ஐபிஎல் தொடரில் தற்போது 8 அணிகள் பங்கேற்றுவரும் நிலையில், அடுத்த ஐபிஎல் தொடரிலிருந்து அகமதாபாத், லக்னோ என இரண்டு புதிய அணிகள் கூடுதலாகப் பங்கேற்க உள்ளது. இதில் லக்னோ அணியை ஆர்பி-சஞ்சீவ் கோயங்கா குழுமமும், அகமதாபாத் அணியை சிவிசி கேப்பிடல்சும் ஏலம் எடுத்துள்ளனர்.
இந்தநிலையில் சிவிசி கேப்பிடல், அகமதாபாத் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை ஏற்குமாறு ரவி சாஸ்திரியை அணுகியுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் பந்து வீச்சு பயிற்சியாளர் பதவிக்காக பரத் அருணையும், பீல்டிங் பயிற்சியாளர் பதவிக்காக ஸ்ரீதரையும் சிவிசி கேப்பிடல் அணுகியுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல் ரவி சாஸ்திரியும் ஐபிஎல் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை ஏற்க விரும்புவதாகவும், அகமதாபாத் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை ஏற்பது குறித்து அவர் தற்போது நடைபெற்று வரும் 20 ஓவர் உலகக்கோப்பை தொடருக்குப் பின்னர் முடிவு செய்வார் எனக் கூறப்படுகிறது.
இந்திய அணியின் பயிற்சியாளர்கள் பொறுப்பில் இருக்கும் ரவி சாஸ்திரி, ஸ்ரீதர், பரத் அருண் ஆகியோரின் பதவிக்காலம் தற்போது நடைபெற்று வரும் 20 ஓவர் உலகக்கோப்பைக்குத் தொடரோடு முடிவுக்கு வரவுள்ளது. இதனையொட்டி ஏற்கனவே ராகுல் டிராவிட், இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.