
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஆதி. தொடர்ந்து மீசைய முறுக்கு, நட்பே துணை உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். கடைசியாக இவர் நடிப்பில் 'வீரன்' படம் வெளியானது. இப்போது ஐசரி கணேஷ் தயாரிப்பில் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கும் 'பி.டி சார்' படத்தில் நடித்து வருகிறார்.
கடந்த மார்ச் அன்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் தான் டாக்டர் பட்டம் முடித்துள்ளதாக தெரிவித்திருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நான் பி.ஹெச்டி முடித்துள்ளேன். ஆனால் படிச்சு வாங்கின டாக்டர் பட்டம். அதனால் டாக்டர் ஹிப் ஹாப் தமிழா என்றே அழைக்கலாம். இசைத் துறையில் (Music Entrepreneurship) முடித்துள்ளேன். எனக்கு தெரிந்து இந்தியாவில் இந்த துறையில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்றுள்ளது இதுதான் முதல் முறை. இதை முடிக்க கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் ஆகிவிட்டது" என்றார்.
இந்நிலையில் கோவை பாரதியார் அரசுப் பல்கலைக்கழகத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி கையில் இசைத் துறையில் (Music Entrepreneurship) என்ற பிரிவில் டாக்டர் பட்டம் வாங்கியுள்ளார் ஆதி. பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "5 வருஷம் ஆராய்ச்சி செய்தேன். கடந்த வருஷம் முடித்தேன். இந்த வருஷம் வாங்கிவிட்டேன். நடித்துக்கொண்டே ஆராய்ச்சி செய்ததால் கொஞ்சம் கடினமாக இருந்தது. முனைவர் பட்டம் கவர்னர் கையில் தான் வாங்க வேண்டும். வேறெதுவும் மாற்றில்லை. சந்திரயான் 3 வெற்றி இந்தியாவுக்கே பெருமை" என்றார்.