கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் இன்று நடக்கிறது. இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இதனை ஒட்டி இரு அணிகளும் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்திய அணியில் பல வீரர்கள் காயம் காரணமாக போட்டியில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்ட காரணத்தால் அவர்களுக்கு மாற்றாக புதிய வீரர்களும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்திய அணியில், “ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், சித்தேஷ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, கே.எல்.ராகுல், பரத், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாகூர், முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெயதேவ் உனத்கட்” ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக ரஹானே சேர்க்கப்பட்டுள்ளார். விபத்து காரணமாக சிகிச்சை பெற்று வரும் ரிஷப் பண்ட்டிற்கு பதிலாக ஸ்ரீகர் பரத்தும், பும்ராவுக்கு பதிலாக ஜெயதேவ் உனத்கட்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
2013 ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தோனி தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்றது. அதன் பின் கடந்த 10 ஆண்டுகளாக ஒரு நாள், டி20, டெஸ்ட் என ஐசிசி நடத்தும் உலகக் கோப்பைகளில் இந்திய அணி கோப்பையை வென்றதில்லை. இம்முறையாவது டெஸ்ட் சாம்பியன்ஷிப் உலகக் கோப்பையை இந்திய அணி வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
லண்டன் ஓவல் மைதானத்தில் 1880 ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஜூன் மாதத்தில் டெஸ்ட் போட்டிகள் நடந்ததில்லை. டெஸ்ட் சாம்பியன்ஷிப் உலகக் கோப்பையின் இறுதி ஆட்டம் தான் இன்று நடைபெற உள்ளது. பெரிய மைதனமாக கருதப்படும் லண்டன் ஓவல் மைதானம் பவுன்சர் மற்றும் வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும். எனவே இரு அணியின் வேகப்பந்து வீச்சை கருத்தில் கொண்டு ஆஸ்திரேலிய அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என ரிக்கி பாண்டிங் மற்றும் வாசிம் அக்ரம் போன்றோர் கூறுகின்றனர். கடந்த முறை இந்திய அணி விளையாடிய நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்க, நியூசிலாந்து அணி 5 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கி வெற்றி பெற்றது. எனவே இம்முறை இந்திய அணி வீரர்கள் தேர்வில் கவனத்துடன் செயல்படும் என்றே கருதப்படுகிறது.
கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் மைதானத்தை பற்றி கூறுகையில், “ஓவல் மைதானத்தில் புற்கள் அதிகமாக வளர்ந்துள்ளதால் சுழற்பந்துவீச்சு எடுபடாது. எனவே அஷ்வின் இந்த போட்டியில் விளையாடுவது கடினம். இந்திய அணி உமேஷ் யாதவ், ஷமி, சிராஜ், ஷர்துல் தாக்கூர் என 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கலாம்” எனக் கூறியிருந்தார். இது குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில், “மைதானத்தை பொறுத்துதான் எங்கள் அணியின் காம்பினேஷன் அமையும். பிட்சில் தினமும் மாற்றம் தென்படுகிறது. போட்டிக்கு முன் பிட்சை பார்த்துதான் அணி முடிவு செய்யப்படும். எங்கள் அணியிலுள்ள 15 பேரும் தயாராக உள்ளனர்” எனக் கூறியிருந்தார்.