
முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் விஷ்ணு மஞ்சு கதை எழுதி மற்றும் திரைக்கதை அமைத்து அவரே முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள தெலுங்கு திரைப்படம் ‘கண்ணப்பா’. ட்வென்டி ஃபோர் பிரேம்ஸ் ஃபேக்டரி மற்றும் ஏவிஏ என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் தயாரித்துள்ள இப்படத்தில் மோகன் பாபு, பிரபாஸ், மோகன்லால், அக்ஷய் குமார், சரத்குமார், காஜல் அகர்வால், பிரம்மானந்தம், மதுபாலா, ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்ட இன்னும் சில பிரபலங்கள் நடித்துள்ளனர்.
சிவபெருமானின் பக்தரான கண்ணப்பரின் புராணக் கதையை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதா சொல்லப்படும் நிலையில் படக்குழுவினர் இப்படத்தின் உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர். இப்படத்தின் டீசர் கடந்த ஆண்டு வெளியான நிலையில் படத்தின் இரண்டாவது டீசர் சமீபத்தில் வெளியானது. இப்படம் ஐந்திற்கும் மேற்பட்ட மொழிகளில் அடுத்த மாதம் 25ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிகளை படக்குழு தொடங்கியுள்ளது. அந்த வகையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட படக்குழுவினர் படம் குறித்து பல்வேறு விஷயங்களை பேசினர். அப்போது நடிகர் ரகு பாபு, பார்வையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். அவர் பேசியதாவது, “கண்ணப்பா படத்தை யாராவது ட்ரோல் செய்தால், அவர்கள் சிவபெருமானின் கோபத்திற்கும் சாபத்திற்கும் ஆளாக நேரிடும்” என்றுள்ளார். இவரது பேச்சு தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.