Skip to main content

”போத்திக்கிட்டு நடிக்க ஆசை; ஆனால், எவன் கூப்பிடுறான்” - சில்க் சுமிதாவின் ஆதங்கம் குறித்து ஷர்மிலி உருக்கம்

Published on 26/03/2022 | Edited on 26/03/2022

 

Actress Sharmili

 

இளம் வயதிலேயே க்ரூப் டான்ஸராக தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கிய ஷர்மிலி, இளவரசன், ஆவாரம்பூ உள்ளிட்ட பல படங்களில் கிளாமர் ரோல்கள் மற்றும் துணை கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானார். அவரை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சமீபத்தில் சந்தித்தோம். அந்த சந்திப்பில் பல்வேறு விஷயங்கள் குறித்து பகிர்ந்து கொண்ட ஷர்மிலி, நடிகை சில்க் சுமிதா குறித்து பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...  

 

கிளாமர் ரோல்களில் நடிக்கும்போது வீட்டில் என்ன நினைப்பார்கள் என்று ஒரு தயக்கம் இருந்தது. எனக்கு மட்டுமல்ல எந்தப் பெண்ணுக்குமே கிளாமர் ரோலில் நடிக்க பிடிக்காது. சில்க் சுமிதா எனக்கு ரொம்ப பழக்கம். அக்கா என்றுதான் அவரைக் கூப்பிடுவேன். ஒருமுறை அவருடன் பேசிக்கொண்டு இருக்கும்போது, இப்படி குட்டி குட்டி ட்ரெஸ்ஸா போட்டு நடிக்க உங்களுக்கு கூச்சமா இல்லையா அக்கா என்று கேட்டேன். அதற்கு அவர், எனக்கும் மூடிட்டு நடிக்கத்தான் ஆசை, எவன்டி அப்படி நடிக்க கூப்பிடுறான் என்றார். அதை எவ்வளவு ஃபீல் பண்ணி அவர் சொல்லியிருப்பார் என்பதை இப்போது என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. 

 

”சில்க் சுமிதா அக்காவுக்கு பட்டுப்புடவை கட்டி நடிக்க அவ்வளவு ஆசை இருந்தது. ஷூட்டிங் இல்லாதபோது அன்றைய நாள் முழுக்க, பட்டுப்புடவை கட்டி, தலை நிறைய பூ வைத்து, நகைகள் அணிந்து வீட்டிலேயே இருப்பாராம். அதை அவர் சொன்னபோது ஆச்சர்யமாக இருந்தது. சில படங்களில் அவர் சேலை கட்டி நடித்திருந்தாலும்கூட அதுவும் கவர்ச்சியாகத்தான் இருக்கும்.

 

அவர் மாதிரி அழகை பராமரிக்க கூடியவர்கள் ஹாலிவுட்டில்கூட இருக்கமாட்டார்கள். ஒரு தெலுங்கு பட ஷூட்டிங்கில் இருந்தபோது, அக்கா சாப்டீங்களா என்றேன். நாலு பாதாம் பருப்பு சாப்பிட்டேன் என்றார். சாப்பாடு சாப்பிட்டுவிட்டு பாதம் பருப்பு சாப்டீங்களா என நான் கேட்க, இல்லை பாதாம் பருப்பு மட்டும்தான் சப்பிட்டேன் என்றார். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. நல்ல சாப்பாடு சாப்பிட்டே ரொம்ப நாளாச்சு, அதிகம் சாப்பிட்டா வயிறு வச்சிருது என்றார். அந்தக் காலத்திலேயே கோல்டு லிப்ஸ்டிக்ஸ் போட்டவர் அவர் மட்டும்தான். பேஷன் சம்பந்தமான நிறைய புக்ஸ் பார்த்துக்கொண்டே இருப்பார்.  என்னையும் உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ளும்படி அடிக்கடி அறிவுறுத்திக் கொண்டே இருந்தார்”. இவ்வாறு ஷர்மிலி தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பான் இந்தியா படமாக உருவாகும் சில்க் ஸ்மிதா பயோ-பிக்

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

silk smitha biopic starring chandrika ravi update

 

சினிமாவில் காலம் கடந்து நிற்பவர்கள் பட்டியலில் நடிகை சில்க் ஸ்மிதாவும் ஒருவர். இன்றளவும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். அதற்கு உதாரணமாக மார்க் ஆண்டனி படத்தில் அவர் பெயரில் வரும் கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த பெரும் வரவேற்பு. அந்தளவிற்கு ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட அவர், இளம் வயதிலேயே மறைந்தார். இந்த நிலையில் சில்க் ஸ்மிதாவின் 63வது பிறந்த தினமான இன்று அவரைப் பற்றிய பதிவுகளை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் நினைவுகூர்ந்து வருகின்றனர். 

