Skip to main content

ரோஹித் ஷர்மாவுடன் ஒப்பீடு - பஞ்ச் வசனம் போல் பதில் சொன்ன சிவா

Published on 23/02/2023 | Edited on 23/02/2023

 

 Mirchi Shiva reply to fans compare to his with rohit sharma memes

 

'லார்க்' ஸ்டுடியோஸ் தயாரிப்பில் மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும்'. அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஷா இயக்கும் இந்த படத்தில் மேகா ஆகாஷ், அஞ்சு குரியன், மா.கா.பா ஆனந்த், ஷாரா, மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் நடிக்கின்றனர். 'லார்க்' ஸ்டுடியோஸ் சார்பாக கே.குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார். இப்படம் வருகிற 24 ஆம் தேதி வெளியாகவுள்ளதால் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் படகுழுவினர் பலரும் கலந்துகொண்டு பேசினர். 

 

இயக்குநர் விக்னேஷ் ஷா பி. என். பேசுகையில், ''2016 ஆம் ஆண்டில் ‘ஐபோன் ஸ்ரீயும் அயனாவரம் ரவியும்’ எனும் பெயரில் குறும்படம் ஒன்றை இயக்கினேன். அந்த குறும்படம் தான் தற்போது ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’ என்ற பெயரில் படமாக தயாராகி இருக்கிறது.‌ அனைவருக்குள்ளும் ஒரு திறமை இருக்கும். வாய்ப்பு கிடைத்தால் தான் அந்த திறமை வெளிப்படும். அந்த வகையில் எனக்கு இந்த வாய்ப்பை அளித்த தயாரிப்பாளருக்கு நன்றி" என்றார்.

 

பாடகர் மனோ பேசுகையில், ''சிங்காரவேலன் படத்தில் நடித்த பிறகு இசைஞானி இளையராஜா என்னை அழைத்து, 'மீண்டும் நடிக்கச் சென்றால் உனக்காக பாட்டு காத்துக் கொண்டிருக்காது' என சொன்னார். அதற்குப் பிறகு நடிப்பின் பக்கம் திரும்பிக்கூட பார்க்கவில்லை. ஏனெனில் எந்த பாடல் வெற்றி பெறும் என்று தெரியாது. அதன் பிறகு தயாரிப்பாளர் குமாரிடமும், இயக்குநரிடமும் எப்போது நடிக்க முடியும் என்பதனை தெரிவித்து விடுவேன். அதற்கு ஏற்ப சமரசம் செய்து கொண்டு என்னை நடிக்க வைத்தனர். 

 

‘சிங்காரவேலன்’ படப்பிடிப்பின் போது ஒருமுறை ஆறு மணி அளவில் கமல்ஹாசன் படப்பிடிப்பிற்கு வருகை தந்திருந்தார். இந்த தகவலை இயக்குநர் உதயகுமார் எனக்கு தெரிவிக்கவில்லை. நான் அப்போது 15 நிமிடம் தாமதமாக படப்பிடிப்பு தளத்திற்குச் சென்றேன். அந்த படப்பிடிப்பு தளத்திலிருந்த அனைவரும் ‘வணக்கம்’ வைத்தனர். அதற்கு அடுத்த நாளிலிருந்து படப்பிடிப்பு தளத்திற்கு அரை மணி நேரம் முன்னதாகவே சென்றேன். அதேபோல் இந்தப் படத்திலும் குறிப்பிட்ட நேரத்திற்கு அரை மணி நேரம் முன்னதாகவே சென்று விடுவேன். இதே பாணியை படத்தின் நாயகனான மிர்ச்சி சிவாவும் பின்பற்றினார். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெறும்.” என்றார்.

 

படத்தின் நாயகன் மிர்ச்சி சிவா பேசுகையில், ''இயக்குநர் விக்னேஷ் ஷா போனில் தொடர்பு கொண்டு கதையை விவரித்தார். இந்தப் படத்தில் யார் நடிக்கிறார்கள்? என கேட்டேன். ‘மேகா ஆகாஷ் நடிக்கிறார்’ என சொன்னார்.  படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற பிறகு, ‘நீங்கள் ஷங்கர் அவர் சிம்ரன்’ என்றார். நானும் சரி என்று, ‘சிம்ரன் எங்கே?’ என்று கேட்டேன். ஒரு போனை கொண்டு வந்து கொடுத்தனர். நான் மேகா ஆகாஷ் நாளைக்கு வருவார் என நினைத்தேன். ஆனால் படப்பிடிப்பு முடியும் வரையிலும் மட்டுமல்ல., இதுவரையிலும் அவரை நான் நேரில் பார்த்ததில்லை. சரி இன்றாவது அவர்கள் வருவார்களா என எண்ணி வந்தேன். இங்கும் அவர்கள் வரவில்லை.'' என்றார்.

