கிச்சா சுதீப் நடிப்பில் அனுப் பண்டாரி இயக்கத்தில் ஃபேண்டஸி ஆக்ஷன் அட்வெஞ்சர் ஜானரில் உருவாகி உள்ள படம் 'விக்ராந்த் ரோணா'. 3டி வடிவில் கன்னடம், இந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு என ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் ஜூலை 28-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட கிச்சா சுதீப்பிடம் கே.ஜி.எஃப் படங்களுக்கு பிறகு கன்னட சினிமாவிற்கு மிகப்பெரிய மரியாதை கிடைத்துள்ளதே, அதை எப்படி பார்க்கிறீர்கள் எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த கிச்சா சுதீப், “ஒரு ஊரில் ஒரு கோவில் உள்ளது. அந்தக் கோவிலுக்கு ஒருவர் சென்றுவிட்டுவந்து அந்தக் கோவிலில் வேண்டியதால் நினைத்தது கிடைத்தது என்று சொன்னால் உடனே அந்தக் கோவிலின் மீது மரியாதை கூடும். அந்தக் கோவில் நீண்ட காலமாக அங்குதான் இருக்கிறது. எனவே அந்தக் கோவிலின் மீது குற்றமில்லை. நீங்கள் அந்தக் கோவிலுக்குத் தாமதமாக மரியாதை கொடுக்க ஆரம்பித்திருக்கிறீர்கள், அவ்வளவுதான். அந்தக் கோவில் எப்போதுமே தன்னுடைய சிறப்பைக் கொண்டிருந்தது. நீங்கள் அதுபற்றி தாமதமாக கேள்விப்பட்டுள்ளீர்கள். எல்லாவற்றுக்கும் ஒரு நல்ல நேரம் வரவேண்டுமல்லவா, தற்போது கன்னட சினிமாவிற்கு கிடைத்துள்ள மரியாதையை அப்படித்தான் பார்க்கிறேன்” எனத் தெரிவித்தார்.