
மிஷ்கின் தற்போது விஜய் சேதுபதியை வைத்து ‘ட்ரெயின்’ படத்தை இயக்கி வருகிறார். படப் பணிகள் நடந்து வருகிறது. தாணு தயாரிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதியை தவிர்த்து நாசர், ஸ்ருதி ஹாசன்,யூகி சேது, நரேன், கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இப்படத்தை இயக்குவது மட்டுமல்லாமல் மிஸ்கினே இசையமைப்பாளராகவும் பணியாற்றுகிறார்.
இந்த நிலையில் மிஷ்கின், ‘ட்ரெயின்’ படம் குறித்து ஒரு நிகழ்ச்சியில் பேசியுள்ளார். அப்போது படத்தின் கதையை வெளிப்படையாக சொல்லியுள்ளது போல் தெரிகிறது. அவர் பேசியதாவது, “நான் ஒரு 600 தடவை ட்ரெயினில் போயிருக்கேன். அப்போது அதை பார்க்கும் போது ஒரு பெரிய ராட்சத புழு, தன் வயிற்றில் நிறைய குழந்தைகளை சுமந்து கொண்டு தவழ்ந்து போய் ஒரு இடத்தில் துப்புவதாக தெரிகிறது. அதோடு குழந்தைகளை பத்திரமாக ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்தில் விடுகிறதென நம்புகிறேன். என் கதையில் அப்படி ஒரு ராட்சத புழுவில் ஆயிரம் மனிதர்கள் ஏறுகிறார்கள். இறங்குகின்ற இடத்தில் பத்திரமாக இறங்குகிறார்கள். ஆனால் சில பேர் இறந்துவிடுகிறார்கள்.
அந்த பயணத்தில் கதாநாயகன் தன் வாழ்கையை வெறுத்து விட்டு இறப்பை நோக்கி பயணிக்கிறான். அதாவது, கடைசியாக தன் மனைவியின் கல்லறையில் ஒரு செடியை வைத்து விட வேண்டும் என அந்த ட்ரெயினில் ஏறுகிறான். அப்போது அந்த ட்ரெய்னில் நடக்கும் சில விஷயங்களில் நாயகனும் ஈடுபட்டு தன்னை அறியாமல் ஒரு புது வாழ்வை கற்றுக் கொள்கிறான். அவன் சொல்கிறான், இந்த ட்ரெய்னில் நான் பயணிக்கவில்லை என்றால், இந்த மனிதர்களை நான் சந்திக்கவில்லை என்றால், என் வாழ்க்கை நாசமாக போயிருக்கும், ஏன் நான் இறந்து கூட போயிருக்கலாம். இந்த பயணம் ஒரு வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என கற்றுக் கொடுத்தது என்கிறான். இதுதான் படத்தின் கிளைமாக்ஸ்” என்றார்.