Skip to main content

ஹார்மோன் மாற்றத்தால் அடம்பிடித்த பையன்; தனியறையில் பூட்டிய பெற்றோர் - ஆஷா பாக்யராஜ் பகிரும் குழந்தை வளர்ப்பு ஆலோசனை :26

Published on 23/07/2024 | Edited on 23/07/2024
 parenting-counselor-asha-bhagyaraj-advice-26

பாலினம் மாறிய தன் குழந்தையை ஏற்க மறுத்த பெற்றோருக்கு கொடுத்த கவுன்சிலிங் பற்றி நம்மிடையே குழந்தை வளர்ப்பு ஆலோசகர் ஆஷா பாக்யராஜ் விவரிக்கிறார்.

தன்னுடைய குழந்தை திருநங்கை என்று வெளிப்படுத்தியும் அதை ஏற்றுக்கொள்ளாத ஒரு பெற்றோர் என்னை சந்திக்க வந்திருந்தனர். என்ன ஆனாலும், தன் மகன் பெண்ணாக மாறக்கூடாது என்று புரியவைக்குமாறு சொல்ல சொன்னார்கள். நான் ஒரு கவுன்சிலர் என்பதால் அவர்கள் கூறுவதை முழுமையாக கேட்டு கொண்டேன். கேட்டுவிட்டு அவர்கள் குழந்தையிடம் பேச வேண்டும் என்று பேசினேன். முன்பெல்லாம் குழந்தைகள் தங்களுடைய உடல்நிலையில் மாற்றம் உணர்ந்தாலும், அதை வெளியே சொல்ல தயங்கி பயந்து மறைத்து விடுவார்கள். ஆனால், இப்போதெல்லாம் அப்படி இல்லை. அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். தான் என்னவாக இருக்கிறோம் என்பது தன்னுடைய சுதந்திரம் என்று நினைத்து அதில் கூச்சப்படாமல் பெற்றோரிடம் சொல்கின்றனர். ஆனால், என்னை பார்க்க வந்த பெற்றோர் தன்னுடைய குழந்தையிடம் நீ எங்களுக்கு மகனாக தான் இருக்கவேண்டும். எக்காரணம் கொண்டும் மாறக்கூடாது என்று அறையில் பூட்டி எல்லாம் வைத்திருக்கின்றனர். அப்படி மாறிவிட்டால் சமூகத்தில் அவர்கள் பெயர் கேட்டு போய்விடும் என்று மறுத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் தான் அவர்கள் வந்திருக்கிறார்கள். நான் அந்த குழந்தையிடம் பேசியபோது, ஏற்கனவே அவர் பெண்ணாக தான் இருக்க விருப்பம் என்றும் பேசிய பாணியிலேயே அவர் ஏற்கனவே மாறி விட்டார் புரிந்து கொள்ளமுடிந்தது. என்னை என் பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், அதனால், தன்னை எப்படியாவது, திருநங்கை சமூகத்தில் சேர்த்துவிடுங்கள் என்று அந்த பையன் கூறினான். என் பெற்றோர்கள் எப்போதும் செல்லமாக இருப்பார்கள் என்று தான் நம்பி சொன்னேன் மேடம். என் உடம்பில் ஏற்பட்ட மாற்றத்தை முதலில் நான் அதை ஏற்றுக்கொள்ளவே ரொம்பவே சிரம பட்டேன். இந்த மாற்றத்தை நான் ஏற்றுக்கொண்ட பிறகுதான் அதை என் பெற்றோர்கள் புரிந்து கொள்வார்கள் என்று சொன்னேன். ஆனால் இவர்கள் இப்படி வெளிக்காட்டுவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்றான்.

