கடந்த 2008ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டி தொடங்கப்பட்டது. தொடர்ந்து இந்த வருடத்துடன் 12 சீசனை எட்டியுள்ளது ஐபிஎல். இதில் ஐந்து முறை பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றும், மூன்று முறை இறுதி போட்டிக்கு சென்றும் ஒருமுறைக்கூட டைட்டிலை வெல்லாமல் தவித்து வருகிறது அனைத்து ஸ்டார் வீரர்களையும் கொண்டிருக்கும் ஆர்சிபி. கடந்த மூன்று வருடங்களாக மிகவும் மோசமான நிலையிலேயெ விராட் கோலியின் தலைமையில் இருக்கும் ஆர்சிபி அணி உள்ளது.
அணியின் நிலைமையை மாற்ற பேட்டிங் கோச்சாக இருந்த கேரி கிறிஸ்டன் மற்றும் பவுலிங் கோச்சாக இருந்த ஆஷிஷ் நெஹ்ரா ஆகியோர் நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக தலைமைப் பயிற்சியாளராக சைமன் கடிச்சும் அணி இயக்குனராக மைக் ஹெஸ்ஸனும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.
அடுத்த வருடம் நடைபெறும் ஐபிஎல்13 சீசனை முன்னிட்டு வீரா்கள் பரிமாற்றம் சமீபத்தில் முடிவடைந்தது. ஐபிஎல் அணி நிா்வாகங்கள் தங்களுக்கு தேவையான வீரா்களைப் பரிமாறிக் கொண்டன. மேலும் அணியிலிருந்து விடுவிக்க வேண்டிய வீரர்களின் பட்டியலையும் அணிகள் வெளியிட்டுள்ளன. ஆர்சிபி அணியில் டி வில்லியர்ஸ், மொயீன் அலி என இரு வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே தற்போது உள்ளார்கள்.
இந்நிலையில் மொயீன் அலி கூறுகையில், “ஐபிஎல் போட்டியில் நல்ல ஆரம்பம் கிடைக்கவேண்டும். நாங்கள் எப்போதும் நிதானமாகவே வெற்றி பெற ஆரம்பிக்கிறோம். பெங்களூரில் விளையாடும்போது துணிச்சலுடன் விளையாடவேண்டும். அது நல்ல ஆடுகளம். பவுண்டரிகளின் எல்லைக்கோடு சிறிய அளவில் இருக்கும். எப்போதும் ஐபிஎல் ஆட்டங்களின் வெற்றிகளுக்காக விராட் கோலி, டி வில்லியர்ஸையே நம்பியிருக்கக் கூடாது. நானும் இதர வீரர்களும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு நன்கு விளையாடவேண்டும் என்று கூறியுள்ளார்.