இன்று கிரிக்கெட்டில் கோலியின் சாதனைகளுக்கு தொடக்கப் புள்ளியாக இருந்தவர் சச்சின். சச்சினுக்கு முன்பு கவாஸ்கர், கபில்தேவ் இந்தியாவிலும், உலகளவிலும் பிரபலம். இந்தியாவில் ஓரளவு பிரபலமாக இருந்த கிரிக்கெட்டை நாட்டின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சென்றவர் சச்சின். ஆனால், செஸ் போட்டிகளைப் பொறுத்தவரை விஸ்வநாதன் ஆனந்த் என்ற நபரின் வருகைக்கு முன்புவரை இந்தியா உலகளவில் செஸ் போட்டிகளில் சாதித்ததில்லை. நம் நாட்டில் இன்றுள்ள செஸ் விளையாட்டின் உயரத்திற்கு விதைகளை விதைத்தவர் ஆனந்த்தான்.
இந்திய செஸ் கிராண்ட் மாஸ்டர் மற்றும் முன்னாள் உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் உலகளவில் புகழ்பெற்ற முடிசூடா மன்னன். ரஷ்யர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திவந்த செஸ் போட்டிகளில், இந்தியாவை முன்னிலைப்படுத்தி தனிமுத்திரை பதித்தவர். இந்திய விளையாட்டு வீரர்களில் மிகவும் தலைசிறந்த, ஈடு இணையற்ற வீரர்.
ஆனந்தின் தாய் சதுரங்கத்தில் அதிக ஈடுபாடு உடையவர். ஆனந்தின் தாய் சுசீலா, ஆனந்திற்கு ஆறு வயதிலிருந்தே செஸ் கற்றுக்கொடுக்கத் தொடங்கினார். அவரை ஊக்கப்படுத்தினார். இது அவரின் எதிர்கால செஸ் வாழ்க்கைக்கு அடித்தளமாக அமைந்தது. பின்னர் ‘டால்’ என்ற செஸ் அமைப்பில் சேர்ந்து பயிற்சி பெற்றார். தன்னுடைய 14 வயதிலேயே தேசிய அளவிலான செஸ் போட்டிகளில் பங்கேற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
கல்லூரிகளில் படித்துக் கொண்டிருக்கும்போதே உலக செஸ் சாம்பியன் போட்டிக்கான தகுதிச்சுற்று போட்டிகளில் விளையாடினார். 1983-ல் 14 வயதாக இருந்தபோது தேசிய சப்-ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப், 1984-ல் ஆசியன் ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப், 1985-ல் மீண்டும் ஆசியன் ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப், 16 வயதில் தேசிய செஸ் சாம்பியன், 1987-ல் உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் வென்ற முதல் இந்தியர், 18 வயதில் இந்தியாவின் முதல் செஸ் கிராண்ட் மாஸ்டர். இப்படி ஒன்று, இரண்டல்ல சிறு வயதிலேயே சாதனைகள் பல புரிந்தார். இந்தியாவின் செஸ் மாஸ்டராக உயரத்தை அடைந்தார் ஆனந்த்.
2000, 2007, 2008, 2010, 2012 ஆகிய ஆண்டுகளில் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றார். உலக செஸ் சாம்பியன் போட்டிகள் டோர்னமென்ட், ரேபிட், நாக் அவுட் என மூன்று முறைகளில் ஏதாவது ஒரு முறையில் நடத்தப்படும். இந்த மூன்று முறைகளிலும் பட்டம் வென்றவர் தமிழ்நாட்டில் 11 டிசம்பர் 1969-ம் ஆண்டு மயிலாடுதுறையில் பிறந்த விஸ்வநாதன் ஆனந்த் மட்டுமே.
1985-ல் அர்ஜுனா’ விருது, 1987–ல் இந்திய அரசின் பத்ம ஸ்ரீ விருது, 1991-1992ஆம் ஆண்டிற்கான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது, 2000-ல் பத்ம பூஷன் விருது, 2007-ல் பத்ம விபூஷன் விருது, 1997, 1998, 2003, 2004, 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளுக்கான சதுரங்க ஆஸ்கார் விருது என்று இவர் வாங்கிய விருதுகள் ஏராளம். வெளிநாடுகளிலும் விருதுகள் வாங்கியுள்ளார்.
அவர் சர்ச்சைகளில் இருந்து விலகி இருப்பவர். விளையாட்டில் மட்டுமே கவனம் செலுத்துவார். அவரது முன்னாள் சதுரங்க போட்டியாளர்களால்கூட மிகவும் மதிக்கப்படுபவர். விஸ்வநாதன் ஆனந்த் 2007 முதல் 2013 வரை ஆறு ஆண்டுகள் சதுரங்க உலகத்தில் ஆதிக்கம் செலுத்தினார். சில ஏற்ற இறக்கங்களையும் கண்ட அவர், இறக்கங்களைக் கடந்து சாதித்துவருகிறார்.
1988-ஆம் ஆண்டுவரை ஒருவர்கூட செஸ் கிராண்ட் மாஸ்டர் இல்லை. அந்த வருடம் விஸ்வநாதன் ஆனந்த் இந்தியாவின் முதல் செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆனார். இன்று 50+ செஸ் கிராண்ட் மாஸ்டர்கள். ஆண்கள் பிரிவில் இந்தியா ஆறாவது இடத்திலும், பெண்கள் பிரிவில் ஏழாவது இடத்திலும் உள்ளது. இந்த முன்னேற்றத்திற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார் ஆனந்த். 1991-ல் உலகின் சிறந்த டாப் 10 செஸ் வீரர்கள் பட்டியலில் இடம்பிடித்த அவர், இன்றும் அந்தப் பட்டியலில் அவர் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு அவரின் 48 வயதில் உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப்பை வென்றார். ஒரு தனி ஆளாக இந்தியாவை செஸ் போட்டிகளில் உலகறிய செய்தார். இந்தியாவில் விளையாட்டு துறையில் செஸ் போட்டிகளை தனது கெரியராக மேற்கொள்ள நினைக்கும் குழந்தைகள் மற்றும் இளைஞர் சமுதாயத்திற்கு அவர் ஒரு ரோல் மாடல்.