Skip to main content

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் நடிகை ஹேமமாலினிக்கு விருது

Published on 22/11/2021 | Edited on 22/11/2021

 

 indian best personality award for actress hema malini at IFFI 2021

 

சிறந்த படைப்புகள், கலைஞர்கள் என திரைத்துறையில் சாதித்தவர்களை அங்கீகரிக்கும் விதமாக ஆண்டுதோறும் இந்தியாவில் சர்வதேச திரைப்பட விழா நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான 52வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் கடந்த சனிக்கிழமை (20.11.2021) அன்று தொடங்கி நடைபெற்றுவருகிறது. மத்திய விளையாட்டு மற்றும் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தொடங்கிவைத்த இவ்விழா, வரும் 28ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. இதில், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், நடிகர் சல்மான் கான், நடிகை சமந்தா  உட்பட பல திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டனர்.  

 

இவ்விழாவில், நடனம், இயக்கம், நடிப்பு, தயாரிப்பு என சினிமாத் துறையில் பன்முகத் திறமைகொண்ட நடிகை ஹேமமாலினிக்கு சிறந்த இந்திய திரைப்பட ஆளுமை விருது வழங்கப்பட்டுள்ளது. இதனை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் இணை அமைச்சர் எல். முருகன் இருவரும் வழங்க ஹேமமாலினி பெற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து, ஹாலிவுட் திரைப்பட இயக்குநர்களான இஸ்த்வான் சாபோ, மார்ட்டின் ஸ்கோர்செஸி ஆகியோருக்கு ‘சத்யஜித்ரே வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கப்பட்டது.

 

இந்த திரைப்பட விழாவில் ஓடிடி தளத்தில் வெளியான படங்களும் திரையிடப்படவுள்ளன. அந்த வகையில், தமிழில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் இணைந்து தயாரித்த ‘கூழாங்கல்’ திரைப்படமும், இயக்குநர் ஜெயச்சந்திரன் ஹாஸ்மி இயக்கத்தில் வெளியான 'ஸ்வீட் பிரியாணி' குறும்படமும் திரையிடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஹேமமாலினி குறித்து சர்ச்சை பேச்சு; கார்கேவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Election commission notice to Kharge on Controversy Talks About Hema Malini

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில், 80 மக்களவைத் தொகுதிகள் கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில், ஏப்ரல் 19, ஏப்ரல் 26, மே 7, மே 13, மே 20, மே 25, ஜூன் 1 என ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. உத்தரப் பிரதேச மாநிலம், மதுரா தொகுதியில், ஏற்கெனவே இரண்டு முறை எம்.பி.யாக வெற்றி பெற்ற நடிகையும், அரசியல்வாதியுமான ஹேமமாலினி, இந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க சார்பில் அதே தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். ஹேமமாலினி போட்டியிடும் மதுரா தொகுதியில், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால், அந்த தொகுதியில் எம்.பி. ஹேமமாலினி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், பா.ஜ.க சார்பில் மதுரா தொகுதியில் ஹேமமாலினி போட்டியிடுவதை, காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான சுர்ஜேவாலா விமர்சனம் செய்திருந்தார். அப்போது அவர், ஹேமமாலினி குறித்து பேசியது, தற்போது சர்ச்சையாக வெடித்துள்ளது. இது தொடர்பாக பா.ஜ.க வெளியிட்டிருந்த வீடியோவில் பேசும் சுர்ஜேவாலா, ‘தங்கள் குரலை அந்த மக்கள் பிரதிநிதிகள் எதிரொலிப்பார்கள் என்ற நம்பிக்கையில் தேர்வு செய்கிறார்கள். ஆனால் ஹேமமாலினியோ...’ என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட பா.ஜ.க, ‘ஹேமமாலினிக்கு எதிராக சுர்ஜேவாலா பேசியது ஒட்டுமொத்த பெண்களையும் அவமதிக்கும் வகையில் உள்ளது. எனவே அவர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளனர்.

Election commission notice to Kharge on Controversy Talks About Hema Malini

இதற்கிடையே, இந்த விவகாரம் குறித்து பேசிய ஹேமமாலினி, “காங்கிரஸ், பிரபலமானவர்களையே குறி வைக்கிறது. ஏனென்றால், பிரபலமற்றவர்களை குறிவைத்து பேசினால், அவர்களுக்கு எந்த பயனும் இருக்காது என்ற காரணத்தினால் தான். பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்பதை பிரதமர் நரேந்திர மோடியிடம் இருந்து அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

இதனையடுத்து, ஹேமமாலினி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் கூறப்படும் சுர்ஜேவாலாவை கண்டிக்கும் விதமாக தேர்தல் ஆணையம், காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், ‘மேற்கூறிய கருத்துக்கள் கண்ணியமற்றவை, கொச்சையானவை, நாகரீகமற்றவை என்பதை சொல்லத் தேவையில்லை. அத்துடன் ஹேமமாலினிக்கு பெரும் அவமானத்தையும், அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு அவமரியாதையையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அரசியல் அமைப்புகளில், பொது வாழ்வில் உள்ள பெண்கள் மற்றும் பொதுவாக அனைத்துப் பெண்களின் கெளரவம் மற்றும் கண்ணியத்துக்கும் கேடு விளைவிக்கிறது. தேர்தல் ஆணையம், உங்கள் மட்டத்தில் கட்சியின் கவனத்திற்குக் கொண்டு வந்த போதிலும், இந்திய தேசிய காங்கிரஸின் பிரச்சாரக்காரர்கள், இன்னும் பெண்களின் கௌரவம் மற்றும் கண்ணியத்தை அவமதிக்கும் வார்த்தைகளில் ஈடுபடுகிறார்கள் என்பது துரதிர்ஷ்டவசமானது’ என்று நோட்டீஸ் அனுப்பி கண்டனம் தெரிவித்துள்ளது.

Next Story

சர்வதேச திரைப்பட விழாவில் உ.பி. மாநிலத்திற்கு விருது

Published on 30/11/2021 | Edited on 30/11/2021

 

Uttar Pradesh declared most friendly state for cinema shooting

 

சிறந்த படைப்புகள், கலைஞர்கள் என திரைத்துறையில் சாதித்தவர்களை அங்கீகரிக்கும் விதமாக ஆண்டுதோறும் இந்தியாவில் சர்வதேச திரைப்பட விழா நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான 52வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நடைபெற்றது. இவ்விழாவில் பல்வேறு மொழி திரைப்படங்கள் மற்றும் குறும்படங்கள் திரையிடப்பட்ட நிலையில், தமிழில் இருந்து ‘கூழாங்கல்’ திரைப்படமும், ‘ஸ்வீட் பிரியாணி’ குறும்படமும் திரையிடப்பட்டன.

 

இவ்விழாவில் நடிகை ஹேமமாலினி, ஹாலிவுட் திரைப்பட இயக்குநர்கள் இஸ்த்வான் சாபோ, மார்ட்டின் ஸ்கோர்செஸி உள்ளிட்ட பலருக்கு விருது வழங்கப்பட்டது. இதையடுத்து, இந்தியாவில் சினிமா படப்பிடிப்பு நடத்த உகந்த மாநிலமாக உத்தரப்பிரதேசம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விருதை மத்திய விளையாட்டு மற்றும் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் வழங்க, உ.பி. மாநிலத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் நவ்நீத் சேகல் பெற்றுக்கொண்டார்.