Skip to main content

"முதுமை காலத்தில் செய்ய நானும் விவேக்கும் வைத்திருந்த திட்டம்..." கண்கலங்கும் நடிகர் ரமேஷ் கண்ணா!

Published on 27/04/2021 | Edited on 27/04/2021

 

Ramesh Khanna

 

தமிழ் மக்களால் சின்ன கலைவாணர் என அன்போடு அழைக்கப்பட்ட நடிகர் விவேக், சமீபத்தில் காலமானார். எதிர்பாராத விதமாக நடந்த அவரது மரணம், ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது. திரைத்துறை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். நடிகர் விவேக்கின் ஒரு கோடி மரங்கள் நடவேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றும் நோக்கோடு பல்வேறு தன்னார்வ அமைப்புகளும் சமூக ஆர்வலர்களும் மரம் நடும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இந்த நிலையில், விவேக்குடனான தன்னுடைய நாட்கள் மற்றும் நினைவுகள் குறித்து நடிகரும் விவேக்கின் நெருங்கிய நண்பருமான ரமேஷ் கண்ணா நக்கீரன் ஸ்டூடியோவிடம் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அவை பின்வருமாறு...

 

விவேக்கின் மரணம் பிறருக்கு சாதாரணமாக இருக்கலாம். ஆனால், எனக்குப் பெரிய இடி. எனக்கு அவனை 1985லிருந்தே தெரியும். நாங்கள் இருவரும் பழகியதுபோல யாரும் பழகியிருக்கமாட்டாங்க; பழகவும் முடியாது. அவன் அரசு வேலை பார்த்துக்கொண்டிருந்தபோதே, நான் சினிமாவில் ஒரு படம் இயக்கி அது வெளியாகாமல் இருந்தது. ஹியூமர் கிளப்பில் தன்னுடைய பயணத்தை தொடங்கி, அதன் மூலம் மனதில் உறுதி வேண்டும் என்ற படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானான். அந்தப் படம் வெளியான பிறகு நான் ஹியூமர் கிளப் போயிருந்தேன். நம்ம கிளப்ல இருந்து போன ஒருத்தர் சினிமாவில் நடிச்சிருக்கார்.. என்ன அந்த அழுகிற சீன்ல மட்டும் சரியா நடிக்கலைனு அங்க சொன்னாங்க. உடனே நான் எந்திச்சு, இது விவேக்கிற்கு முதல் படம்தான். இன்னைக்கு பெரிய நடிகரா கொண்டாடுற கமல்ஹாசன் முதல் படத்துல எப்படி அழுதார்னு உங்களுக்கு தெரியுமான்னு கேட்டேன். அப்போது விவேக் அங்க இல்லை. பின், விவேக் வந்தபோது ரமேஷ் கண்ணா உன்னை பாராட்டினார்னு சொல்லிருக்காங்க. அப்படித்தான் எனக்கும் விவேக்கிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

 

என்கிட்டே சைக்கிள்தான் இருந்தது. அவன்கிட்ட பழைய ஃபியட் கார் இருந்தது. கோடம்பாக்கத்திலுள்ள அவர் வீட்டில் இருந்து கிளம்பி, வடபழனியில் இருந்த என் வீட்டிற்கு வருவான். பின் இருவரும் அவர் காரிலிலேயே சென்று அதிகாலை பீச்சுல வாக்கிங் போவோம். ஆரம்பத்தில் வாய்ப்பிற்காக அவனுக்கு நான் பரிந்துரை செய்துள்ளேன். எனக்காக அவன் பரிந்துரை செய்துள்ளான். கே.எஸ்.ரவிக்குமார் சாருடைய அறிமுகமே எனக்கு விவேக் மூலமாகத்தான் கிடைத்தது. வாழ்க்கை அப்படியே நல்ல படியாக போய்க்கொண்டு இருந்தது. இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல. என்னைவிட 10 வயது சின்னப்பையன் விவேக். அவன் இருந்து நாங்கெல்லாம் போயிருக்கலாம். அவன் இருந்தாலாவது நாட்டுக்கு, சமூகத்தை நல்லது செஞ்சிருப்பான். எல்லாருக்கும் ஹெல்ப் பண்ணணும்னு நினைப்பான். நான் ஏதாவது சீரியல், படம் பண்றேன்னு தெரிஞ்சா யாரையாவது கூட்டிட்டு வந்து இவங்களுக்கு வேஷம் கொடு என்பான். 

 

கடைசி காலத்தில் சந்தோசமான விஷயம் என்பது பழையகால நண்பர்களைப் பார்த்து அவர்களோடு பேசுவதுதான் என்பார்கள். தற்போது, அதை நான் இழந்துவிட்டேன். வயசான பிறகு நிறைய காமெடி சீரியல்கள் சேர்ந்து பண்ணனும் என்றெல்லாம் நானும் விவேக்கும் நிறைய பிளான் பண்ணியிருந்தோம்" என உருக்கமாகப் பேசினார்.

 

 

சார்ந்த செய்திகள்