள்ளார். உதவி காவல் ஆணையர் செந்தில் குமாரின் தலைமையில் கடந்த 7ஆம் தேதி டவுண், சந்திப்பு, பாளையங்கோட்டை, மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பெண் காவலர்கள் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ரோந்து வாகனத்துடன் உடையார்பட்டி பகுதியிலுள்ள திரையரங்கம் சென்ற உதவி காவல் ஆணையர் செந்தில் குமார் தன்னுடன் வந்த காவலரை வாகனத்தைப் கவனிக்க சொல்லிவிட்டு திரையரங்கினுள் புஷ்பா 2 படத்தைப் பார்க்கச் சென்றுள்ளார். அந்த நேரத்தில் மாநகர பொறுப்பு காவல் ஆணையர் மூர்த்தி வயர்லஸ் மைக்கில் உதவி காவல் ஆணையர் செந்தில் குமாரைத் தொடர்பு கொள்ள முயற்சித்திருக்கிறார். ஆனால் 15 நிமிடங்களுக்கு மேல் அவரை தொடர்புகொள்ள முடியாமல் இருந்துள்ளது.
அதைத்தொடர்ந்து கட்டுப்பாட்டு அறையிலிருந்த காவலர்கள், உதவி காவல் ஆணையர் செந்தில்குமாரின் தொலைப்பேசி எண்ணுக்கு கால் செய்து தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பிறகு பதற்றத்தில் திரையரங்கைவிட்டு வெளியே வந்த உதவி காவல் ஆணையர் செந்தில்குமார், மாநகர பொறுப்பு காவல் ஆணையர் மூர்த்தியிடம் வயர்லஸ் மைக்கில் பேசியுள்ளார். அப்போது அவர் தச்சநல்லூர் பகுதியில் பணியில் ஈடுபட்டுளேன் என்று பேசியதாகக் கூறப்படுகிறது. ஆனால், உண்மையென்னவென்று அறிந்திருந்த மாநகர பொறுப்பு காவல் ஆணையர் மூர்த்தி, பெண் காவலர்கள் பொறுப்பில் இருக்கும்போது, இவ்வாறு செய்வது சரியா? என்று கண்டித்துள்ளார். வயர்லஸ் மைக்கில் இருவருக்கும் இடையே நடந்த இந்த உரையாடல் மற்ற காவலர்களிடையே பேசுபொருளாகியுள்ளது. கடந்த வாரம் டவுண் பகுதியில் காவலர் மீது ஒரு கும்பல் பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்த முயன்றுள்ளது. இந்த சூழலில் உதவி காவல் ஆணையர் செந்தில்குமாரின் இச்செயல் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.