உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதிய இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 469 ரன்களை குவிக்க இந்திய அணியோ முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 296 ரன்களை மட்டுமே எடுத்தது.
இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்களை இழந்து 270 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்து இந்திய அணிக்கு 444 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ஆனால் இந்திய அணி கடைசி இன்னிங்ஸில் 234 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஆஸ்திரேலிய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது.
இந்நிலையில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி குறித்து ட்விட்டரில் தனது கருத்தினை பதிவு செய்துள்ளார். அதில், “உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு வாழ்த்துகள். போட்டியை தங்களுக்கு சாதகமாக அமைக்க ஆட்டத்தின் முதல் நாளிலேயே ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ட்ராவிஸ் ஹெட் இணைந்து வலுவான அடித்தளத்தை அமைத்தனர். இந்திய அணி ஆட்டத்தில் நிலைத்திருக்க முதல் இன்னிங்ஸில் பெரிய அளவில் பேட்டிங் செய்திருக்க வேண்டும். ஆனால் அவர்களால் முடியவில்லை. இந்திய அணிக்கு சில நல்ல தருணங்கள் இருந்தன. அவர்கள் அதைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பவுலரான அஸ்வினை பிளேயிங் லெவனில் ஏன் எடுக்கவில்லை? இதை மட்டும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
நான் போட்டிக்கு முன்பே சொல்லி இருந்ததன் படி, திறமையான சுழற்பந்து வீச்சாளர்கள் எப்போதும் டர்னிங் டிராக்குகளை நம்பியிருக்க மாட்டார்கள். அவர்கள் காற்றில் பந்தை திருப்பியும், ஆடுகளத்தின் மேற்பரப்பிலிருந்து பவுன்சரை எடுத்து வந்து மாறுபட்ட பந்துகளை வீசுவார்கள். ஆஸ்திரேலிய அணியின் டாப் 8 பேட்ஸ்மேன்களில் 5 பேர் இடதுகை வீரர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.