மனிதர்களின் கால்த்தடம் பதிந்திருக்காத உலகின் பல அபாயமான பகுதிகளில் பயணித்து, உயிர் பிழைத்திருக்கும் வித்தைகளை செய்து காட்டுவார் பியர் கிரில்ஸ். அமெரிக்க ராணுவத்தில் பிரத்யேகப் பயிற்சிகளை மேற்கொண்டவரான பியர் கிரில்ஸ், டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் மேன் வெர்ஸஸ் வைல்ட் நிகழ்ச்சியின் மூலம் இந்தியாவிலும் குறிப்பாக தமிழகத்திலும் பிரபலமானவர்.
இவர் தற்போது ரன்னிங் வைல்ட் வித் பியர் கிரில்ஸ் (Running wild with Bear Grylls) என்ற புதிய நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். அதில் உலகின் புகழ்பெற்ற பிரபலங்களைத் தன்னோடு கடினமான பகுதிகளுக்கு அழைத்துச்செல்லும் பியர் கிரில்ஸ், அவர்களது உயிர் பிழைத்திருக்கும் தன்மை, வாழும் ஆர்வம், ஸ்திரத் தன்மை உள்ளிட்ட பல விஷயங்கலை ஆராய்கிறார். இதுவரை பல்வேறு பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளனர்.
இந்நிலையில், டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் ஃபெடரர், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதாக தகவல்கள் வெளியாகின. அதை உறுதிசெய்யும் விதமாக வெளியான ப்ரோமோ வீடியோவில், பியர் கிரில்ஸ் உடன் ஃபெடரர் பனிப்பிரதேசப் பகுதியில் மலைப்பாங்கான பாதைகளில் பயணம் செய்கிறார். பனியில் உறைந்துபோன மீன் ஒன்றின் கண்ணை பியர் கிரில்ஸ் வெட்டி எடுத்துத் தர, அதனை வாயில் போட்டு மென்று தின்கிறார் ஃபெடரர். மிகுந்த ஆர்வமும், பயமும் கலந்த மனநிலையில் இந்த நிகழ்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டதாகக் கூறும் ஃபெடரர், புதுவித அனுபவத்திற்காக காத்திருப்பதாக கூறுகிறார்.
இந்த நிகழ்ச்சியின் பிரத்யேக தொகுப்பு வருகிற செப்டம்பர் 20-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோ இதோ...