Skip to main content

கமல் நிறுவனம் கொடுத்த புகார் - 2 பேர் கைது

Published on 23/09/2023 | Edited on 23/09/2023

 

2 persons arrested in raaj Kamal Company fraud issue

 

நடிப்பு, இயக்கம், பாடுவது எனப் பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் கமல், ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்நிறுவனம் அபூர்வ சகோதரர்கள், தேவர் மகன், விருமாண்டி எனப் பல ஹிட் படங்களைத் தயாரித்த நிலையில், கடைசியாக விக்ரம் படத்தைத் தயாரித்திருந்தது. இப்படம் ரூ. 500 கோடிக்கு மேல் வசூலித்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தையும் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தையும் தயாரித்து வருகிறது. 

 

இந்த நிறுவத்தின் பெயரில் மோசடி நடந்துள்ளதாகக் கடந்த ஜூலை மாதம், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அந்நிறுவனத்தின் சிஇஓ நாராயணன் புகார் அளித்திருந்தார். அந்த புகாரில், இந்த மோசடியில் சிக்கி ஆகாஷ் என்பவர் 42 ஆயிரம் ரூபாய் இழந்துள்ளதாகவும், அவர் பட நிறுவனத்தில் வந்து கேட்டபோது தான் தங்களுக்கு இந்த மோசடி குறித்து தெரிய வந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

 

இது தொடர்பாக அப்போது ராஜ்கமல் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "எங்கள் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்களுக்காக எந்த ஒரு காஸ்டிங் ஏஜென்டுகளையும் நாங்கள் நியமிக்கவில்லை. நாங்கள் தயாரிக்கும் திரைப்படங்களில் வாய்ப்பு வாங்கித் தருவதாக வரும் செய்திகள் எவ்வகையில் உங்களை வந்தடைந்தாலும் அதை நம்ப வேண்டாம்" எனத் தெரிவித்திருந்தனர். 

 

இந்த மோசடி வழக்கு தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், தற்போது கடலூரைச் சேர்ந்த புகழேந்தி மற்றும் விருத்தாசலத்தைச் சேர்ந்த சுதாகர் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். பின்னர் விசாரணையில், இருவரும் நிறைய வாட்ஸ் ஆப் குழுக்கள் மூலம் ட்ரேடிங் ஆலோசகராகச் செயல்பட்டு வந்துள்ளனர். இதில் பல பேர் இணைந்து பணத்தை இழந்துள்ளனர். அந்த பணத்தை மீட்டெடுப்பதற்காக போலியான விளம்பரத்தைப் பயன்படுத்தி அதன் மூலம் பணம் சம்பாதித்து வந்தது தெரியவந்துள்ளது. இதுவரை 3 ஆயிரம் பேரிடம் 10 லட்சம் மோசடி செய்துள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கைது செய்யப்பட்ட இருவரும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர். 

 


 

சார்ந்த செய்திகள்