ஹன்சிகா நடிப்பில் 50வது படமாக உருவாகும் 'மஹா' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகின. அதில் ஹன்சிகா சாமியார் வேடமிட்டு வாயில் சுருட்டு புகைக்கும்படியும் ஒரு புகைப்படம் வெளியானது. இந்நிலையில் அந்த ஹன்சிகா புகைப்பிடிக்கும் புகைப்படம் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. மேலும் இதை எதிர்த்து ஹன்சிகா மற்றும் இயக்குநர் மீது பா.ம.க பிரமுகர் வழக்கு தொடர்ந்துள்ளார். மஹா படத்தின் போஸ்டர் இந்துக்களின் மத நம்பிக்கைகளை புண்படுத்துவதாகவும், இளம்பெண்களை திசைதிருப்பும் விதமாகவும் உள்ளது என்று மனுவில் அவர் கூறியுள்ளார். இந்த வழக்கு குறித்து இயக்குநர் ஜமீல் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்...
"ஒரு இயக்குனராக புதிதாக ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதே எனது நோக்கம். சாதி அல்லது மதம் தொடர்பாக யார் மனதையும் புண்படுத்த நினைக்கவில்லை. நான் இந்து, முஸ்லிம் என்பதை விட மனிதம் மீது நம்பிக்கை வைத்துள்ளேன். புகைப்பிடிக்கும் படத்தை ஒரு கதாபாத்திரமாகவே பார்க்க வேண்டும். தயவு செய்து சாதி, மத கோணத்தில் அணுக வேண்டாம். கோர்ட்டில் தொடர்ந்துள்ள வழக்கை சந்திப்போம். இதுகுறித்து வக்கீல்களுடன் ஆலோசித்து வருகிறோம்" என்று விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் நடிகை ஹன்சிகா இதுகுறித்து பேசியபோது...."மஹா எனது 50வது படம். அந்த படம் பெரிய அளவில் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்கு ஏற்ப படத்தின் போஸ்டர் பற்றி பேசுகிறார்கள். இது ஒரு சாம்பிள்தான். இன்னும் நிறைய விஷயங்கள் படத்தில் உள்ளன" என்றார்.