சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஞானசேகரன் என்பவரைக் கடந்த 25ஆம் தேதி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் அதன் எஃப்.ஐ.ஆர் நகல் வெளியாகி சர்ச்சையானது. அதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கைத் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக தூத்துக்குடி எம்.பி கனிமொழி விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “முதலமைச்சர் எந்த பாரபட்சமில்லாமல், குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். அதன்படி, குற்றவாளி கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அதனால், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இல்லை.
அதிமுக ஆட்சியிலேயே, அந்த நபர் மீது குற்றச்சாட்டு வந்த போது அந்த எஃப்.ஐ.ஆரையே மாற்றி பதிவு செய்திருக்கிறார்கள். இந்த குற்றவாளி, பாலியல் தொந்தரவு தந்ததோடு மட்டுமல்லாமல் பெண்ணினுடைய சங்கிலியையும் பறித்திருக்கிறார். ஆனால், அந்த ஆட்சியில் வெறும் சங்கிலி பறிப்பாக மட்டுமே பதிவு செய்திருக்கிறார்கள். அப்போதே குற்றவாளிக்கு சரியான தண்டனை கிடைத்திருந்தால், ஒரு கண்காணிப்பாகவாக இருந்திருக்கும். அப்போது அவர்களுடைய கடமை செய்ய தவறியதால், இந்த சம்பவம் நடைபெறுவதற்கு காரணமாக இருந்திருக்கிறது.