Skip to main content

“ஏ.ஆர். ரஹ்மானை யாரும் அந்தக் கண்ணோட்டத்தில் பார்ப்பதே இல்லை” - இளம் இசையமைப்பாளர் தென்மா ஆதங்கம்

Published on 14/09/2022 | Edited on 14/09/2022

 

Music Director Tenma

 

இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, போத்தனூர் தபால் நிலையம், நட்சத்திரம் நகர்கிறது உள்ளிட்ட பல படங்களின் இசையமைப்பாளரான தென்மாவை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்தச் சந்திப்பில் தன்னுடைய அனுபவங்கள் குறித்து அவர் பகிர்ந்து கொண்டதன் சிறு பகுதி பின்வருமாறு....

 

“நட்சத்திரம் நகர்கிறது என்னுடைய கேரியரில் மிக முக்கியமான படம். தனியாளாக இந்த சமூகத்தில் கஷ்டப்பட்டு, இன்று கடின உழைப்பிற்கான பலன் கிடைத்திருக்கிறது. இதை ஒரு தொடக்கமாக பார்க்கிறேன். இந்தப் படத்தில் கமிட்டான போது என்னால் இதைப் பண்ண முடியுமா என்று நிறைய பேர் நினைத்தார்கள். வாழ்க்கையில் பொன்னான வாய்ப்பு அரிதாகவே கிடைக்கும் என்பதால் இதைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது மட்டும்தான் என் மனதில் இருந்தது. 

 

கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் ஆல்பம் பண்ணும்போது சாதிய ரீதியான விமர்சனங்கள் நிறைய வந்தன. நம்முடைய நோக்கம் வேறு என்பதால் அதை நான் பொருட்படுத்தமாட்டேன். இந்த ஆல்பம் பண்ணாத என்றுகூட சிலர் சொன்னார்கள். நான் சின்ன வயதிலிருந்தே பெரியாரை பின்பற்றுபவன் என்பதால் இதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. சிலருக்கு புரிய வைத்திருக்கிறேன். சிலருக்கு நாம் எவ்வளவு சொன்னாலும் புரியாது, அவர்களே ஒருநாளில் புரிந்துகொள்வார்கள் என்று நினைத்துக்கொள்வேன். அதேநேரத்தில், தமிழ்நாட்டில் இதற்கு வரவேற்பில்லை என்றும் சொல்ல முடியாது. தமிழ்நாட்டிலேயே நிறைய விருதுகள் கொடுத்திருக்கிறார்கள். சமகாலத்தில் ஒரு சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தாலும் எங்களுக்கும் நல்ல ஆதரவு கிடைக்கத்தான் செய்கிறது.

 

கானா என்பதே இந்தி வார்த்தைதான். அது ஒரு சமூகத்திற்கான பாடல் அல்ல. ஒரு சமூகத்திலிருந்து வந்த பாடலாக இருக்கலாம். அது முழுக்க முழுக்க உழைக்கும் மக்களின் இசையே. சாதிக்கு எதிரான மனநிலை இன்று எல்லா மக்களிடமும் வந்துவிட்டது. அம்பேத்கரை நிறைய பேர் படிக்க ஆரம்பித்துவிட்டார்கள். 

 

நான் சின்ன வயதிலிருந்தே ஏ.ஆர்.ரஹ்மானின் தீவிரமான ரசிகர். அவரை எப்போதும் இசையுலகில் ஒரு புரட்சியாளராகத்தான் பார்ப்பேன். ஆனால், அந்தக் கண்ணோட்டத்தில் அவரை யாரும் பார்ப்பதில்லை. ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் அவரது இசை மாறிவருகிறது. தொடர்ந்து ஏதாவது செய்துகொண்டே இருக்கிறார். அவரைப் பார்க்கும்போதே நாமும் இப்படி தொடர்ந்து உழைக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். அவருடைய வந்தே மாதரம் ஆல்பம் ரொம்பவும் வித்தியாசமாக இருக்கும். கருத்தம்மா ஆல்பம் இப்போது கேட்டாலும் அப்பவே இதெல்லாம் எப்படி பண்ணார் என்று வியப்பாக உள்ளது”. 

 

 

சார்ந்த செய்திகள்