Skip to main content

குத்தி காட்டும் பெற்றோர்; மன உளைச்சலுக்கு ஆளான பையன் - ஆஷா பாக்யராஜ் பகிரும் குழந்தை வளர்ப்பு ஆலோசனை :37

Published on 23/08/2024 | Edited on 23/08/2024
asha bhagyaraj parenting counselor advice 37

காதல் தோல்வியால் மன உளைச்சலுக்கு ஆளான பையனை குத்தி காட்டும் பெற்றோருக்கு கொடுத்த கவுன்சிலிங் பற்றி குழந்தை வளர்ப்பு ஆலோசகர் ஆஷா பாக்யராஜ் நம்மிடம் விவரிக்கிறார்.

கிட்டத்தட்ட 30 வயது பையன், 6 வருடமாக ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களுக்கு பெற்றோர் திருமண ஏற்பாடு செய்து வைக்கும் நேரத்தில் அவர்கள் இருவருக்கும் பிரேக் அப் ஆகிவிட்டது. 6 மாதத்திற்கு முன்னாள் நடந்து அடிதடி வரை சென்ற பிரேக் அப் விஷயத்தை கடைசி 1 மாதத்திற்கு முன்பு தான் அந்த பையன் தன்னுடைய பெற்றோரிடம் சொல்லும் போது, ‘6 வருசமா காதலித்து கொண்டிருக்கிறாய். ஆனால் கடைசி 1 வருடத்திற்கு முன்னால் தான் எங்களிடம் சொல்லி இருக்கிறாய். எங்க பேச்சு நீ கேட்கல, நாங்கள் ஒரு பெண்ணை பார்த்து வைத்திருந்தால் இப்படியெல்லாம் நடக்காது, நல்லா அனுபவி என பெற்றோர் குத்தி காட்டி திட்ட பையனுக்கு இன்னமும் மன உளைச்சல் ஆகியிருக்கிறது.

இந்த நேரத்தில் தான் என்னிடம் அந்த பையன் கவுன்சிலிங்கிற்காக வந்தார். எப்போதும் தன்னை தன் பெற்றோர் ஜட்ஜ்மெண்ட் செய்து கொண்டே இருக்கிறார்கள். இப்படி பேசும் போது எப்படி தன்னுடைய பெற்றோரிடம் ஒபனாக பேச முடியும் என்ற கேள்வியோடு தான் பேசினார். இந்த இடத்தில் அவருடைய பெற்றோரை அழைத்து பேசும்போது, சின்ன வயதில் இருந்தே இவன் திருட்டுத்தனம் தான் செய்வான். பள்ளி, காலேஜ் எல்லா இடத்திலும் எங்களை நிற்க வைப்பான் என்ற குற்றச்சாட்டுகளை வைத்து சில சம்பவங்களை கூறினர். அந்த விஷயங்கள் எல்லாம், எல்லா பசங்களும் செய்யக்கூடிய சாதாரண விஷயங்கள் தான். 

லவ் பிரேக் அப் ஆன விஷயத்தில் இருந்தே வெளியே வராத பையனுக்கு, அவனுடைய பெற்றோரே சப்போர்டிவாக இல்லை. அதனால், அவனுடைய பெற்றோருக்கு தான் கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். ஸ்கூல், காலேஜ், கம்பேனி என எல்லா இடத்திலும் டாப்பராக இருந்த அவனுக்கு எமோஷனலாக ஸ்ட்ராங்காக இருக்க முடியாதா, இந்த விஷயத்தை அவனால் ஹாண்டில் பண்ண முடியாதா? நாங்கள் என்ன சப்போர்ட் செய்ய முடியும் என்று அவனது பெற்றோர் என்னிடம் கேட்டனர். லவ் பிரேக் அப்பில் இருந்து டிப்ரெஷன் ஸ்டேஜிற்கு போகாமல் இருக்க பேரண்ட்ஸ் தான் சப்போர்ட்டிவாக இருக்க வேண்டும் என எடுத்துச் சொன்னேன். ஒபன் ஆக பேச மாட்டிகிறான், லேட்டாக தூங்குகிறான் என அவனை குறை சொல்லாமல் அவன் உங்களிடம் சொல்வதை அக்லாஜ்மெண்ட் செய்யுங்கள். நாங்கள் கூட இருக்கிறோம் என அவனுக்கு சப்போர்டிவாக இருங்கள் என்று சொல்லி கவுன்சிலிங் கொடுத்தேன்.