 

பின்பு மீம்ஸ் குறித்த கேள்வி கேட்கப்பட்ட நிலையில் அதற்கு பதிலளித்த அவர், "நான் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இல்லை. வாழ்க்கை நல்லா சந்தோஷமாக இருக்கிறது. அதனால் சமூக வலைத்தளங்களில் சென்று நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்ற முடிவு தான். என்னை ரோஹித் ஷர்மாவுடன் ஒப்பிடுகிறார்கள். அவர் மிக பெரிய கிரிக்கெட்டர், மேலும் இந்திய அணியின் கேப்டன். அவரை போல் என்னால் கிரிக்கெட் ஆட முடியாது. என்னை போல் அவரால் நடனமாட முடியாது" என்றார்.   

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இவரின் தவறான அணுகுமுறையே மும்பையின் தோல்விக்கு காரணம் - முன்னாள் வீரர் காட்டம்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
His wrong attitude was the reason for Mumbai's defeat - ex-player irfan pathan tells

இவரின் தவறான அணுகுமுறையே மும்பை அணியின் தோல்விக்கு காரணம் என்று முன்னாள் வீரர் இர்பான் பதான் கருத்து தெரிவித்துள்ளார்.

ஐபிஎல்2024 இன் 29ஆவது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் முதலில் பந்து வீச முடிவு செய்தார்.

அதன்படி முதலில் களமிறங்கிய  சென்னை அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை என்றாலும், கேப்டன் ருதுராஜ் மற்றும் சிவம் துபேவின் அதிரடி, சென்னை அணிக்கு கெளரவமான ஸ்கோரை எட்ட உதவியது. கேப்டன் ருதுராஜ் 40 பந்துகளில் 69 ரன்களும், ஷிவம் துபே 38 பந்துகளில் 66 ரன்களும் எடுத்தனர். கடைசி ஓவரில் தோனி அடித்த ஹாட்ரிக் சிக்சர்கள் உதவியுடன் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்தது.

பின்னர் 207 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு ரோஹித், இஷான் இணை வழக்கம்போல அதிரடி துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு இந்த இணை 70 ரன்கள் சேர்த்தது. ஆனால் இந்த இணையை பதிரனா பிரித்தார். இஷான் 23 ரன்களில் வெளியேற, அடுத்து வந்த சூர்யா ரன் எதுவும் எடுக்காமல் முஷ்டபிசுரின் அற்புதமான கேட்சால் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த திலக் வர்மாவுடன் சேர்ந்து ரோஹித் அதிரடியாக அரைசதம் கடந்தார். இந்த இணையும் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. இவர்கள் எளிதில் அணியை வெற்றிக்கு அழைத்து செல்வார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், மீண்டும் பதிரனா இவர்களைப் பிரித்தார். திலக் வர்மா 31 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த கேப்டன் ஹர்திக் 2 ரன்னிலும், டிம் டேவிட் 13 ரன்களிலும், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஷெபர்டு 1 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுபக்கம் ரோஹித் நிலைத்து நின்று ஆடி சதம் கடந்தார். ஆனால் மற்ற வீரர்களின் ஒத்துழைப்பு இல்லாததால் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ரன்களே எடுத்தது. ரோஹித் இறுதிவரை களத்தில் நின்று 105 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தில் நீடிக்கிறது. மும்பை அணி 8 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

தோல்விக்கு ஹர்திக் பாண்டியா கடைசி ஓவர் வீசியதும், அவரின் மந்தமான பேட்டிங்குமே காரணம் என சமூக வளைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

His wrong attitude was the reason for Mumbai's defeat - ex-player irfan pathan tells

இந்நிலையில், ஹர்திக்கின் தவறான அணுகுமுறைதான் தோல்விக்கான முக்கிய காரணம் என்கிற வகையில் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது “ ஆகாஷ் மத்வால் மீது நம்பிக்கை வைக்காமல், டெத் ஓவரில் திறமையில்லாத ஹர்திக் கடைசி ஓவர் வீசி தன் திறமையின்மையைக் காட்டியுள்ளார் ” என்று கூறியுள்ளார். 

