உலகக் கோப்பை கிரிக்கெட் 2023ன், 12வது லீக் ஆட்டம் 14 ஆம் தேதி குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி இதுவரை பாகிஸ்தானிடம் தோற்றதே கிடையாது எனும் வரலாற்றைத் தக்க வைத்தபோதிலும், இந்தப் போட்டியில் பல சர்ச்சைகள் எழுந்துள்ளன. குறிப்பாக பாகிஸ்தான் அணியினர் பேட்டிங்கில் இருந்தபோது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் ‘ஜெய் ஸ்ரீராம்... ஜெய் ஸ்ரீராம்...’ எனத் தொடர்ந்து கோஷம் எழுப்பினர். அதேபோல், பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் அவுட் ஆகி பெவிலியன் திரும்பியபோது அங்கிருந்த இந்திய ரசிகர்கள் மீண்டும், ‘ஜெய் ஸ்ரீராம்... ஜெய் ஸ்ரீராம்...’ எனக் கோஷம் எழுப்பினர். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பல்வேறு தரப்பினரும், விளையாட்டை விளையாட்டாகப் பார்க்க வேண்டும். எனத் தங்களது கண்டனங்களைத் தெரிவித்தனர்.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் புகார் அளித்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில், “பாகிஸ்தான் பத்திரிகையாளர்களுக்கான விசா தாமதம் மற்றும் 2023 உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் ரசிகர்களுக்கு விசா கொள்கை இல்லாதது குறித்தும் ஐசிசியிடம் மீண்டும் ஒருமுறை எங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளோம். 14 அக்டோபர் 2023 அன்று நடைபெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டியின் போது பாகிஸ்தான் அணியை குறிவைத்து நடந்து கொண்டது தொடர்பாகவும் புகார் அளித்துள்ளோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.