Skip to main content

"‘ஆட்டோகிராஃப் 2’ இருக்கு; ஆனால் எடுக்க மாட்டேன்" - இயக்குநர் சேரன் கூறும் காரணம்!

Published on 22/12/2021 | Edited on 22/12/2021

 

cheran

 

நந்தா பெரியசாமி இயக்கத்தில் கௌதம் கார்த்தி, சேரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ திரைப்படம், வரும் டிசம்பர் 24ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் சேரனை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்த சந்திப்பில் அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

"‘ஆனந்தம் விளையாடும் வீடு’ படத்தில் மூத்த சித்தப்பாவாக நடித்துள்ளேன். அனைவரும் தங்கள் வாழ்க்கையோடு பொருத்திப் பார்க்கக்கூடிய படமாக இந்தப் படம் இருக்கும். குடும்பத்தோடு பார்த்து ரசித்து நம்முடைய நினைவுகளை அசைபோடுவதற்கு வாய்ப்புள்ள படமாக இந்தப் படம் வந்துள்ளது. 

 

நான் இயக்கிய படங்கள் இன்றைக்குள்ள இளைஞர்களிடமும் ரீச் ஆகியுள்ளது. ‘வெற்றிக்கொடி கட்டு’ படத்தில் வரும் விவேகானந்தர் தெரு, நம்பர் 6 காமெடி இன்றைக்கும் மீம்ஸ்களாக வந்துகொண்டிருக்கின்றன. அடுத்தடுத்த காலகட்டத்திற்கு என் படம் நகர்கிறது என்பது எனக்கு சந்தோசம்தான். 

 

ஒரு கதை ரசிகர்களைத் திருப்திபடுத்தும், ஒரு கதை ரசிகர்களுக்கு ஏதோ ஒரு வகையில் பயன்படும் என்று இருந்தால் மட்டும்தான் அந்தக் கதையை நான் தேர்வு செய்வேன். அதுதான் என்னுடைய படங்களின் சூட்சமம். ‘திருமணம்’ என்றொரு படம் எடுத்தேன். செலவு செய்து திருமணம் செய்ய வேண்டாம் என்று அந்தப் படத்தில் சொல்லவில்லை. திருமணத்திற்குக் கடன் வாங்கி செலவழிக்க வேண்டாம் என்பதையே அந்தப் படம் பேசியது. 

 

‘ஆனந்தம் விளையாடும் வீடு’ படத்திலுள்ள ஒரு அக்கா கதாபாத்திரம் என் மூத்த அக்காவை நினைவுபடுத்தியது. அவருடைய நடை, உடை, அண்ணனுக்காக இறங்கிச் செல்தல் என அனைத்தும் பொருந்திப்போனது. இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரம், கௌதம் கார்த்தி, சரவணன், டேனியல் பாலாஜி உட்பட  20 முக்கிய கதாபாத்திரங்கள் உள்ளன. அந்த 20 கதாபாத்திரங்களுமே நம் பக்கத்து வீட்டில் இருப்பவர்களைப்போலவே இருக்கும். மனித உறவுகளின் சங்கமமாக ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ திரைப்படம் உருவாகியுள்ளது. 

 

ad

 

வயதாகி சாகும்வரை நான் படம் இயக்குவேன். ‘தமிழ்க்குடிமகன்’, என்னுடைய உதவியாளர்களின் இரண்டு கதை உட்பட நிறைய படங்கள் நடிப்பதற்கு கைவசம் உள்ளன. அதனால் அதை முடித்துவிட்டு மீண்டும் திரைப்பட இயக்கத்தில் கவனம் செலுத்தவுள்ளேன். சோனி நிறுவனத்திடம் பேசிக்கொண்டிருக்கிறேன். விரைவில் சோனிக்காக ஒரு படம் இயக்கவுள்ளேன். 

 

என்னுடைய எல்லா படங்களுக்கும் இரண்டாம் பாகத்திற்கான கதை உள்ளது. ‘வெற்றிக்கொடி கட்டு’, ‘ஆட்டோகிராஃப்’, ‘தவமாய் தவமிருந்து’க்கும் இரண்டாம் பாகம் உள்ளது. வெற்றியடைந்த உடனேயே இரண்டாம் பாகம் எடுப்பதுதான் சரி. காலம்கடந்து எடுத்தால் இன்றைய காலத்து ரசிகர்கள் மத்தியில் எந்த அளவிற்கு வரவேற்பு இருக்கும் என்று தெரியாது. புதிதாக யோசிக்க முடியாதவர்கள்தான் இரண்டாம் பாகம் எடுக்கிறேன் என்று வருவார்கள். எனக்கு அந்தப் பிரச்சனை இல்லை. இன்றைக்குப் புதிது புதிதாக சமூகத்தில் பிரச்சனைகள் வருகின்றன. அதைப் படமாக்கலாம் என்று முடிவெடுத்துதான் இந்த இரண்டாம் பாகத்திற்குள் நான் செல்லவில்லை".

 

 

சார்ந்த செய்திகள்