Skip to main content

இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் குறித்து ஸ்டீவ் ஸ்மித் கருத்து! 

Published on 09/10/2023 | Edited on 09/10/2023

 

Steve Smith comments on Indian spinners!

 

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெறும் இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் பங்கேற்கின்றன.

 

அந்த வகையில், சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் 36 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் உலகக்கோப்பை போட்டியின் 5 வது லீக் ஆட்டத்தில் நேற்று (8ம் தேதி) மோதின. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 

 

இதனையடுத்து ஆஸ்திரேலியா அணி 49.3 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து 199 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்தியாவிற்கு 200 ரன்களை ஆஸ்திரேலியா அணி இலக்காக நிர்ணயித்தது. ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 46 ரன்களும், டேவிட் வார்னர் 41 ரன்களும் எடுத்தனர். 

 

இந்திய அணி சார்பில் பந்து வீச்சில் ஜடேஜா 3 விக்கெட்களையும், குல்தீப் யாதவ், பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், அஸ்வின், ஹர்திக் பாண்டியா, சிராஜ் தலா ஒரு விக்கெட்களையும் எடுத்தனர்.

 

அதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி ஆட்டத்தின் முதல் 2 ஓவர்களிலேயே இந்திய அணி வீரர்கள் இஷான் கிஷன், ஷ்ரேயாஸ், ரோஹித் ஷர்மா அடுத்தடுத்து டக் அவுட் ஆனதால் ரசிகர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர். இருப்பினும் விராட் கோலி, கே.எல். ராகுலின் நிதானமான ஆட்டத்தினால் 41.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 201 ரன்களை குவித்து 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்திய அணி சார்பில் கே.எல்.ராகுல் 97 ரன்களும்,  விராட் கோலி 85 ரன்களும் குவித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.

 

இந்நிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா போட்டி குறித்து அந்த அணியின் வீரர் ஸ்டீவ் ஸ்மித் பேசியுள்ளார். அவர் தெரிவித்திருப்பதாவது; “இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் அனைவரும் சிறப்பாக பந்து வீசினார்கள். அவர்கள் அனைவரும் சிறந்த தரமான பந்து வீச்சாளர்கள் என்பதால் அவர்களது பந்து வீச்சை எதிர்கொள்வது சவாலாக இருந்தது. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக நாங்கள் சிறப்பாக செயல்பட தவறிவிட்டோம்” என்றார். 

 

முன்னதாக ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டனும், வீரருமான ஆரோன் பின்ச், சுழல் பந்துகளுக்கு எதிரான மனநிலையை ஆஸ்திரேலிய அணி வீரர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். அதிரடியான ஆட்டை வெளிப்படுத்தாதே இதற்கு காரணம் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.