Skip to main content

பெற்றோர் செய்த தவறு; சிறுமிக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல் - ஆஷா பாக்யராஜ் பகிரும் குழந்தை வளர்ப்பு ஆலோசனை :40

Published on 28/08/2024 | Edited on 28/08/2024
asha bhagyaraj parenting counselor advice 40

சிறுவயதில் ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தலில் இருந்து வெளிவர முடியாத சிறுமிக்கு கொடுத்த கவுன்சிலிங் பற்றி குழந்தை வளர்ப்பு ஆலோசகர் ஆஷா பாக்யராஜ் நம்மிடம் விவரிக்கிறார்.

11 வயதான சிறுமி, 3 வருடத்திற்கு முன்பு பாலியல் துன்புறுத்தலை அனுபவித்திருக்கிறார். ஸ்கூலில், குட் டச் பேட் டச் இதெல்லாம் சொல்லிக்கொடுக்கும் போது, இந்த விஷயம் குறித்து, பெற்றோரிடமும் கூட சொல்லாமல் சமீபத்தில் தன்னுடைய சித்தப்பாவிடம் கூறியிருக்கிறார். அந்த சம்பவம் அடிக்கடி நியாபகம் வருவதாகக் கூறியிருக்கிறார். அதன் பின்பு, என்னிடம் அந்த சிறுமியை சித்தப்பா அழைத்துக்கொண்டு வந்தார். 

கடைக்கு சென்று பொருட்களை வாங்கச் சென்ற போது, சாக்லேட் கொடுத்து மளிகை கடைக்காரன், இந்த சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டிருக்கிறான். இந்த விஷயத்தை யாரிடமாவது சொன்னால், அப்பா அம்மாவை ஏதாவது செய்துவிடுவேன் என்று அந்த கடைக்காரன் சிறுமியை மிரட்டியதால் அவள் ரொம்பவே பயந்திருக்கிறாள். அப்பா அம்மாவிடம் சொல்ல முடியாததால், கடைக்கு செல்லும்போதெல்லாம் சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டிருக்கிறான். அதன் பின்பு, இவர்கள் வீடு மாற்றம் செய்ததால் அந்த துன்புறுத்தல் ஒரு கட்டத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறது. 

அந்த சிறுமியிடம் விசாரித்ததில், அப்பா அம்மா இருவருக்கும் இடையில் இருக்கும் சண்டையால் இந்த குழந்தையிடம் நேரம் ஒதுக்காமலும், கவனிக்காமலும் இருந்திருக்கின்றனர். குழந்தை பேசுவதை கூட அவர்கள் கவனிப்பதில்லை. அப்பா அம்மாவை பற்றி நிறைய கம்ப்ளைண்டை குழந்தை வைக்கிறது. அந்த கடைக்கு செல்லமாட்டேன் என்று குழந்தை கூறினாலும், என்ன என்று கூட கேட்காமல் அம்மா திட்டி அனுப்பி வைத்திருக்கிறார். சித்தப்பா தான் எல்லாமே பார்த்துக்கொள்வதாகவும், அவரிடம் பேசுவது தான் பிடிக்கும் என்று குழந்தை சொன்னது. குட் டச், பேட் டச்சை கூட அரசு சேஃப் டச், அன்சேஃப் டச் என்று ஆக்கிவிட்டது. ஆனால், நான் ‘நோ டச்’ தான் சொல்லிக் கொடுப்பேன். 

அப்பா அம்மாவை கொன்றுவிடுவேன் என்று கடைக்காரன் சொன்னதால் தான், இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லவில்லை என்று சொன்னாள். யாரையும் யாரும் எதுவும் செய்ய முடியாது. உன்னிடம் பிடிக்காத விஷயத்தை யார் செய்தாலும் நீ குரல் கொடுக்க வேண்டும் என்று குழந்தையிடம் சொல்லிக் கொடுத்தேன். அந்த துன்புறுத்தலை விட, அப்பா அம்மாவிடம் உள்ள உறவு நன்றாக இல்லை என்பதை தான் குழந்தை திருப்பி திருப்பி பேசுகிறது. அந்த கடைக்காரன், அந்த ஏரியாவில் முக்கியமான ஆளாக இருந்ததால் நடவடிக்கை எடுத்தாலும் எங்கும் பலிக்கவில்லை. சிறுவயதில் நடந்த சம்பவத்தால், இரவில் தூங்காமலும், அந்த நினைப்பாலும் இப்போதும் அந்த சிறுமியிடம் அதோட வடு இருக்கிறது. அந்த சிறுமியிடம் கேள்வி கேட்டதை வைத்து, அவளுக்கு சோஷியல் ஆன்சைட்டி இருக்கிறது என்பதை கண்டுபிடித்தேன். சோஷியல் ஆன்சைட்டியில் இருந்து வெளிவருவதற்கு அவளுக்கு சிலவற்றை சொல்லிக் கொடுத்தேன். இரண்டு செக்‌ஷன் தான் முடிந்திருக்கிறது. அவளுடைய பேரண்ட்ஸை பார்க்க வேண்டும் என்று அவளது சித்தப்பாவிடம் கூறினேன். ஆனாலும் இன்னும் பேரண்ட்ஸை நான் பார்க்கவில்லை. அவர்களுக்கும் தனி செக்‌ஷன் கொடுக்க வேண்டும்.