விக்ரம் பிரபு, அஞ்சலி நாயர், லால், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த வாரம் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் படம் 'டாணாக்காரன்'. காவல் துறையில் பயிற்சியின் போது நடக்கும் அவலங்களைப் பேசும் படமாக வந்துள்ளது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பிரகதீஸ்வரன் பளீச் பேட்டி அவர்களை நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக படத்தில் பணியாற்றிய அனுபவங்களைப் பற்றி பகிர்ந்துள்ளார். . அதில் இருந்து சில தொகுப்பு பின்வருமாறு...
சமூகத்தில் எந்த மாதிரியான படங்கள் தேவை என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், " என்னை பொறுத்த வரை எது உண்மையோ அதை பேச வேண்டும். சினிமாவிற்கு முன்பு நான் நடத்திய மேடை நிகழ்ச்சிகளைப் பார்த்தீர்கள் என்றால் என்னுடையப் பார்வை என்ன என்பது தெரியும். லாஜிக்கே இல்லாமல் படம் எடுப்பது , என்கவுன்ட்டரை நியாயப்படுத்துவது இது போன்ற படங்கள் நன்றாக படமாக்கப்பட்டு இருந்தால் கூட அரசியலா எனக்கு அந்த படங்கள் பிடிக்காது. அந்த மாதிரியான படங்களில் பணியாற்றியவர்கள் மற்றும் கதை எழுதியவர்கள் மீது எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த கோபமும் இல்லை. தப்புனா அது தப்புதான்.
'ஜெய் பீம்' மாதிரியான படங்கள் எனக்கு மட்டுமா பிடிக்குது, உலகுத்துக்கே பிடிக்குது. அதே போல் தான் 'டாணாக்காரன்' படமும் எல்லாருக்கும் பிடிக்குது. இந்த மாதிரியான அரசியல் கண்டிப்பாக பேச வேண்டும். உண்மையை பேசும் போது சரியாக பேசினால் கண்டிப்பாக அந்த படம் மக்களை போய் சென்றடையும். யாரும் பேசவில்லை என்பது தான் இங்கு பிரச்சனை. அந்த உண்மையை சொல்லத்தான் எல்லாரும் முயற்சி செய்கிறோம்.
சில சமயங்களில் அது சொன்னால் தப்பாகிவிடுமோ என்று மறைமுகமாக சொல்லக்கூடிய சூழல் உள்ளது. அதனால் அது யாருக்கும் தெரியவில்லை. ஆனால் 'டாணாக்காரன்' படத்தில் தமிழ் வலுவாக உண்மையைச் சொல்லி இருக்கிறார். காவல் துறையில் பணியாற்றி பின்பு அதில் இருந்து வெளியில் வந்து, 'உள்ள நடப்பது இதான்டா' என்று உண்மையை உடைத்திருக்கிறார் . யாருக்காவது மறுப்பு இருந்தால் தெரிவிக்க சொல்லுங்கள்" எனக் கூறினார்.
இதனை தொடர்ந்து அவரிடம் 'சிங்கம்' மாதிரியான பொழுதுபோக்கு படங்கள் மக்களால் வரவேற்க படுகிறது. அதை நீங்கள் எப்படி பாக்குறீர்கள் என்ற கேள்விக்கு அவர் கூறிய பதில், "ஏன் அப்படி பார்க்கப்படுகிறது என்றால், இந்த சமுதாயத்தில் நல்லவன் வெளியில் தெரிவது கடினமாக உள்ளது. மேலும் அவன் நல்லவன் என்று தன்னை நீட்டித்து கொள்ளக் கடினமாக உள்ளது. அதிலும் காவல்துறையில் நல்லவனாக இருந்தால் அவன் எந்த மாதிரியாக பந்தாடப்படுவான். காவல் துறையில் நேர்மையான அதிகாரி ஒருவர் இருந்தால் அவரின் நிலைமை எப்படி உள்ளது என்பதை நாம் செய்திகளில் பார்த்து வருகிறோம்.
