Skip to main content

முதலில் தம்பிதான்.. பிறகு தங்கச்சியாக மாற்றிவிட்டார்கள் - விஜய் படத்தில் நடந்த மாற்றம்

Published on 12/05/2023 | Edited on 12/05/2023

 

 Azhagi actor Sathish Stephen Interview

 

அழகி படத்தில் சிறு வயது பார்த்திபனாக நடித்த நடிகர் சதீஷ் ஸ்டீபனுடன் ஒரு சிறப்பு நேர்காணல்...

 

அழகி படத்தில் நான் நடித்த கேரக்டருக்கு எனக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்தது. அதன் பிறகு சொல்ல மறந்த கதை படத்திலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அழகி படத்தைப் பார்த்துவிட்டு என்னைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று கூட ஒரு ரசிகை கேட்டார். பல நேரங்களில் சினிமா நம்மை நம்முடைய நண்பர்களிடமிருந்தே பிரித்து விடுகிறது. சினிமா புகழ் இருந்தாலும் அனைவரிடமும் எப்போதும் போல் பழக வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். 

 

கில்லி படத்தில் விஜய் சாரின் தம்பி வேடத்திற்காக ஆடிஷன் சென்றேன். ஆனால் அதன் பிறகு அந்த கேரக்டரை தங்கச்சியாக மாற்றிவிட்டார்கள். அது சரியான முடிவு என்று தான் எனக்கும் தோன்றியது. அதன் பிறகு நிறைய வாய்ப்புகள் வந்தாலும் தேர்ந்தெடுப்பதில் நான் கவனமாக இருந்தேன். கொஞ்சம் வித்தியாசமான கேரக்டர்கள் செய்ய வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். கேரக்டர்கள் இயல்பாக இருந்தால் நன்றாக இருக்கும். நல்ல கான்செப்ட் இருந்தால் நிச்சயம் நடிப்பேன். 

 

சினிமா இப்போது நிறைய மாறிவிட்டது. ஓடிடி வந்தாலும் தியேட்டரில் சினிமாவை என்ஜாய் செய்வது சிறந்த அனுபவம். நடிகர் கார்த்தி ஜிம்னாஸ்டிக்ஸ் கற்றுக்கொள்ள மாஸ்டரிடம் வந்தபோது அங்கு அவர் எனக்கு ஜூனியர். மிகவும் எளிமையான மனிதர் அவர். அவரை எனக்கு ஒரு நல்ல நண்பராக மிகவும் பிடிக்கும். ராவணன் படத்துக்கான ஆடிஷன் செல்லும் வாய்ப்பும் கிடைத்தது. சண்டக்கோழி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தபோது நான் ஹீரோவாக முயற்சி செய்து கொண்டிருந்ததால் என்னால் அதில் நடிக்க முடியவில்லை. லிங்குசாமி சார் என்னை வாழ்த்தினார்.

 

நான் ஹீரோவாகவே முடியாது என்று பலர் என்னிடம் நேரடியாகவே கூறியுள்ளனர். நடக்கும் என்கிற நம்பிக்கையோடு நான் பயணித்து வருகிறேன். சரியான விமர்சனங்கள் வந்தால் அதை நிச்சயம் ஏற்றுக்கொள்வேன். ஹீரோவாக இருந்தாலும் வில்லனாக இருந்தாலும் அவர்களுக்குள் இருக்கும் நன்மையையும் தீமையையும் காட்ட வேண்டும் என்பது என்னுடைய கருத்து. என்னைப் பொறுத்தவரை ஒரு படத்தில் இருக்கும் அனைத்து கேரக்டர்களும் ஒன்று தான். 

 

அர்ஜுன் சார் எனக்கு ஒரு இன்ஸ்பிரேஷன். அவருக்கென்று தனியாக ஒரு ஸ்டைல் இருக்கிறது. விஜய் சேதுபதி நல்ல மனிதர். ஒருமுறை ஷூட்டிங்கில் கேஷுவலாக அவரை சந்தித்திருக்கிறேன். ஆனால் பேசியதில்லை. கதையில் முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்தக்கூடிய கேரக்டர்கள் கிடைத்தால் நிச்சயம் செய்வேன்.

 

 

சார்ந்த செய்திகள்