Skip to main content

ஐஸ்வர்யா ராஜேஷின் ஃபர்ஹானா - எதிர்ப்பின் காரணமாக திரையரங்கம் எடுத்த முடிவு

Published on 12/05/2023 | Edited on 13/05/2023

 

farhana movie banned in thiruvarur

 

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் எஸ்.ஆர். பிரபு தயாரிப்பில் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'ஃபர்ஹானா'. இப்படத்தில் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ் மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியானது. இப்படம் மத உணர்வுகளுக்கு எதிராக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் இப்படத்தை தடைசெய்ய வேண்டும் என்று சில இஸ்லாமிய அமைப்புகள் கூறி வந்தன. 

 

இதையடுத்து படத் தயாரிப்பு நிறுவனம் இந்த குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டது. அதில், "மதநல்லிணக்கம், சமூக ஒற்றுமை, அன்பு ஆகிய உணர்வுகளுக்கு முக்கியத்துவம் வழங்கும் திரைப்படங்களைத் தயாரித்து வெளியிட்டு வரும் எங்களுக்கு, அரசால் முறையாக தணிக்கைச் செய்யப்பட்டு வெளியாக உள்ள ஃபர்ஹானா திரைப்படம் குறித்து ஒரு சிலர் உருவாக்கும் சர்ச்சைகள் வேதனையைத் தருகிறது. ஃபர்ஹானா திரைப்படம் எந்த மதத்திற்கும், உணர்வுகளுக்கும் எதிரானது அல்ல" எனக் குறிப்பிட்டிருந்தது. 

 

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் இன்று (12.05.2023) வெளியாகியுள்ள ஃபர்ஹானா படம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. ஆனால் திருவாரூரில் உள்ள ஒரு திரையரங்கில் இப்படத்தை திரையிட மறுத்துள்ளனர். இன்று திரையிடத் திட்டமிட்டிருந்த அந்த நிர்வாகம் திடீரென்று அனைத்து காட்சிகளையும் ரத்து செய்துள்ளது. அப்பகுதியில் இப்படத்திற்கு எதிர்ப்பு அதிகமாக இருப்பதால் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்