Skip to main content

“இனிமேல் அப்படி இருக்கக் கூடாது” - விஜய்க்கு ராஜன் வழங்கிய அறிவுரை

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
krajan advice to vijay for his politival entry

விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது புதுச்சேரியில் நடந்து வருகிறது. இதனிடையே தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார். மேலும் கடைசியாக தான் ஒப்புக்கொண்டுள்ள ஒரு படத்தில் நடித்து முடித்துவிட்டு முழு நேர அரசியல் பணிகளில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றி கழகம் எனத் தனது கட்சிக்குப் பெயர் வைத்துள்ளதாக சமீபத்தில் அறிவித்த விஜய், அதை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளார். 2024ல் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் கூறியுள்ளார். விஜய்யின் அரசியல் வருகைக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில் விஜய்யின் அரசியல் வருகை குறித்து நினைவெல்லாம் நீயடா பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய தயாரிப்பாளர் கே. ராஜன், விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து சில அறிவுரைகளையும் வழங்கியுள்ளார். அவர் பேசுகையில், “அதிக சம்பளம் வாங்கும் விஜய் தற்போது புதிதாக தலைவர் ஆகியிருக்கிறார். தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியிருக்கிறார். அவருக்கு தமிழ் திரையுலகம் சார்பில் வாழ்த்துகிறேன். அவர் வெற்றி பெற வேண்டும் அல்லது முதலமைச்சராக வேண்டும் என்ற எண்ணத்தோடு ஆரம்பித்தால், அதற்கென சில வழிகள் இருக்கிறது. கட்சி ஆரம்பித்தவர்கள் எல்லாம் காணாமல் போனதை பார்க்கிறோம்.  

ஆனால் எம்.ஜி.ஆர் முதலமைச்சராகி விட்டார் என்றால், அவரது அடிச்சுவரை கூட தொடுவதற்கு இன்று யாரும் இல்லை. அவர் காங்கிரஸில் முதலில் இருந்து, திமுக வந்தார். அங்கு உழைத்தார், மக்களை சந்தித்தார். கிராமம் முழுவதும் இறங்கி மக்களோடு மக்களாக வாழ்ந்தார். தன்னுடைய வருவாயை ஏழை மக்களுக்காக அர்ப்பணித்தார். காரணம் அவர் சிறு வயதிலே சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டார்.  அந்த கஷ்டம் ஏழைகள் படக்கூடாது என பாடுபட்டார்.  தம்பி விஜய்க்கு சொல்கிறேன். நீங்கள் வெற்றி பெற வேண்டும். எம்.ஜி.ஆர் செய்ததில் 15 அல்லது 20 சதவீதம் தொண்டு செய்ய வேண்டும். இறங்கி வந்து மக்களோடு பழகுங்கள். மேடையில் இருந்து கொண்டு புஸ்ஸி ஆனந்தை அறிக்கை வெளியிட சொன்னால், அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இனிமேல் நீங்கள் அப்படி இருக்கக் கூடாது.  

நீங்கள் என்ன கொள்கை வகுக்கப் போகிறீர்கள், அதை எப்படி மக்களிடம் சேர்க்க போகிறீர்கள் என்பதை வைத்து மக்கள் ஆதரவு கிடைத்தால் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். யாரையும் நம்பிடாதீர்கள், நேரடியாக வாருங்கள். காமராஜ், அம்பேத்கர், பெரியாரை படி என்று சொன்னீர்கள். இன்னொன்றும் சொல்கிறேன், அண்ணா, கலைஞரை, எம்.ஜி.ஆரைப் படியுங்கள். சிறந்த தலைவராக வரலாம்” என்றார்.

சார்ந்த செய்திகள்