 

இந்த நிலையில், அவரது வாழ்க்கை கதையைத் தழுவி ஒரு படம் உருவாவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தில் நடிகை சந்திரிகா ரவி நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் பேய் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். 

 

‘சில்க் ஸ்மிதா தி அன்டோல்ட் ஸ்டோரி’ என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தை ஜெயராம் என்பவர் இயக்க எஸ்.பி. விஜய் என்பவர் தயாரிக்கிறார்.  தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது. ஏற்கனவே சில்க் ஸ்மிதா வாழ்க்கையைத் தழுவி இந்தியில் ‘தி டர்டி பிக்சர்’ என்ற தலைப்பில், கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தில் சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தில் வித்யாபாலன் நடித்திருந்தார். படம் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

Next Story

'நான் செத்துட்டா இறுதிச் சடங்கிற்கு நீ வருவியா'; சில்க் ஸ்மிதா கேட்ட கேள்வி; இறுதிச் சடங்குக்கு வந்த அந்த ஒரே நடிகர்

Published on 25/07/2023 | Edited on 25/07/2023

 

 'Will you come to the  my funeral die?'; asked Silk Smitha; He was the only actor who came to the funeral

 

தமிழ்த் திரைப்பட நடிகைகளில் மறக்க முடியாதவர்களில் ஒருவர் சில்க் ஸ்மிதா. இவர் நடித்த படங்களின் பாடல்கள் இன்றும் கொடி கட்டிப் பறக்கின்றன. தற்போதைய படங்களில் வரும் 'ஐட்டம் சாங்ஸ்' என்று சொல்லப்படும் வகையில் அந்தக் காலகட்டத்தில் எக்கச்சக்க பாடல்களில் ஆடி ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டவர். ஒரு கட்டத்தில் சில்க் ஸ்மிதா இருந்தால்தான் ஒரு பொழுதுபோக்குப் படம் முழுமையடையும் என்று சொல்லும் அளவுக்கு அவரை நடிக்க வைத்தனர் இயக்குநர்கள்.

 

அவரது கண்களைப் பார்த்தாலே ரசிகர்கள் கிறங்கிப் போவார்கள். மேலும் அவரது கவர்ந்திழுக்கும் வனப்பும், மாடர்ன் டிரஸ்களும் கூடுதல் ப்ளஸ் பாயிண்ட்டாகவே இருந்தது. இதுவே குறுகிய காலத்தில் அவர் உச்சத்திற்குச் செல்லக் காரணமாக இருந்தது. எப்படி சினிமாவின் உச்சத்திற்குக் குறுகிய காலத்தில் சென்றாரோ, அதேபோல் குறுகிய காலத்திலேயே மண்ணுலகையும் விட்டு விடை பெற்றார் ஸ்மிதா. . 

 

1996 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி நடிகை சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டார். அந்த நேரத்தில் தமிழ்த் திரை உலகமே இந்தச் சம்பவத்தால் சோகத்திலும் அதிர்ச்சியிலும் மூழ்கியது. அவருடைய தற்கொலை இன்று வரை மர்மமாகவே உள்ளது. இந்நிலையில் பத்திரிகையாளர் தோட்டா பாவாநாராயணா என்பவர் நடிகை சில்க் ஸ்மிதா பற்றி ஒரு பேட்டியில் கூறுகையில், ''அவரின் இறுதிச் சடங்கிற்கு திரையுலகைச் சேர்ந்த யாரும் வராத நிலையில் ஒரே ஒரு நடிகர் மட்டும்தான் வந்திருந்தார். ஒரு படப்பிடிப்பின் போது நடிகை சில்க் ஸ்மிதா நடிகர் அர்ஜுனிடம் 'நான் இறந்து போனால் என்னுடைய இறுதி நிகழ்விற்கு நீ வருவியா' எனக் கேட்டுள்ளார். அதைக் கேட்ட அர்ஜுன், ‘ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க. இதெல்லாம் என்ன பேச்சு' என சில்க் ஸ்மிதாவிடம் தெரிவித்துள்ளார். நாட்கள் செல்லச் செல்ல இந்த விஷயத்தை அர்ஜுன் பெரிதாக எடுத்துக் கொள்ளாத நிலையில், சில நாட்கள் கழித்து சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டார். இந்தச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அர்ஜுன் உடனடியாக அவருடைய இறுதிச்சடங்கிற்கு வந்ததோடு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்'' எனத் தெரிவித்துள்ளார் பத்திரிகையாளர் தோட்டா பாவாநாராயணா.