முதல் பெண் துப்பறிவாளர் மாலதி, தான் துப்பறிந்த சுவாரசியமான விசயங்களை நம்மோடு பகிர்ந்துகொண்டு வருகிறார். அந்த வகையில், 24 வருடம் கழித்து மீண்டும் தன்னிடம் வந்த ஒரு வழக்கு குறித்து நம்மிடையே விவரிக்கிறார்.
சுமார் 24 வருடங்கள் முன்பு பார்த்த வழக்கில் சந்தித்த பெண்மணி மீண்டும் என்னை பார்க்க வந்திருந்தார். ஆனால் பல வருடங்கள் ஆனதால் ரிப்போர்ட் பார்த்த பின்னரே ஞாபகம் வந்தது. அவருடைய கணவருக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறது என்று கொடுத்த ரிப்போர்ட் அது. இத்தனை வருடம் கழித்து இப்போது வந்த காரணம் என்ன என்று கேட்டபோது, தனக்கு விவாகரத்து வேண்டி கோர்ட்டில் அப்ளை செய்திருப்பதாகவும், இப்பொழுது கணவனின் இரண்டாவது கல்யாணத்திற்கான சர்டிபிகேட்டை கேட்பதாகவும் சொன்னார்.
இந்த கேசை முதல் முதலில் 2000ம் ஆண்டு பார்த்தேன். ஆனால் அவளது கணவர் அதற்கும் ஏழு எட்டு வருடங்கள் முன்பே இரண்டாவது கல்யாணம் பண்ணி இருந்திருப்பார். அப்பொழுது இவரது குழந்தைகள் ஐந்தாவது ஆறாவது படித்துக் கொண்டிருந்தார்கள். கணவர் கவர்மெண்ட் பஸ் டிரைவராக இருந்தார். அந்த சமயம் கணவர் அடிக்கடி வீட்டுக்கு வராமல் இரு மாதம் ஒரு முறை மட்டும் வருகிறார். குழந்தைகளையும் பார்ப்பதில்லை என்றுதான் புகார் கொடுக்க வந்திருந்தார். பஸ் டிரைவராக இருந்ததால் பஸ் பாஸ் எடுத்துக்கொண்டு எங்கள் ஸ்டாஃப் ஒவ்வொருவராக மாறி மாறி அவர் போகும் பஸ்ஸிலேயே அவர் பின் தொடர்ந்தோம். ஆனால், வாரம் முழுக்க அவரது நடவடிக்கைகள் ஒன்றும் சந்தேகமாக இல்லை.
ஆனால், வார இறுதியில் மட்டும் ஊருக்கு வெளியே இவருடைய பெயரில் அரை ஏக்கர் நிலம் கொண்ட வீட்டில் இவருக்கு இன்னொரு குடும்பம் இருக்கிறது. அங்கே இவருடைய இரண்டாவது மனைவியும் மூன்று ஆண் பிள்ளைகளும் இருப்பதை பார்த்தோம். இது உண்மையிலேயே இவருடைய குழந்தைகள் தான் என்று உறுதி செய்த பின் என்னிடம் புகார் அளித்த பெண்ணை கூப்பிட்டு விஷயத்தை சொல்லி ரிப்போர்ட் கொடுத்தோம். அதற்குப் பிறகு அந்த பெண்மணி என்ன செய்தார் என்று தகவல் இல்லை. ஆனால் 24 வருடம் கழித்து இப்பொழுது வந்த போதுதான் விவாகரத்து அப்ளை செய்திருக்கிறார் என்று எங்களுக்கு தெரியவந்தது.
அவரது முந்தைய கணவருக்கு இரண்டாவது கல்யாணம் ஆகிவிட்டது என்று பதிவு செய்யப்பட்ட ஆவணத்தை கோர்ட்டில் கேட்டிருகின்றனர். அதற்காகத்தான் என்னிடம் ஏதாவது ப்ரூப் இருக்குமா என்று என்னை சந்திக்க வந்திருக்கிறார். இந்த பெண்ணுடைய குழந்தைகளுக்கு திருமணமாகி செட்டில் ஆகிவிட்டனர். ஆனால் இந்த பெண்மணி தனி ஆளாக வருமானம் இல்லாமல் ]சிரமப்படுவதால் அவரிடம் இருந்து செக்யூரிட்டி தொகை வேண்டும் என்பதற்காகவும் தான் இப்படி போராடிக் கொண்டிருக்கிறார். இத்தனை வருடமாக கஷ்டபட்டு கொண்டிருக்கும் இவருக்கு விடை கிடைக்குமா என்று இனிமேல் தான் கேஸ் ஸ்டடி செய்து மீண்டும் அந்த பெண்மணிக்கு என்ன செய்ய முடியும் என்று பார்க்க வேண்டும்.