தான் எக்காரணம் கொண்டும் பையனாக இருக்கப்போவதில்லை என்று தெளிவாக சொல்லியதில் நியாயம் இருந்தது. என்னிடம் யார் இதே நிலையில் வந்தாலும் கண்டிப்பாக அந்த குழந்தைக்கு தான் நான் ஆதரவு அளிப்பேன். நான் அந்த பெற்றோரிடம் பேசுவதை விட அடுத்த செஷனில் டாக்டர் மூலம், இந்த பாலின மாற்றம் எதனால் வருகிறது என்பதை பேச வைத்தேன். அதற்கடுத்ததாக தான் நான் அவர்களிடம் பேசினேன். இதுபோன்ற மாற்றத்தை ஆதரவாக நீங்கள் தான் இருக்கவேண்டும். அதன் பின்பு தான் சமூகம் அதை ஏற்கும் என்றதற்கு அவர்கள், தங்கள் உறவினர், தெரிந்தவரிடம் எப்படி இதை சொல்வது என்று தயங்கினர். ஒருநாள் மட்டும் வந்து பேசும் மற்றவர்களுக்கு இவ்வளவு முக்கியம் கொடுக்க தேவையில்லை. சினிமாவில் பார்க்கும்போது மட்டும் சமூக முன்னேற்றம் அடைந்திருக்கிறது என்று மகிழ்ச்சி ஆகிறோம். ஆனால் இதுவே நமக்கென்று வரும்போது அதை ஏற்று கொள்வதில்லை.

இதுபோன்ற குழந்தைகள் கடவுள் கொடுத்த பரிசு. இறைவன் இப்படி படைத்திருக்கிறார் என்றால் அதில் ஒரு காரணம் இருக்கும் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும். ஊடல் ஊனமுற்ற குழந்தைகளை கூட இன்னுமும் நம் ஊரில் ஏற்றுக்கொள்ள மாட்டிருக்கிறார்கள். ஆனால் வெளிநாடுகளில் அவர்களை அப்படி ஆதரவு கொடுத்து ஒரு தனி அக்கறை கொள்கிறார்கள். அதுவே அந்த குழந்தைகளுக்கு தேவை என்று பெற்றோர்கள் புரிந்து கொள்ளவேண்டும். அதே மாதிரி தான், இந்த பாலின மாற்றமும். இதை அவர்களுடைய பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதுபோன்ற செஷன்களில் பெற்றோர்களை விட குழந்தைக்கே ஆதரவு கிடைக்கும் என்பது உறுதி. நான் என்னால் முடியும்வரை அவர்களுக்கு தினசரி கவுன்சிலிங் கொடுத்து பெற்றோரை ஏற்று கொள்ளவைத்தேன். பதினைந்து நாட்கள் கழித்து கொஞ்சம் கொஞ்சமாக டாக்டர் சொல்லியதையும் வைத்து புரிந்து கொள்ள ஆரம்பித்தார்கள். அவர்கள் அடுத்தபடியாக தான் இதனை எப்படி மேற்கொள்வது என்று கவலைப்பட்டார்கள். வெளிநாட்டிற்கு சென்று விடலாமா என்றும், மற்ற உறவினர்களிடம்  இதை தெரிய படுத்தவேண்டும் என்றெல்லாம் அந்த பையனனுடைய பெற்றோர்கள் பேசினார்கள். அதை பின்னர் பார்க்கலாம், முதலில் குழந்தைக்கு பிடித்தது செய்யுங்கள், பேர் மாற்றுவது, பிடித்த உடைகள் என்று அவங்ககிட்ட கவனம் கொள்ளுங்கள் என்று சொன்னேன். 

யாரிடமும் இதை டிக்லர் செய்யவேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் ஆதரவு தந்து குழந்தை பக்கம் நின்றாலே மற்றவர்கள் அதைத் தானாக செய்வார்கள் என்று புரிய வைத்தேன். எனக்கு மிகவும் எமோஷனலாக பாதித்த கவுன்சிலிங் இது. அந்தப் பெற்றோர் ஒருவழியாக தங்கள் குழந்தையை அப்படியே ஏற்றுக்கொண்டனர். முதலில் தங்களுக்கு கோபம் வந்தாலும், பின்னர் புரிந்துகொண்டதாக சொன்னார்கள். அந்தக் குழந்தையும் என்னிடம் அவ்வளவு மனமார்ந்த நன்றியும் சொல்லி, தனக்கு என்னுடைய ஆதரவு ரெகுலராக எப்போதுமே தேவைப்படும், அது பின்னாளில் தனக்கு வரப்போகும் சவால்களை நேர்கொள்ள உதவும் என்று கேட்டுக்கொண்டார்.