தெலுங்கு திரையுலகின் முன்னணி பட தயாரிப்பாளரான தில் ராஜு, தாய் தந்தையின்றி கஷ்டத்தில் வாழ்ந்து வந்த மூன்று குழந்தைகளை தத்தெடுத்துள்ளார்.
ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஆத்மகூர் பகுதியைச் சேர்ந்த மனோகர், யஷ்வந்த் மற்றும் லாஸ்யா என்ற மூன்று குழந்தைகளின் தந்தை சில வருடங்களுக்கு முன்பு இறந்துபோனார். தாயாரின் பராமரிப்பில் இக்குழந்தைகள் வளர்ந்து வந்த நிலையில், சமீபத்தில் தாயும் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
தாய் தந்தையின்றி கஷ்டத்தில் வாடும் நிலைக்கு அக்குழந்தைகள் தள்ளப்பட்டனர். குழந்தைகளின் அவலநிலையை அறிந்த சில உள்ளூர் அரசியல் பிரமுகர்கள், அமைச்சர் எர்ரபெல்லி தயகர் ராவுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அமைச்சர், முன்னணி தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளரான தில் ராஜூவுக்கு தகவல் அளித்து, அவர் நடத்தி வரும் தொண்டு நிறுவனம் மூலம் மூன்று குழந்தைகளையும் தத்தெடுத்துக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து தில் ராஜு, தனது ‘மா பல்லே’ அறக்கட்டளை மூலம் குழந்தைகளுக்கான கல்விச் செலவு மற்றும் வளர்ப்பு செலவை ஏற்றுக்கொண்டுள்ளார். தில் ராஜுவின் இந்த சேவையை பலரும் பாராட்டி வருகின்றனர்.