அவர் கூறுவது சரிதான் என்று ரசிகர்களும் அவரின் பதிவில் பின்னூட்டமிட்டு வருகின்றனர்.

Next Story

MI vs CSK: எதிர்பார்ப்பைக் கிளப்பிய "எல் கிளாசிக்கோ"

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
MI vs CSK: An "El Clasico" that sparks anticipation

ஐபிஎல்2024 ஆட்டங்கள் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 27 லீக் ஆட்டங்கள் முடிந்து பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. முதல் 4 இடங்களைப் பிடிக்க அனைத்து அணிகளும் போட்டி போட்டு வருகின்றன. பெங்களூரு அணி மட்டும் அனைத்து ஆட்டங்களிலும் வென்றால் பிளே ஆப் என்கிற நிலை தவிர்த்து மற்ற அனைத்து அணிகளுக்கும் பிளே ஆப் செல்ல பிரகாசமான வாய்ப்புகள் உள்ளது.

தொடர்ந்து வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணியும் குஜராத்துடன் தோற்றிருப்பதால், ஐபிஎல் 2024 விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அதற்கு மேலும் விறுவிறுப்பைக் கூட்டும் வகையில் மும்பை மற்றும் சென்னை அணிகள் இன்று மோதவுள்ளன. இந்த இரண்டு அணிகளும் மோதும் இன்றைய ஆட்டம் “ எல் கிளாசிக்கோ “ என்று அழைக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது. எந்த வகையான விளையாட்டாக இருந்தாலும் பொதுவாக இரண்டு பலம் வாய்ந்த அணிகள் மோதும் போட்டியானது “ எல் கிளாசிக்கோ “ என்று அழைக்கப்படும். 

இரு அணிகளும் இதுவரை 36 முறை எதிர்த்து விளையாடியுள்ளனர். அதில் 20 முறை மும்பை அணியும், 16 முறை சென்னை அணியும் வென்றுள்ளனன. மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை - மும்பை அணிகள் இதுவரை 11 முறை மோதியுள்ளன. அதில் 7 முறை மும்பை அணியும், 4 முறை சென்னை அணியும் வெற்றி பெற்றுள்ளன. ஐபிஎல் இறுதி ஆட்டங்களில் இதுவரை இரு அணிகளும் 4 முறை சந்தித்துள்ளன. அதில் மூன்று முறை மும்பை அணியே வெற்றி பெற்றுள்ளது. ஒரு முறை சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது. 2013, 2015, 2019 ஆம் ஆண்டுகளில் நடந்த இறுதி ஆட்டங்களில் மும்பை அணியும், 2010 இல் நடந்த இறுதி ஆட்டத்தில் சென்னை அணியும் வெற்றி பெற்றுள்ளன.

உலக கிரிக்கெட்டில் இந்தியா - பாகிஸ்தான், இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் ஆட்டங்கள் எந்த அளவு விறுவிறுப்பைத் தருமோ அந்த அளவு சென்னை - மும்பை அணிகள் மோதும் ஆட்டங்களிலும் விறுவிறுப்பு இருக்கும்.

ஐபிஎல் 2024 இன் தொடக்கத்தில் இருந்தே சென்னை அணி சிறப்பாக ஆடி வருகிறது. மூன்று ஆட்டங்களில் வென்று புள்ளிகள் பட்டியலில் 3 ஆவது இடத்தில் இருந்து வருகிறது. கேப்டன்சி பிரச்சினை, அணிக்குள் பிளவு என காரணங்கள் கூறப்பட்டு வந்த மும்பை அணி, முதல் மூன்று ஆட்டங்களில் தோற்று புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்திற்கு சென்றது. ஆனால், கடந்த இரண்டு ஆட்டங்களாக சிறப்பாக விளையாடி புள்ளிகள் பட்டியலில் தற்போது 7 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இரு அணிகளும் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சம பலத்தில் உள்ளது. இன்று வெற்றி பெற்று முதல் 4 இடங்களில் தொடர்ந்து நீடிக்க சென்னை அணியும், இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று முதல் 4 இடங்களுக்குள் முன்னேற மும்பை அணியும் முயற்சிக்கும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் சுவாரசியத்திற்குக் குறை இருக்காது. போட்டியானது மும்பை வான்கடே மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7.30க்கு தொடங்கவுள்ளது.