அவர்களை படத்தில் மிகைப்படுத்திப் பொழுதுபோக்காக காண்பிக்கும் போது மக்கள் அதை ஏற்றுக்கொள்கிறார்கள். நேர்மையாக இருந்தால் நல்லாருக்கும் என்பதைச் சினிமா காட்டுது. யதார்த்தத்தில் அப்படி இல்லை. எல்லாவற்றிற்கும் சில வழிமுறை இருக்கிறது ஒரு கட்டமைப்பு உள்ளது. அது ஓரு நேர்மையான அதிகாரியை எப்படி முழுங்க பாக்கும் என்பதை இந்த மாதிரியான படங்களில் சொல்லியிருக்கிறார்கள். ஒரு புறம் பொழுதுபோக்கு படங்களை ரசிக்கும் மக்கள் இருக்கின்றனர். மறுபக்கம் சில படங்கள் கல்வியை எடுத்து சொல்கிறது, அந்த படங்களையும் ரசிக்கும் மக்கள் இருக்கின்றனர்" என கூறினார்.
அதன் பிறகு ஜெய் பீம், டாணாக்காரன் போன்ற படங்கள் தொடர்ந்து வராமல் இருக்க காரணம் என்ன என்ற கேள்விக்கு பிரகதீஸ்வரன் பளீச் பேட்டி அளித்த பதில், "எனக்கு இந்த படம் தான் முதல் ஹிட். அதனால் தெரியவில்லை. நான் சினிமாவை தாண்டி அரசியலாகத்தான் படங்களை பார்க்கிறேன். என் கருத்தை அரசியல் ரீதியாக நான் சொல்கிறேன். சினிமாவில் நான் குழந்தை தான். ஒரு படத்தில் நடித்து விட்டேன் என்பதற்காக என்ன வேணாலும் பேசலாம் என சினிமா கண்ணோட்டத்தில் இருந்து நான் சொல்லவில்லை. பொதுவாக நான் அரசியலை கவனிக்கிறேன், சினிமாவை கவனிக்கிறேன்.
கலை இலக்கிய அமைப்புகளில் இருக்கிறேன். அதிலிருந்து படங்களுக்கு விருதுகள் கொடுக்கிறோம். தேர்ந்தெடுக்கும் குழுக்களில் நான் இருந்திருக்கிறேன். இந்த மாதிரியான படங்களுக்கு தான் கொடுக்கிறோம். ஏன் கொடுக்கிறோம் என எனக்கு ஒரு அரசியல் புரிதல் உண்டு. அதிலிருந்து தான் நான் பேசுகிறேன். அந்த மாதிரி படங்கள் வராததற்கு காரணம் பல சூழ்நிலைகள் இருக்கின்றன. ஒரு சமூகம் எந்த அளவிற்கு கொந்தளிப்பா இருக்குமென்றால் சுதந்திர போராட்ட காலத்தில் தேசிய படங்கள் வந்தது. திராவிட இயக்கங்கள் உருவான பிறகு பெரியாரின் சிந்தனைகள் குறித்த படங்கள் அண்ணா, கலைஞர், எம்.ஆர்.ராதா மற்றும் என்.எஸ்.கே ஆகியோரின் எழுத்துக்களால் வந்தன.
ஒரு சமூகம் கொந்தளிப்பாய் இருக்குமேயனில் அதைப் பிரதிபலிக்கும் வகையில் தான் கலை இருக்க வேண்டும். ஒரு படத்தை நான் எப்படி பார்க்கிறேன் என்றால் சமூகத்திற்கு தேவையுள்ளதாக இருக்க வேண்டும். சாதி கொடுமை இருக்குனு பெரியாருக்கு மட்டும் எப்படி தெரிஞ்சது. தண்ணி பூமியில் இருந்து வருவதை பாறை தடுக்கிறது. அந்த பாறையை தள்ளிவிட்டு மக்களுக்கு தண்ணி வரவேண்டும் என்று நினைக்கும் எண்ணம் உடையவர்களாகத்தான் இயக்குநர்களை நான் பார்க்கிறேன்" என கூறினார்.